தமிழகம்

பாரம்பரிய விதைகளை தேடும் விவசாயிகள்: கைகொடுப்பார்களா அதிகாரிகள்

ஆடிப்பட்ட விதைப்புக்கு ஆண்டிபட்டி பகுதி விவசாயிகள் பாரம்பரிய விதைகளை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு விதைகள்
தட்டுப்பாடின்றி கிடைக்க வேளாண், தோட்டக்கலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டிபட்டி பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் மானாவாரி, பல நுாறு ஏக்கர் நிலங்களில் இறவை பாசன விவசாயம் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் விவசாயிகள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையை கணக்கில் கொண்டு தங்கள் நிலங்களை முன்கூட்டியே பக்குவப்படுத்தி, ஆடி மாத விதைப்புக்கு தயார் நிலையில் வைத்துள்ளனர்.
மானாவாரி, இறவை பாசன நிலங்களில் நெல்,சோளம், கேழ்வரகு, சாமை, உளுந்து, நிலக்கடலை, துவரை, வரகு போன்ற பயிர்களை விதைப்பு செய்வர்.
விவசாயிகள் பலரும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் கொண்ட குண்டு சுரைக்காய், பழையகத்தரி, பழைய கடலை விதை, கட்ட மொச்சை, நாட்டு தட்டைப்பயறு போன்றவற்றின் விதைகள் எந்தெந்த பகுதிகளில் கிடைக்கும் என்று தேடி வருகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: பாரம்பரிய பயிர் வகைகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும். வறட்சியை தாங்கி வளர்வதுடன், மகசூல் அதிகம் கிடைக்கும். சுவையும் அதிகம் இருக்கும். இதற்கான விதைகள்
வருஷநாடு, கூடலுார், ஏத்தக்கோயில், எழுமலை, கல்லுப்பட்டி உட்பல சில பகுதிகளில் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. இத்தகைய விதைகள் இருப்பில் வைத்திருக்கும் விவசாயிகள் மற்றும் கடைகளை தேடிச்செல்லும் நிலை உள்ளது. பாரம்பரிய விதைகள் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கவும், அதன் விளைச்சலை ஊக்கப்படுத்தவும் தோட்டக்கலைத்துறை, வேளாண்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Comment here