கோர்ட்

பெற்றோரை தாக்குவோரை குழந்தைகள் திருப்பி அடிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி, :

‘பெற்றோர் தாக்கப்படுவதை நேரில் பார்க்கும், குழந்தைகள், ஆத்திரப்பட்டு பதிலுக்கு பலப் பிரயோகத்தில் இறங்குவது நியாயமான ஒன்றே’ என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள், தம் தந்தையை தாக்கி, அவர் உயிரிழக்கக் காரணமான பக்கத்து வீட்டுக்காரர் மீது, பதில் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில், அவர்கள் இருவருக்கும், ராஜஸ்தான் கோர்ட், இரண்டாண்டு தண்டனை வழங்கியது.
இதை எதிர்த்து, அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் சிவகீர்த்தி சிங் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில், பக்கத்து வீட்டுக்காரரால், தந்தை தாக்கப்பட்டு உயிரிழந்ததை பார்த்து, ஆத்திரத்தில் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். பக்கத்து வீட்டுக்காரரின் தாக்குதலில், தாயும் காயமடைந்துள்ளார். இதனால் தான் அவர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பெற்றோர் தாக்கப்படும் போது, குழந்தைகளால் பொறுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுவதை உணர முடிகிறது. அவர்கள் வன்முறையை கையாண்ட சூழலை, கீழ் கோர்ட் கணக்கில் கொள்ளவில்லை; சம்பவத்தின் பின்னணியையும் பார்க்க வேண்டும். எனவே, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்கிறோம்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Comment here