ப்ளஸ் டூ ரிசல்ட் வந்த பிறகு மறுக்கூட்டல் & விடைத்தாள் பெற என்ன செய்ய வேண்டும்?

Rate this post

தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 தேர்வு தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுக்கு பின் மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

2017-18 கல்வியாண்டிற்கான 12-ம் வகுப்பு (ப்ளஸ் 2) பொதுத் தேர்வுகள் மார்ச் 1 தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் தமிழகத்தில் 74 மையங்களில் திருத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து உதவித் தேர்வாளர்களால் ஏப்ரல் 12-ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது.

நாளை வெளியாகும் தேர்வு முடிவுகள் மாணவர்களின் பெற்றோர்களின் செல்போன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும், அதனைத் தொடர்ந்து அந்தத்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு என உள்ள இமெயிலில் காலை 9.30 மணிக்கு மாணவர்களின் தேர்வு முடிவுகளை அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து அறிவிப்பு பலகையில் ஒட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெறுவது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வரும் 17-ம் தேதி முதல் 19 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.

விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும். விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் , மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணமாக பகுதி 1 மொழிப் பாடத்திற்கு ரூ.550ம், பகுதி 2 மொழி (ஆங்கிலம்) – ரூ.550ம், ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) – ரூ.275ம் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன் படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும்.

பிளஸ் 2 பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்கள் தாங்கள் பயின்ற, தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 21-ம் தேதி பிற்பகல் முதல் பள்ளி பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் மாணவர்கள் , தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்” என வசுந்தராதேவி அதில் கூறியுள்ளார்.

மேலும் விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*