மாவட்டம்

புகார் குறித்து விசாரணை நடத்தப்படும்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மின்தடை ஏற்பட்ட போது நடந்தது என்ன? டீன் வனிதா விளக்கம்

மதுரை,

மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் வனிதா கூறியதாவது-

மதுரையில் மழை பெய்தபோது பெரிய ஆஸ்பத்திரியில் மின்தடை ஏற்பட்டது உண்மை தான். இரவு 6.20 மணியில் இருந்து 7.20 மணி வரை மின்சாரம் தடைபட்டது. மின்தடை ஏற்பட்ட உடனேயே, ஜெனரேட்டர் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதில் ஏற்பட்ட சிறிய கோளாறு காரணமாக அதனை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. அண்ணாநகரில் உள்ள கட்டிடத்தில் இயங்கி வரும் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் 10 நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டிருந்தது. மின்தடை ஏற்பட்ட நேரத்திலும் அந்த வென்டிலேட்டர்கள் இயங்கி கொண்டுதான் இருந்தன. ஒவ்வொரு வென்டிலேட்டரும் மின்தடை இருந்தாலும் சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் தன்மை கொண்டவை. அதற்கு ஏற்ற வகையில் அதில் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.

எனவே மின்தடை காரணமாக நோயாளிகள் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை. உயிரிழந்த நோயாளிகளுக்கு நோயின் பாதிப்பு அதிகமாக இருந்தது. அதனால்தான் அவர்கள் இறந்தார்கள். எனினும் அவர்களின் உறவினர்கள் புகார் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும்.

3 பேர் மட்டுமே மின்சாரம் இல்லாத சமயத்தில் இறந்தனர்.

மற்றவர்கள் அடுத்தடுத்த சில மணி நேரம் கழித்துதான் இறந்தார்கள். சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சை பெறும் மற்றவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comment here