Sliderவரலாறு

பெருங்குளம் செங்கோல் ஆதினம் அருள் வரலாறு!

Rate this post

பெயர்க்காரணம்:
கொற்கை துறைமுக நகரை தலை நகரமாக கொண்டு ஆட்சி புரிந்து வந்த பாண்டிய மன்னர்களுக்கு செங்கோல் வழங்கி, முடிசூடி பட்டாபிஷேகம் நடத்தி, பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் ராஜகுருவே இந்த ஆதினத்தின் ஆதின கர்த்தர் ஆவார். எனவே இந்த ஆதினத்திற்கு செங்கோல் ஆதினம் என பெயர்பெற்றது.

ஆதின வரலாறு:
கைலாயவாசியும், அகச்சந்தான குறவர்களில் ஒருவருமாகிய சத்யஞான தரிசினிகளிடம் இருந்து வரலாறு துவங்குகிறது. தரிசினிகள் கைலாயத்திலிருந்து புறப்பட்டு அகத்திய மாமுனியை காண பொதிகை மலைக்கு வரும் வழியில் சிதம்பரத்தில் ஶ்ரீ சபாநாயகர் பெருமானை தரிசித்து கொண்டிருக்கும் வேளையில் அவரது கூப்பிய கரங்களுக்குள் ஒரு சிவலிங்க திருமேனி எழுந்தருளியது. அதை முறைப்படி பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு ஒரு அசரீரி வாக்கு எழுந்தது. சத்யஞான தரிசினிகள் சிதம்பரத்திலேயே ஒரு திருமடம் நிறுவினார். இறைவன் திருவருளால் கிடைத்த அந்த லிங்க மூர்த்தத்திற்கு அழகிய திருச்சிற்றம்பலமுடையார் என திருநாமம் சூட்டி அவரது திருமடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். சத்யஞான தரிசினிகள் சித்திரை மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் சிவஜோதியில் சங்கமித்தார்கள். அன்னாரது குருமூர்த்தம் வாரணாசியில் தற்போதும் உள்ளது.
சத்யஞான தரிசினி சுவாமிகளின் 18வது பட்டத்தின் மடாதிபதியாக திகம்பர சித்தர் என்பவர் இருந்தார். அந்த வேளையில் கொற்கையை தலைநகராக கொண்டு உக்கிரபெருவழுதி பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவன் சிதம்பரத்திற்கு சபாநாயகர் பெருமானை தரிசிக்க சென்றிருந்த போது திகம்பர சித்தரையும் தரிசித்தான். தனது பாண்டிய நாட்டிற்கு வந்து சைவ சமய பணி ஆற்றிட பணிந்தான். திகம்பர சித்தரும் உடன்பட்டு பாண்டிய நாட்டிற்கு வருகிறார். அப்போது மன்னர் திகம்பர சித்தருக்கு கல்லூர் என்ற சிற்றூரில் மடம் அமைத்து கொடுத்தான். அதிலிருந்து அவர் சைவ சமய பணிகளை ஆற்றி வந்தார்.
சில காலத்திற்கு பிறகு கொற்கை தலைநகர் மீது சோழப்பேரரசு படையெடுத்து வர உக்கிரபெருவழுதி பாண்டியன் தோல்வியுற்றான். திகம்பர சித்தரிடம் சென்று தனது படை பலத்தை பெருக்கி கொள்ள போதுமான பொருள் இல்லாத காரணத்தினால் தோல்வியுற்றதாக சரண் புகுந்தான். திகம்பர சித்தர் அவர்கள் செங்கற்களை பொன்கற்களாக்கி மன்னனிடம் கொடுத்து “இதை வைத்து உன் படை பலத்தை பெருக்கி போரில் வென்று வா” என ஆசி கூறி விடை கொடுத்தார்.
சிலநாட்களில் உக்ரபெருவழுதி பாண்டியன் சோழ பேரரசிடம் போர் புரிந்து இழந்த ராஜ்யத்தை மீண்டும் பெற்றான். இதற்கு நன்றியாக கொற்கை தலைநகரின் வடதிசையில் வற்றாத நீரை உடைய பெருங்குளம் இருக்கும் இடமான திருக்குளந்தை (தற்போது பெருங்குளம் என்றழைக்கப்படுகிறது) என்ற ஊரில் ஆதினம் அமைத்து கொடுத்தான். திகம்பர சித்தரின் ஆசியோடு மீண்டும் ஆட்சியை துவங்க எண்ணிய உக்ரபெருவழுதி பாண்டியன் திகம்பர சித்தரை தனது ராஜகுருவாக ஏற்று கொண்டு, அவரால் முடிசூடப்பெற்று, அவரது திருக்கரங்களால் செங்கோல் வாங்கி, அவரால் பதவிப்பிரமாணம் செய்யப்பட்டு அதன்பின்பு அரியணையில் அமர்ந்தான். உக்ரபெருவழுதி பாண்டியனை தொடர்ந்து கொற்கை துறைமுகத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்யும் பாண்டிய மன்னர்கள் பெருங்குளம் ஆதினத்தின் ஆதின கர்த்தர்களிடம் இருந்து செங்கோல் வாங்கி ஆட்சி நடத்துவதால் இந்த ஆதினத்திற்கு செங்கோல் மடம் பெருங்குளம் ஆதினம் என்ற பெயர் பெற்றது. மன்னர்களுக்கு செங்கோல் வழங்கி பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் இந்த மரபு சுத்த சைவ பதினெண் ஆதின மடங்களில் செங்கோல் மடம் பெருங்குளம் ஆதினத்திற்கே உரிய தனிச்சிறப்பாகும்.
இந்த ஆதினத்தின் 103வது ஆதினகர்த்தராக சீர்வளர்சீர் சிவப்பிரகாச சத்ய ஞான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார்.

அமைவிடம்:
செங்கோல் மடமானது பெருங்குளம் என்ற ஊரில் அமைந்துள்ளது. பெருங்குளம் என்ற இந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் என்ற ஊரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், நவத்திருப்பதி ஸ்தலங்களில் சனி பகவானால் வணங்கப்பட்டதும், 12 ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரால் ஒரே ஒரு பாடலால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஶ்ரீ மாயக்கூத்தர் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. பெருங்குளத்திற்கு மற்றொரு சிறப்பு.

Comment here