நெல்லையிலும் தூய்மை பணி + அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த கவர்னர்!

5 (100%) 1 vote

கடந்த நவம்பரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கோவை சென்ற கவர்னர் பன்வாரிலால், பின்னர் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்த நாளும் தனது ஆய்வைத் தொடங்கிய அவர், குடியிருப்பு பகுதிகளில் சுகாதார பணிகள் எவ்வாறு உள்ளது என்று ஆய்வு மேற்கொண்டார். தனது ஆய்வுகள் தொடரும் என்றும் அவர் கூறினார். கவர்னரின் இந்த ஆய்வு மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது எனக் கூறி பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்த நிலையில் நேற்று நெல்லை ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டு, பாளை., பகுதிகளில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் 35 நிமிடம் ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று (டிசம்பர் 6) மதியம் நடைபெற்ற 25வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாணவர்களுக்குப் பட்டம் வழங்கினார். அதன்பின்னர், திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்திற்கு திடீர் ‘விசிட்’ அடித்த ஆளுநர், அங்குள்ள கடைகளில் ஆய்வு செய்தார்.

பின்னர், நெல்லை பஸ்ஸ்டாண்டில் தூய்மை பாரதம் இயக்கத்தின் துப்புரவுப் பணிகளை கவர்னர் துவக்கி வைத்தார். பாளை., யில் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்தெடுக்கும் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேற்று மதியம் 3.10 மணிக்கு நெல்லை ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டிற்கு வந்தார். கவர்னருடன், கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி கமிஷனர் (பொ) நாராயணன் நாயர், டி.ஆர்.ஓ., முத்துராமலிங்கம், சுகாதார அதிகாரி டாக்டர் பொற்செல்வன் மற்றும் அதிகாரிகள் வந்தனர்.

பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் தேங்கியிருந்த குப்பைகளை கவர்னர் கையுறை அணிந்து கொண்டு எடுத்து அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட்டார். தொடர்ந்து பஸ்ஸ்டாண்ட் வளாகத்திலுள்ள கடைகளுக்கு சென்ற கவர்னர் அங்கிருந்த கடைக்காரர்களிடம் அறிவுரை வழங்கினார். ‘பஸ்ஸ்டாண்டை சுத்தமாக வைத்திருக்கவேண்டும். குப்பைகளை ஆங்காங்கே போடக்கூடாது. குப்பைத் தொட்டியில் குப்பைகளை போடவேண்டும் என கடைக்காரர்களுக்கு ஆங்கிலத்தில் கூறினார். அதை கவர்னரின் செயலாளர் தமிழில் மொழிபெயர்த்து கடைக்காரர்களிடம் விளக்கினார்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டில் தேங்கியிருந்த குப்பைகளை துடைப்பத்தை வைத்து அகற்றினார். நெல்லை மாநகராட்சி சார்பில் தூய்மை பாரத இயக்கம் குறித்து அச்சிடப்பட்டிருந்த விழிப்புணர்வு நோட்டீசை, பஸ்ஸ்டாண்டில் நின்றிருந்த பயணிகளிடம் கவர்னர் வழங்கினார். திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழிக்கக் கூடாது என்பதையும் அறிவுறுத்தினார். அப்போது அங்கிருந்த மாணவி ஒருவரை அழைத்த கவர்னர், தூய்மை இந்தியா துண்டு பிரசுரத்தை மாணவியிடம் வழங்கி அதை வாசிக்க அறிவுறுத்தினார். அந்த மாணவி வாசித்தது கூடியிருந்தவர்களுக்கு சரிவர கேட்கவில்லை. இதையடுத்து அந்த மாணவியை இடைமறித்த கவர்கனர், பஸ்ஸ்டாண்ட்டில் பயணிகள் உட்காருவதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கை மீது ஏறி சத்தமாக படிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து அதில் ஏறிய மாணவி தூய்மை இந்தியா துண்டு விழிப்புணர்வு நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்த வாசகங்களை சத்தம் போட்டு வாசித்தார். இதையடுத்து அந்த மாணவிக்கு கவர்னர் தமிழில் ‘நன்றி’ எனக் கூறினார். 3.10 மணிக்கு துவங்கிய பஸ்ஸ்டாண்ட் ஆய்வுப்பணி 3.30 மணிக்கு முடிவடைந்தது.

இதையடுத்து பாளை., பெருமாள் மேலரதவீதிக்கு சென்ற கவர்னர், அங்கு வீடு வீடாக சென்றார். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை திட்டத்தில் கீழ் பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்தெடுக்கும் முறை குறித்த விழிப்புணர்வு பற்றி மக்களிடம் கேட்டறிந்தார். மேலும் ஒவ்வொரு வீடுகள் முன்பும் பிளாஸ்டிக் குப்பைகளை மக்கள் தனியாக பிரித்து வைத்திருந்தனர். ‘பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்கவேண்டும். பிளாஸ்டிக் கேடு விளைவிக்கும் என்பதையும் மக்களிடம் கவர்னர் அறிவுறுத்தினார். ஆய்வு செய்த வீடுகளில் அவர்களின் பெயர்களை கேட்டறிந்த கவர்னர், ‘வீட்டில் வயதானவர்களான நீங்கள், பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்கவேண்டும் எனவும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கேடு குறித்து உங்கள் குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். வாரத்தில் 2 மணி நேரம் ஒதுக்கி, ‘பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பிரசாரம் செய்யவேண்டும் எனவும் கவர்னர் கேட்டுக் கொண்டார்.

மேலும் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தக் கூடாது என்பது குறித்தும் அறிவுரை வழங்கினார். 6 வீடுகளுக்கு சென்ற கவர்னர், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் வழங்கவேண்டும் எனவும், குப்பைகளை வெளியில் வீசாமல் குப்பைத் தொட்டி மற்றும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் வழங்கவேண்டும் எனவும் பொதுமக்களிடம் கவர்னர் அறிவுறுத்தினார். பாளை., யில் கவர்னர் 15 நிமிடம் ஆய்வு செய்தார்.கலெக்டர், கமிஷனருடன் ஆலோசனை பஸ்ஸ்டாண்டில் ஆய்வு செய்த கவர்னர், அங்கிருந்த கலெக்டர், கமிஷனர், சுகாதார அதிகாரி ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். நீங்கள் தான் இங்கு இருக்கிறீர்கள். பஸ்ஸ்டாண்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். குப்பைகளை கண்ட இடங்களில் போடாமல் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் மற்றும் எச்சரிக்கை செய்யவேண்டும். பஸ்ஸ்டாண்ட் தூய்மையாக உள்ளதா என்பதை அவ்வப்போது கண்காணிக்கவேண்டும் என கமிஷனிடம் கூறினார். துப்புரவு பணியாளர்களிடமும் தூய்மைப்பணி குறித்து கவர்னர் பேசினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*