அரசியல்

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் கைது செய்திருப்பது மற்றொரு நாடகம்

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக புகுந்து துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தினர். உலகையே அதிர வைத்த இந்த தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டது பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத். மும்பை தாக்குதலைத் தொடர்ந்து அவனை சர்வதேச பயங்கரவாதி என அமெரிக்கா அறிவித்தது. அவனை பாகிஸ்தான் கைது செய்வதும் விடுதலை செய்வதும் தொடர் கதையாக இருக்கிறது. ஆனால் ஸ்திரமான நடவடிக்கை எதுவும் பாகிஸ்தான் எடுக்கவில்லை.

பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற இம்ரான் கான் முதல்முறையாக அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் மீண்டும் ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டுள்ளான். பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து டிரம்ப் நெருக்கடியை கொடுக்கலாம் என்ற நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கைது நடவடிக்கை தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ராவீஸ் குமார் பேசுகையில், நீண்ட நாட்களாக கைதும், விடுதலையும் தொடர்ந்துதான் வருகிறது. ஆனால் தொடர்ந்து ஹபீஸ் சயீத் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். பாகிஸ்தான் கைது செய்தது என்பது ஒருநாடகம். இதுபோன்ற நாடகத்தை எனக்கு தெரிந்து ஒரு 8 முறையாவது மேற்கொண்டிருக்கலாம். இப்போது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதுதான் கேள்வி எனக் கூறியுள்ளார்.

Comment here