கல்வி

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

         ஏப்ரல் 29, 1891 இல், புதுவையில், கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் பாரதி தாசனார். . அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தவர். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர் என பன்முகப் பணிகளில் சிறந்து விளங்கிய இவர் பாரதியார் மீது கொண்ட ஆழ்ந்த அன்பின் காரணமாகத் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.

பெரும் புகழ் படைத்த பாவலரான ‘பாவேந்தர் பாரதிதாசன்’ ‘புரட்சிக்கவி’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றவர். “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும், பிரபலமான பாடல் வரிகளுக்கு சொந்தக்காரரும் இவரே!

தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தவர் பாரதி தாசன் அவர்கள். புதுவையில் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்து பயின்றாலும், புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களையும் முறையாகக் கற்றார். இளம் வயதிலேயே சுவைமிக்க இனிதானப் பாடல்களை, எழுதும் திறன் பெற்றிருந்தவர், பின்னர் தமிழ் பயிலும் பள்ளியில் சேர்ந்து தமிழ் மொழி பயின்றார். புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து பயின்று தனது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார். இயல்பிலேயே தமிழறிவு நிறைந்தவராகவும், விடா முயற்சி கொண்டவராகவும், இருந்ததால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்ததோடு கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்று சாதனைப் படைத்தார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரியில் தமிழாசிரியாராகப் பதவியேற்றவர், மாணவர்களின் அறிவுக் கண்களைத் திறந்து வைத்தார். அடுத்த ஆண்டிலேயே பழநி அம்மையார் என்பவரை திருமணமும் செய்து கொண்டார். நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகனையும் பெற்றெடுத்தனர் அந்தத் தம்பதியினர். அதன் பிறகு, சரசுவதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.

தமிழ்மொழி மீது அதீத பற்று கொண்டவர் , தனது மானசீகக் குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதிய பாரதிதாசன் அவர்கள் அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வில் பாடி அசத்தினார். பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தவர் பாரதியிடமிருந்து பாராட்டுகள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பையும் பெற்றார்.

அன்று முதல் பாரதிதாசன் என்ற பெயரிலேயே தனது படைப்புகளை வெளியிட்டார். சுதந்திரப் போராட்ட சூழலில், திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டனான அவர், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அவர் பல திரைப்படங்களுக்கு கதை-வசனம் எழுதியுள்ளார். 1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்தாலும் 1960இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்க வேண்டி விரும்பியவர், அதற்கான பல்வேறு படைப்புகளையும் வெளியிட்டார்.

‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’ போன்றவைகள் அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில.

, “புரட்சி கவிஞர்” என்ற பட்டத்தை பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார் வழங்கினார். அறிஞர் அண்ணாவிடமிருந்து, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டத்தையும் பெற்றார். தமிழ்நாடு மாநில அரசாங்கம், ‘பாரதிதாசன் விருதினை’ அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சிராப்பள்ளியில் ​​ ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகமும் நிறுவப்பட்டது.

1946 இல் “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.

1970 இல் அவருடைய மரணத்திற்குப் பிறகே அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாகித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.

2001 இல் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.

பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

அவர்தம் பூத உடல் மறைந்தாலும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்து நிற்கும் அவரது தலை சிறந்த படைப்புகள் மக்கள் மனதை விட்டு அகலாது என்பது திண்ணம்.

பாரதி தாசனின் பேரிகை

பேரிகை

துன்பம் பிறர்க்கு நல் இன்பம் தமக்கெனும்

துட்ட மனோபாவம்,

அன்பினை மாய்க்கும்; அறங்குலைக்கும்; புவி

ஆக்கந் தனைக் கெடுக்கும்!

வன்புக் கெலாம் அதுவே துணை யாய்விடும்

வறுமையெலாம் சேர்க்கும்!

‘இன்பம் எல்லார்க்கும்’ என்றே சொல்லிப் பேரிகை

எங்கும் முழக்கிடுவாய்!

தாமும் தமர்களும் வாழ்வதற்கே இந்தத்

தாரணி என்ற வண்ணம்,

தீமைக் கெல்லாம் துணையாகும்; இயற்கையின்

செல்வத்தையும் ஒழிக்கும்!

தேமலர்ச் சோலையும் பைம்புனல் ஓடையும்

சித்தத்திலே சேர்ப்போம்!

‘க்ஷேமம் எல்லார்க்கும்’ என்றே சொல்லிப் பேரிகை

செகம் முழக்கிடுவாய்!

நல்லவர் நாட்டினை வல்லவர் தாழ்த்திடும்

நச்சு மனப் பான்மை

தொல்புவி மேல்விழும் பேரிடியாம்; அது

தூய்மைதனைப் போக்கும்!

சொல்லிடும் நெஞ்சில் எரிமலை பூகம்பம்

சூழத் தகாது கண்டாய்!

‘செல்வங்கள் யார்க்கும்’ என்றே சொல்லிப் பேரிகை

திக்கில் முழக்கிடுவாய்!

தன்னேரிலாத தமிழ்

தன்னேரிலாத தமிழ் அன்னையே-உனை வாழ்த்தினேன்

இன்னல் தவிர்த்தாள் என்னையே தன்னேரிலாத…..

முன்னைத் தோன்றிய மக்கள் முதன்முதல் பேசிய

மொழியே! மொழியே! மொழியே!, எனவே வாழ்த்தும்,

தன்னேரிலாத…..

தென்னவன் சேரன் சோழன் செம்மையிலே வளர்த்த

திருவே! திருவே, திருவே புகழ் மிகுந்த

மன்னும் குமரிமுதல் பனிமலை மட்டும் வாழ்ந்த

வாழ்வே! வாழ்வே வாழ்வே எனவே வாழ்த்தும்,

தன்னேரிலாத…..

ஆரியர் எதிர்ப்புக்கும் அசையாமல் வாழும் எங்கள்

அன்பே! அன்பே,அன்பே புகழ் மிகுந்த

சீர்பெறு முத்தமிழே தெவிட்டாத புத்தமிழ்தே

செல்வி! செல்வி, செல்வி எனவே வாழ்த்தும்.

தன்னேரிலாத…..

முதன்முதல் செந்தமிழ் நான்மறை செப்பிய

முத்தே! முத்தே, முத்தே புகழ்மிகுந்த

புதுவாழ்வு காட்டிடும் திருக்குறள் பூத்தபூம்

பொழிலே! பொழிலே, பொழிலே எனவே வாழ்த்தும்,

தன்னேரிலாத…..

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

Comment here