பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 91.1 ஆக பதிவாகி உள்ளது.

Rate this post

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு வெளியானது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 1 சதவீதம் குறைந்துள்ளது.

பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 1–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6–ந் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 66,934 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண்கள் சரி பார்க்கப்பட்ட பின், தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

இதையொட்டி, சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் பற்றி விவரங்களை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், 91.1% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசிய போது, “தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு வாழ்த்துகள். அதேநேரத்தில் மதிப்பெண் குறைந்த காரணத்துக்காகவோ அல்லது தேர்வில் தோல்வி அடைந்த காரணத்துக்காகவோ சில மாணவர்கள் தவறான முடிவுகள் மேற்கொள்வதைத் தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் மனச்சோர்வுடன் காணப்படும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பள்ளி அளவில் தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு கவுன்சலிங் அளிப்பது தொடர்பாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களும், பெற்றோரும் ஆலோசனை பெறும் வகையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ஹெல்ப்லைன் வசதி கொண்ட உடனடி தகவல் மையம் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் செயல்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட மாணவர்களோ, அவர்களின் பெற்றோரோ இந்த மையத்தை 14417 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகுந்த ஆலோசனைகள் பெறலாம். இதற்கென சிறப்பு பயிற்சி பெற்ற உளவியல் நிபுணர்கள் ஆலோசனை வழங்குவர்.

பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருந்து மனச்சோர்வுடன் இருக்கும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்து அவர்களை அரவணைக்க வேண்டியது அவசியம். அதேபோல், தங்களுடன் படிக்கும் மாணவர்களில் யாரா வது மதிப்பெண் குறையும் என்ற மனச்சோர்வில் இருந்தால் அவர்களுக்கு மற்ற மாணவர்கள் தன்னம்பிக்கையூட்டி மனச்சோர்வில் இருந்து வெளிக்கொண்டுவர வேண்டும்” என்றார்.

அதன் பின் 9.26 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகின. மொத்தமாக 91.1 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளர். மாணவிகள் 94.1 சதவீதமும் மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல மாணவியர் மாணவர்களைவிட 6.4 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 1,907.

2574 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 238. சென்ற ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இந்தாண்டு தேர்வில் 231 பேர் 1180 அதிகமாக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

மாவட்ட வாரியாக 97.05 சதவீதம் தேர்ச்சி பெற்று விருது நகர் முதல் இடத்தில் உள்ளது.  மேலும் சென்னையில் 93.09 சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகி உள்ளது. தேர்வு எழுதிய 2602 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 2110 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு வரும் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  வரும் 21-ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியரிடமோ அல்லது இணையதளம் மூலமாகவோ பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுகள் ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கீழ்காணும் இணையதளங்ளில் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு: http://www.dge.tn.nic.in/hscresanalysis.pdf

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*