இந்தியா

பொள்ளாச்சி விவகாரம்: தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

Rate this post

புதுடெல்லி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதுதொடர்பான ஆபாச வீடியோ படங்கள் எடுக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மாணவி மட்டுமல்லாது மேலும் ஏராளமான பெண்களை முகநூல் (பேஸ்-புக்) வாயிலாக பழகி பின்னர் அவர்களை கடத்தி பாலியல் கொடுமைக்கு உட்படுத்தி ஏராளமான வீடியோ படங்களை எடுத்து ஒரு கொடூர கும்பல் காமவெறியாட்டம் நடத்தி உள்ளது.

இந்த வெறியாட்ட கும்பலை சேர்ந்த சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மற்றும் திருநாவுக்கரசு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணனை மிரட்டியதாக அ.தி.மு.க. பிரமுகர் நாகராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி அந்த கட்சி தலைமை நடவடிக்கை எடுத்து உள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், திருநாவுக்கரசு ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தின்கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க கோவை மாவட்ட கலெக்டர் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நேற்று ஆணை பிறப்பித்தார். சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் உடனடியாக விசாரணை நடவடிக்கையை தொடங்கினார்கள்.
இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்ற தமிழக அரசு நேற்று அதிரடியாக முடிவு செய்தது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்படுகிறது.
இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றவுடன் சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் விசாரணையை தொடங்குவார்கள் என்றும், அதுவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கின் விசாரணையை மேற்கொள்வார்கள் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி சம்பவத்தில் அனைத்து உண்மையான குற்றவாளிகளையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,  தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அனுப்பியுள்ள  நோட்டீசில்,
பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை தேவை. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கவும் மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Comment here