ஆன்மிகம்

புராண கதாபாத்திரங்கள் : ராகு

தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தபோது, அமிர்தம் கிடைத்தது. அந்த அமிர்தம், இறப்பில்லாத வாழ்வை அளிக்கக் கூடியது.
திருமால், மோகினி வடிவம் எடுத்து அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் வழங்கிவந்தார்.
அப்போது அந்த வரிசையில் அசுரர்களில் ஒருவரான சுவர்பானு அமர்ந்து யாருக்கும் தெரியாமல் அமிர்தத்தை வாங்கி குடித்து விட்டார். இதைக் கவனித்த சூரியனும் சந்திரனும் மோகினியிடம் இதுபற்றி தெரிவித்தனர். உடனே அவர், தனது சுதர்சன சக்கரத்தை சுவர்பானு மீது ஏவினார்.
இதில் சுவர்பானுவின் தலையும் உடலும் தனித்தனியானது. ஆனால் அமிர்தம் அருந்தி இருந்ததால், அவரது உயிர் பிரியவில்லை. அவர் தன் வேதனையை பிரம்மனிடம் சொல்லி முறையிட்டார். உடனே பிரம்மன், பாம்பின் உடலையும், தலையையும் அவருக்கு வழங்கினார்.
மனித தலையும் பாம்பு உடலும் கொண்டவர் ராகு என்றும், பாம்பு தலையும் மனித உடலும் கொண்டவர் கேது என்றும் அழைக்கப்பட்டனர். மோகினியிடம் தன்னை காட்டிக் கொடுத்ததால் ராகுவுக்கு சூரியனும், கேதுவுக்கு சந்திரனும் பகை கிரகமாகின. ராகு சூரியனை விழுங்குவதால் தான் சூரிய கிரகணம் வருகிறது என்றும், சந்திர கிரகணம் உருவாக கேது தான் காரணம் என்றும் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது.

Comment here