உலகம்

பிரபஞ்சம் –

பிரபஞ்சம் எல்லையற்றது. அது தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அது தொடர்ந்து இயங்கிக் கொண்டும் இருக்கிறது. பிரபஞ்சம் எப்போது தோன்றியது என்கிற ஆய்வும் அது போலவே தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. தற்போது வரைக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பிரபஞ்சத்தின் தோற்றம் என்பது சுமார் 2000 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் கடுகு போன்ற அளவில் நமது சூரியக் குடும்பம் இருக்கிறது. சூரியன் ஒரு நட்சத்திரமாகும். நமது சூரியக்குடும்பம் இடம் பெற்றுள்ள பால்வழி மண்டலத்தில் (கேலக்சி) 100 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன. பால்வழி மண்டலம் போல் 10000 கோடி அண்டங்களைக் கொண்டது தான் பிரபஞ்சமாகும். ஒளியின் வேகத்தில் அதாவது கண் இமைக்கும் நேரத்தில் வினாடிக்கு 2.99 கிலோ மீட்டர் வேகத்தில் போனால் கூட கேல்க்சியின் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப்பக்கம் போக ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும் என்றால் பால்வழி மண்டலம் என்பது எவ்வளவு பெரியது பாருங்கள்.

சூரியக் குடும்பத்தில் 8 கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. நாம் வசிக்கும் பூமி சூரியக் குடும்பத்தில் இருக்கிறது. பூமியில் மட்டுமே உயிரினங்கள் வசிக்கின்றன. சூரியக் குடும்பத்தில் இருக்கும் மற்ற கிரகங்களிலும் துணைக் கிரகங்களிலும் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.

நாம் வாழும் பூமி ஒரு கிரகமாகும். அது சூரியனை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. சூரியனுக்கு மிக அருகில் புதன்கிரகமும், அதற்கு அடுத்து வெள்ளிக் கிரகமும் உள்ளன. சூரியனுக்கு அருகில் மூன்றாவதாக உள்ள கிரகம் பூமி ஆகும்.

விண்வெளி ஆராய்ச்சியில் பூமி போன்ற தன்மை கொண்ட கிரகங்கள் எதுவும் இருக்கின்றனவா என்று தீவிரமாகத் தேடப்படுகிறது. பால் வழி மண்டலத்தில் 5000 கோடி கிரகங்கள் இருப்பதாக நாசா விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவற்றில் சுமார் 50 கோடி கிரகங்களில் தான் அதிக வெப்பமும் இல்லை; அதிக குளிரும் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய கெப்ளர் விண்கலம் அனுப்பியப் புகைப்படங்களிலிருந்து இத்தகவல்கள் அறியப்பட்டுள்ளன. கெப்ளர் விண்கலம் பிப்ரவரி 2011 வரை அனுப்பிய லட்சக்கணக்கானப் புகைப்படங்களைக் கொண்டு ஆராய்ந்ததில் 1235 கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கக் கூடும் என்கின்றனர். ஆனால் உயிர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனவா என்பது இதுவரை தெரியவில்லை. ஆகவே நம் பூமியில் மட்டுமே உயிர்கள் வாழ்கின்றன.

விண்வெளி

பூமியைச் சுற்றி வாயுக்களால் ஆன காற்றுப்படலம் இருக்கிறது. இது பூமியைச் சுற்றி ஒரு உறை போல் இருக்கிறது. இதனை வளிமண்டலம் என்கிறோம். இந்த வளி மண்டலம் உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கிறது. இது ஒரு கேடயமாக இருந்து பூமியைப் பாதுகாக்கிறது. வளி மண்டலம் இல்லை என்றால் உயிர் வாழ்க்கை என்பது இல்லாமல் போய்விடும்.

காற்றுக் கலவை பூமியை ஒட்டி அடர்த்தியாக இருக்கும். மேலே செல்லச் செல்ல அடர்த்தி என்பது குறைந்து கொண்டே செல்லும். காற்று முழுவதும் மறைந்து முற்றிலும் வெற்றிடமாகக் காணப்படும் இடமே விண்வெளியாகும். காற்று மண்டலத்திற்கு அடுத்து இருப்பது விண்வெளி. இது 200 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து துவங்கி விடுகிறது.

விமானங்கள் பூமியிலிருந்து 20 கிலோ மீட்டர் உயரம் வரை பறக்கின்றன. எரி நட்சத்திரம் மற்றும் விண் கற்கள் பூமியின் வளி மண்டலத்தில் நுழைந்தால் அவை 80 கிலோ மீட்டர் உயரத்தில் எரிந்து விடுகின்றன. செயற்கைக் கோள்கள் பூமியிலிருந்து குறைந்தது 200 கிலோ மீட்டர் உயரத்திற்கு மேல் சுற்றுகின்றன.

விண்வெளியில் காற்று இல்லை என்பதால் வெற்றிடமாக இருக்கிறது. ஆனால் அது முழுக்க வெற்றிடத்தால் ஆனது என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் அதில் நட்சத்திரங்கள், கிரகங்கள், விண் கற்கள், தூசுகள் போன்றவை இருக்கின்றன. விண்வெளி வெற்றிடமானது என்பதால் அங்கு ஒலி அலைகள் பயணம் செய்யாது. அங்கு பேசினால் காது கேட்காது, வாசனையை உணர முடியாது.

விண்வெளியில் காற்று இல்லாததால் ஒளிச்சிதறல் ஏற்படுவதில்லை. இதனால் விண்வெளி இருண்டு போய் இருக்கும். இதில் நட்சத்திரங்கள் சிதறிப் புள்ளிகளாகத் தெரிகின்றன. விண்வெளியில் ஈர்ப்பு விசை கிடையாது. இதனால் எடையற்ற தன்மை நிலவுகிறது. ஆகவே அங்கு அனைத்தும் மிதக்கும். அங்கு மனிதர்கள் வாழ்வது என்பது சிரமம். அங்கு ஆபத்தான பல கதிரியக்கங்கள் நடக்கின்றன. இதனை எதிர்கொள்ள மனிதன் விண்வெளி உடையை அணிய வேண்டும். அங்கு மனிதன் விண்கலத்தில் தான் செல்ல முடியும். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விண்வெளி நிலையத்திலேயே வாழ முடியும்.

Comment here