அரசியல்

பொது மேடையில் கண்ணீர் விட்டு அழுத கர்நாடகா முதல்வர்!

Rate this post

இந்தக் கூட்டணி அரசுக்கு தலைமை தாங்கி வரும் நான் மகிழ்ச்சியாக இல்லை என கண்ணீருடன் கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறினார். கர்நாடக முதல்வராக பதவியேற்ற குமாரசாமியை பாராட்டும் வகையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் பெங்களூருவில் பாராட்டு விழா நடந்தது.இந்த விழாவில் கலந்து கொண்டு குமாரசாமி பேசியதாவது: உங்கள் சகோதரன் முதல்வராக பதவியேற்றதாக நினைத்து நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளீர்கள். வாழ்த்து தெரிவிக்க பூங்கொத்துடன் வந்துள்ளீர்கள். ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பதை உங்களிடம் கூறுகிறேன். கூட்டணி அரசின் முதல்வராக பதவியேற்று, விஷத்திற்கு இணையான வேதனையை நான் விழுங்கியுள்ளேன். இதனை நான் யாரிடமும் பகிரவில்லை. தற்போதைய சூழ்நிலையில் நான் மகிழ்ச்சியாக இல்லை எனக்கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், கடந்த ஒரு மாதத்தில், விவசாய கடனை தள்ளுபடிக்காக அதிகாரிகளை சம்மதிக்க நான் செய்த சித்துவேலைகள் யாருக்கும் தெரியாது. தற்போது அவர்களுக்கு அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 5 கிலோ அரிசிக்கு பதில் 7 கிலோ அரிசி வழங்க வேண்டும் என்கின்றனர். இதற்கு 2,500 கோடி ரூபாய் பணத்திற்கு எங்கு செல்வேன். வரி விதிப்பு தொடர்பாகவும் என்னை விமர்சிக்கின்றனர்.

இதன் பிறகும், கடன் தள்ளுபடி திட்டத்தில் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை என மீடியாக்கள் கூறுகின்றன. நான் நினைத்தால், 2 மணி நேரத்தில் பதவியிலிருந்து விலகுவேன்.அதிகாரத்திற்காக இல்லை பிரசாரத்தின் போது, எனது பேச்சை கேட்க மக்கள் கூடுவார்கள். ஆனால், ஓட்டு போட வரும் போது, என்னையும், எனது கட்சி வேட்பாளர்களையும் மறந்து விடுவார்கள். நான் முதல்வராக வேண்டும் என கடவுள் என்னை ஆசிர்வதித்துள்ளார்.

எத்தனை நாள் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். மாநில மக்களுக்கு நல்லது செய்யவே முதல்வராக வேண்டும் என விரும்பினேன். எனது கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும், எனதுதந்தை விட்டு சென்ற பணிகளை நிறைவேற்றுவதுமே எனது கனவு. இது அதிகாரத்திற்காக அலைவது கிடையாது.

ஆனால், என் மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

Comment here