பிரத்யகம்பொது

மகாராஷ்டிரம்:சுமை தூக்கும் பணிக்கு 984 பட்டதாரிகள் விண்ணப்பம்!

                                     மகாராஷ்டிர மாநிலத்தில் சுமை தூக்குவோர் பணிக்காக அரசு நடத்தும் தேர்வுக்கு 2,424 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 984 பேர் பட்டதாரிகள் ஆவர்.

கடைநிலை தொழிலாளர் பணிக்கு பட்டதாரிகள் பலரும் விண்ணப்பித்திருப்பது, அரசுப் பணி மீதான மோகத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

காலியாக இருக்கும் 5 சுமைதூக்குவோர் பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு நடைபெறவுள்ளதாக மகாராஷ்டிர அரசுப் பணி தேர்வாணையம் கடந்த டிசம்பர் மாதம் விளம்பரம் வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது.

இந்தப் பணியில் சேர்வதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 4-ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அந்த 5 காலியிடங்களுக்கு 2,424 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் எம்ஃபில் முடித்தவர்கள் 5 பேர், முதுநிலை பட்டதாரிகள் 253 பேர் உள்பட 984 பேர் பட்டதாரிகள் ஆவர்.

மேலும் 12-ஆம் வகுப்பு படித்தவர்கள் 605 பேரும், 10-ஆம் வகுப்பு படித்தவர்கள் 282 பேரும், அதற்கும் கீழான பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் 177 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

Comment here