இந்தியா

புதுச்சேரியில் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை; தமிழ் இருக்கை! – நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் திமுக தலைவர் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கருணாநிதிக்கு புதுச்சேரியில் வெண்கல சிலை வைக்கப் படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கருணாநிதிக்கு மாநில அரசின் சார்பில் முழு வெண்கல உருவச்சிலை அமைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு குழு அமைத்து, அந்த குழுவின் மூலம் இடம் தேர்வு செய்து சிலை அமைக்கப்படும்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கருணாநிதியின் பெயரில் இருக்கை அமைக்கப்படும். இது உலகத்தில் இருந்து வருகின்ற தமிழர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கான நிதியை மாநில அரசு ஒதுக்கி கொடுக்கும். அதுமட்டுமின்றி காரைக்கால் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படும் மேற்படிப்பு கல்லூரி கருணாநிதியின் பெயரால் ஆரம்பிக்கப்படும் என்றார்.

Comment here