சம்பவம்

பட்டாசு வெடித்ததில் 4 ஜவுளிக்கடைகளில் பயங்கர தீ விபத்து

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தத்தில் பள்ளிவாசல் அருகே உள்ள கட்டிடத்தின் முதல் தளத்தில் 4 ஜவுளிக்கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், பா.ஜனதா தொண்டர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். அப்போது பா.ஜனதா தொண்டர்கள் பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. அதில் ஒரு பட்டாசு பறந்து சென்று ஜவுளிக்கடைகளின் பின்பகுதியில் கீற்றால் வேயப்பட்ட மேற்கூரையில் விழுந்தது. இதில் அந்த கொட்டகை தீப்பற்றி எரிய ஆரம்பித்ததுடன் ஜவுளிக்கடைகளுக்கும் தீ தாவியது. ஜவுளிக்கடைகளில் தீ பற்றி எரிவதை கண்டதும் அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீயை அணைக்க முடியவில்லை.

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், தீயணைப்பு வாகனங்கள் வர தாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் துவரங்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 4 ஜவுளிக்கடைகளிலும் வியாபாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த துணிகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. இதன் சேத மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி புத்தாநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, திருச்சி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியினர் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே மாவட்ட தலைவர் தங்க.ராஜைய்யன் தலைமையில் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினர். பின்னர் அந்த வழியாக வந்த பொதுமக்களுக்கும், பஸ்சில் சென்ற பயணிகளுக்கும் இனிப்பு வழங்கினர். தொண்டர் ஒருவர், பிரதமர் நரேந்திரமோடியின் முகமூடியை அணிந்து உற்சாக நடனம் ஆடினார்.

அப்போது அங்கிருந்த மகளிர் அணியினர் வீதியில் உற்சாக மிகுதியால் நடனம் ஆடினர். தொடர்ந்து வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர். சில இடங்களில் பாரதீய ஜனதா கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் செல்வகுமார், கோட்ட பொறுப்பாளர் கண்ணன், பொது செயலாளர்கள் பாலன், மோகன், காளஸ்வரன் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Comment here