அரசியல்கல்விதமிழகம்பொதுமாவட்டம்

பெரியார் பல்கலையில் உதவி பேராசிரியர் பணிக்கு ரூ.15 லட்சம் லஞ்சம் : ராமதாஸ்

Rate this post

சேலம், பெரியால் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி நிலைப்பு வழங்க 15 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வற்புறுத்தப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மேட்டூர் உறுப்புக் கல்லூரியில் பத்தாண்டுகளுக்கும் கூடுதலாக பணியாற்றி வந்த தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் 15 பேருக்கு பணி நிலைப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் உரிய தகுதிகள் இருந்தும் கூட அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க அமைச்சர் தரப்பில் மிகப்பெரிய அளவில் கையூட்டு வசூலிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

மேட்டூர் உறுப்புக் கல்லூரியில் பணி நிலைப்பு வழங்கப்பட்டவர்கள் அனைவருமே 12 ஆண்டுகளுக்கு முன் முறைப்படி தகுதித் தேர்வு எழுதி தான் தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் தான் தற்காலிக உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். என்றாவது ஒருநாள் நிரந்தர உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டால் தங்களுக்கு பணி நிலைப்பு செய்யப்படும் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் குறைந்த ஊதியத்தில் பணி செய்து வந்தனர். ஆனால், 2014-ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக முனைவர் சுவாமிநாதன் இருந்த போது, தற்காலிக உதவிப் பேராசிரியர்களை நீக்கம் செய்து விட்டு, நிரந்தர உதவிப் பேராசிரியர்களை நியமிக்க முயன்றார். அதை எதிர்த்து தற்காலிக உதவிப் பேராசிரியர்களில் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, 2015- ஆம் ஆண்டில் சாதகமான தீர்ப்பைப் பெற்றனர். அப்போதே அவர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அப்போதிருந்த துணைவேந்தர் சுவாமிநாதன் ஒரு பணியிடத்திற்கு 30 லட்சம் ரூபாய் கையூட்டு கொடுத்தால் மட்டுமே பணி நிலைப்பு செய்ய முடியும் என்று கூறி விட்டார். அதைத்தொடர்ந்து நடந்த சட்டப்போராட்டங்களில் தற்காலிக உதவிப் பேராசிரியர்களுக்கு வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து அவர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தரப்பு நியாயத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேலு முன்வந்த நிலையில், இதில் குறுக்கிட்ட உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் 15 தற்காலிக உதவிப் பேராசிரியர்களும் தலா ரூ.15 லட்சம் வழங்கினால் தான் பணி நிலைப்பு ஆணை வழங்க முடியும் என நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. நீண்ட பேரத்திற்கு பிறகு 11 பேர் தலா ரூ.15 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.65 கோடி கையூட்டு வழங்கியதாகவும், மீதமுள்ள நால்வர் தங்களுக்கு நீதிமன்ற ஆணைப்படி தான் பணி நிலைப்பு வழங்கப்படுவதாகவும், அதற்காக பணம் தர முடியாது என்றும் கூறிவிட்டதாகவும் தெரிகிறது. அதைத் தொடர்ந்து அவர்களுக்கு பணி நிலைப்பு ஆணைகள் வழங்கப்பட்டு விட்ட நிலையில், அவர்களும் தலா ரூ.15 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் தரப்பு மிரட்டுதாக புகார் எழுந்துள்ளது என அறிக்கையில் தெரிவித்தார்.

Comment here