அரசியல்புதுச்சேரி

பாஜக எச்சரிக்கை – நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்காவிட்டால் அரசு கடும் விளைவுகளை சந்திக்கும்

Rate this post

புதுவை மாநில பாரதிய ஜனதா தலைவர் சாமிநாதன் இன்று நிரூபர்களிடம் கூறியதாவது:-

நாட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்தது. இந்த 50 ஆண்டு காலத்தில் நாராயணசாமி எம்.பி.யாக, மத்திய மந்திரியாக, காங்கிரஸ் கட்சியில் உயர்ந்த பொறுப்புகளில் எல்லாம் இருந்தார்.

இந்த சமயத்தில் புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு புதுவை சட்டமன்றத்தில் 13 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், மாநில அந்தஸ்து பெற நாராயணசாமி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்காததற்கு நாராயணசாமி தான் காரணம். இதற்கு அவரே பொறுப்பு ஏற்க வேண்டும்.

 

புதுவையில் தனி கணக்கை தொடங்குவதற்கு நாராயணசாமியும், காங்கிரஸ் கட்சியுமே காரணமாக இருந்துள்ளது. இதனால் புதுவைக்கான மானியம் படிப்படியாக குறைந்து 30 சதவீதமாக ஆகி விட்டது.

தற்போது புதுவை ரூ.7 ஆயிரம் கோடி கடனிலும், அதற்கு ரூ. 200 கோடி வட்டி கட்டும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.

மாநில மக்களை ஏமாற்றுவதற்காக நாராயணசாமி எம்.எல்.ஏ.க்களை அழைத்து கொண்டு டெல்லி சென்று வந்துள்ளார். பிரதமர் நாட்டிலேயே இல்லை என தெரிந்த பிறகும் டெல்லி செல்ல வேண்டிய அவசியம் என்ன? மேலும் ஜனாதிபதியை ஏன் சந்திக்க வில்லை? தனது பதவிக்கு ஆபத்து என்பதால் நாராயணசாமி டெல்லிக்கு சென்று வந்துள்ளார்.

கவர்னர் கிரண்பேடியை தொடர்ந்து நாராயணசாமி விமர்சித்து வருகிறார். ஆனால், தேசிய அளவில் வெளிவரும் பத்திரிகை கவர்னர் கிரண்பேடியை சிறந்த நிர்வாகியாக தேர்ந்து எடுத்துள்ளது. இது, புதுவைக்கு கிடைத்த பெருமையாகும்.

சோனியா காந்தியை விட நிர்வாக திறமையில் பல மடங்கு உயர்ந்தவர் கவர்னர் கிரண்பேடி என அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ளது. நிர்வாக திறமையே இல்லாத நாராயணசாமி வேண்டும் என்றே கவர்னர் கிரண்பேடியை விமர்சித்து வருகிறார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, புதுவையில் பல முறைகேடு சம்பவங்கள் நடந்தது. பாண்லே மூலமாக பண பரிமாற்றம் நடந்துள்ளது. இது தொடர்பாக பல முறை புகார் செய்தோம்.

ஆனால், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கை காங்கிரஸ் கட்சிதான் தொடர்ந்தது. சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ததும் காங்கிரஸ் கட்சிதான். ஆனால், கோர்ட்டு தீர்ப்பை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.

சட்டமன்றம் எப்போது கூடினாலும் நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு செல்வோம். சபாநாயகர் இந்த முறை சபைக்குள் அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். இல்லாத பட்சத்தில் சபாநாயகரும், அரசும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

மாநில அந்தஸ்து தொடர்பாக மக்கள் கருத்தை அறிய வேண்டும். மக்கள் கருத்து எதுவாக இருந்தாலும் அதனை பாரதீய ஜனதா வரவேற்கும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

Comment here