உலகம்

பாறைகளின் வயது ( கற்களும் கதை சொல்லுதே)

பாவைகளிடம் வயதைக் கேட்கக்கூடாதாம், கேட்டவர்கள் சொன்னார்கள். ஆனால் பாறைகளிடம் அவற்றின் வயதை தாராளமாகக் கேட்கலாம். சொல்லாமல் சொல்லிவிடும்….வாய் பேச முடியாதல்லவா. பூமி தன் வரலாற்றை எழுதி வைத்திருக்கும் புத்தகத்தின் பக்கங்கள்தான் பாறைகள். ROCKS ARE THE PAGES OF EARTH’S HISTORY. அவற்றைப் படிக்க ‘புவிகாலவியல்’ ( GEOCHRONOLOGY) மொழி அறிந்திருக்க வேண்டும்.

ஒரு இடத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட வகையைச் சேர்ந்த பாறைகள் இருப்பின், அவற்றிற்கு இடையே உள்ள உறவை வைத்து , முதியது எது, இளையது எது என்று சொல்லி விடலாம்… படம் ஒன்றில் இளஞ்சிவப்பு பாறையை கரிய பாறை ஒன்று வெட்டிச் செல்கிறது. வெட்டப்படுவது முதியது, வெட்டுவது இளையது, அல்லவா. இரண்டாம் படத்தில் மடிப்பிற்குள்ளான உருமாறிய பாறையின் மேல் படிவப் பாறைகள் படுக்கைகள்போல் அழகாக அமர்ந்திருக்கின்றன. இவற்றுள் மேலே உள்ளவை இளையவை என்று முடிவுகட்டலாம். மூன்றாம் படத்தில் மூன்றுவகைப் பாறைகள். இவை மூன்றில் கரிய பாறை இளையது, வெண்மை நிறப் பாறை இடைப்பட்டது. .

சரி, பாறைகளின் சரியான வயதை எப்படி அறிவது..?

ஒரு பாறை உருவான உடனேயே அதில் ஒரு கடிகாரம் செயல்படத துவங்கி விடுகிறது. இந்த கடிகாரத்திற்கு “ஓரகத்தனிம கடிகாரம்” (ISOTOPIC CLOCK) என்று பெயர் வைக்கலாம். தனிமங்களில் ஒரே அணுஎண் ஆனால் வெவ்வேறு அணுநிறை கொண்ட தனிமங்கள் “ஓரகத்தனிமங்கள்’ (ISOTOPES) என்று அழைக்கப்படுகின்றன. அணுஎண் என்பது அந்தத் தனிமத்தின் அணுவில் உள்ள ப்ரோடான்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். அணுநிறை என்பது ப்ரோடான் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக கரிமம் ( C ) தனிமத்தின் அணுஎண் 6, அணுநிறை 12…..ஆனால் , அணுநிறை 13,14 உள்ள கரிமம் தனிமங்களும் உள்ளன. ஆக 12C, 13C,14C இவையெல்லாம் கரிமத்தின் ஓரகத் தனிமங்கள்.
பெரும்பாலான ஓரகத்தனிமங்கள் கதிர்வீச்சினைக் கொண்டவை (RADIOACTIVE). கதிர்வீச்சின் போது அந்தத் தனிமம் சிதைவுற்று ( RADIOACTIVE DECAY /RADIOMETRIC DECAY) வேறு தனிமமாக மாறுகிறது. எடுத்துக் காட்டாக, கரிமத்தின் ஓரகத் தனிமமான 14C கதிர்வீச்சினைக் கொண்டது. கதிர் வீச்சின் போது 14C சிதைவுற்று 18N தனிமமாக மாறுகிறது.

ஒரு மரத்திலோ, கல்லிலோ, ஃபாசிலிலோ, பானை ஓட்டிலோ துவக்கத்தில் 100 அலகு 14C இருக்கிறது என வைத்துக் கொள்வோம். 5730 ஆண்டுகளில் அது 50 அலகுகளாகக் குறைந்து விடுகிறது. மீதமுள்ள 50 அலகுகள் சிதைந்து 18N தனிமங்களாக மாறி விடுகின்றன. அடுத்த 5730 ஆண்டுகளில் 14C, 25 அலகுகளாக குறைந்து வடும். அடுத்த 5730 ஆண்டுகளில் 12.5 அலகுகளாகக் குறைந்துவிடும். இதை அரை ஆயுட்காலம் (HALF LIFE PERIOD) என்று சொல்வர். கரிமத்தின் அரை ஆயுட்காலம் 5730 ஆண்டுகள். ஒவ்வொரு ஓரகத்தனிமத்திற்கும் அரை ஆயுட்காலம் கணிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் அகழ்வாய்வின் போது கிடைக்கும் பானை ஓடுகளில் உள்ள 14C அளவு 18N அளவு, இவற்றிற்கு இடையே உள்ள விகிதாச்சாரம் இவற்றைக் கொண்டு அந்தப் பானை எப்போது செய்யப்பட்டது என்பதை கணித்துவிடலாம். ( கீழடியில் கண்டுபிடித்தது போல) 14C யின் அரை ஆயுட் காலம் மிகவும் குறைவு என்பதால், சுமார் 50,000 அல்லது 60,000 ஆண்டுகள் வரை கணிக்க மட்டுமே இது உதவும்.பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பாறைகளின் வயதை கணிக்க இது உதவாது.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான அழற்பாறைகள் மற்றும் உருமாற்றுப் பாறைகளின் வயதை கணிக்க Ur- Pb ஓரகத்தனிம முறை பயன்படுகிறது. பவளப் பாறைகள், பாசில் எலும்புகள் வயதை கணிக்க Ur –Th முறை பயன்படுகிறது. இது போன்று இன்னும் பல்வேறு முறைகள் நடைமுறையில் உள்ளன. நமது தேவையைப் பொருத்தும் ஓரகத் தனிமத்தின் அரை ஆயுட்காலத்தைப் பொருத்தும் நமக்கு வேண்டிய முறையை நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.

( தனிமங்களின் முன்னே உள்ள எண்கள் சூப்பர் ஸ்கிரிப்ட் ஆக வர வேண்டும்)

Comment here