Sliderகல்வி

மகாவித்வான்மீனாட்சிசுந்தரம்பிள்ளை

Rate this post

19-ம் நூற்றாண்டு தமிழ் சிற்றிலக்கியக் காலம் என்று கூறப்பட்டபோது திருத்தலங்களின் வரலாற்றை விவரித்து ஏராளமான தல புராணங்கள் பாடினார்‘மகாவித்வான்மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள்

19-ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றியவர் இவர்தான். புராணங்கள், காப்பியங்கள், பிள்ளைத் தமிழ் நூல்கள், அந்தாதி, கலம்பகங்கள், கோவைகள், எண்ணற்ற தனிப் புராணங்களை இயற்றியுள்ளார். பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடியதால் ‘பிள்ளைத் தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை’ என்று புகழப்பட்டார். சிறந்த தமிழறிஞர்.ஆன உ. வே. சாமிநாதையரின் ஆசிரியர். இவர் திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு ‘மகாவித்வான்’ என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்தார். சீர்காழியில் முன்சீப்பாக பணியாற்றிய தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். அவர் மீது வைத்திருந்த பெருமதிப்பின் காரணமாக, அவரைப் பாராட்டி ‘குளத்துக்கோவை’ என்னும் நூலை இயற்றினார்

இவர் திருச்சி அருகே உள்ள எண்ணெயூரில் ஸ்ரீபவ ஆண்டு பங்குனித் திங்கள் 26-ம் நாள் (06.04.1815), வியாழக்கிழமை, அபர பட்சம் துவாதசி திதியும் பூரட்டாதி நட்சத்திரமும் கூடிய நன்னாளில், மகர லக்கினத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை, அன்னத்தாச்சி ஆகியோர் ஆவர். தமிழ்ப் புலவரான தனது தந்தையிடமே தமிழ் கற்றார். சென்னை சென்று சபாபதி முதலியார், அம்பலவாண தேசிகர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களிடம் கல்வி பயின்று புலமைப் பெற்றார். காப்பியங்கள், அற நூல்கள், சித்தாந்த சாத்திரங்கள், பேருரைகள், சிற்றிலக்கியங்கள் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். இவர் அபார நினைவாற்றல் கொண்டவராகத் திகழ்ந்தார். பாடல்களைப் படித்த வேகத்தில் மனத்தில் பதிய வைத்துக்கொண்டுவிடுவார். சிறு வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருந்தார்.

பெரியபுராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர். இவரது படைப்புகள் அனைத்துமே செய்யுள் வடிவில் அமைந்துள்ளன. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இவர் இயற்றியதாகக் அறியவருகின்றது.
இதுவரை அச்சில் வெளிவந்த இவரது நூல்கள் 75 ஆகும்.

மயிலாடுதுறையில் பலகாலம் தங்கி இவரது புலமையை அறிந்து நாடிவந்த பல மாணவர்களுக்கு பொருள் எதிர்பாராமல் தமிழ் கற்பித்தார். பணம் பெற்றுக்கொண்டு பாடம் சொல்லிக்கொடுக்கும் பழக்கம் இவரிடம் இல்லை. தன்னிடம் கல்வி பயில வரும் ஏழை மாணவர்களைச் சொந்த பிள்ளைகள் போலக் கருதி உணவும், இடமும் அளித்து குருகுல முறையில் பாரபட்சமின்றி கல்வி புகட்டினார். கவிதைகள் பாடி சன்மானமாகப் பெற்ற செல்வத்தைக்கொண்டே இவர் தனக்கும் தன் மாணாக்கர்களுக்கும் செலவழித்தார். இவரிடம் பயின்ற மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் உ.வே.சாமிநாத ஐயர், குலாம் காதர், நாவலர், சவுரிராயலு நாயக்கர் ஆகியோர் ஆவர். ஒரு தனி மனிதன் ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ முடியும் என்பதை 19 ஆம் நூற்றாண்டில் நிறுவிக்காட்டிய பெருந்தமிழ் அறிஞர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. ‘
பிற்காலக் கம்பர்’ என்று இவரைத் திறனாய்வாளர்கள் போற்றுவர்.
படித்தல், பாடம் சொல்லுதல், நூல்கள் யாத்தல் என்பனவற்றையே வாழ்வாகக் கொண்டிருந்த இவர் இயற்றிய தல புராணங்கள் பல. 19-ஆம் நூற்றாண்டு வரை தலபுராணம் பாடப்பெறாத சிவதலத்தில் வாழ்ந்திருந்த சைவ அன்பர்களும், பெருஞ்செல்வர்களும் இவரைத் தம் ஊருக்கு அழைத்துச்சென்று, பெருஞ்சிறப்புகள் செய்து தம் ஊருக்குத் தலபுராணங்கள் ஆக்கித் தருமாறு வேண்டிப் பெற்றனர். தமிழ் மொழியில் இவரே அதிக எண்ணிக்கையிலான தல புராணங்களைப் பாடியவர். நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றிலக்கியங்களும் இவரால் பாடப் பெற்றுள்ளன. இவர் பாடிய திருநாகைக் காரோணப் புராணமும், மாயூரப் புராணமும் பெருங்காப்பியங்களாகப் போற்றப்படும் சிறப்பு மிக்கன.
இவர் 75 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கன.

திருவாரூர்த் தியாகராசலீலை
திருவானைக்காத் திருவந்தாதி
திரிசிராமலை யமகவந்தாதி
தில்லையமக அந்தாதி
துறைசையமக அந்தாதி
திருவேரகத்து யமக அந்தாதி
திருக்குடந்தை திருபந்தாதி
சீர்காழிக்கோவை
குளத்தூக்கோவை
வியாசக்கோவை
அகிலாண்டநாயகி மாலை
சிதம்பரேசர் மாலை
சேக்கிழார் பிள்ளைத் தமிழ்
திருநாகைக்காரோண புராணம்
பூவாளூர்ப்பதிற்றுப்பத்தந்தாதி
காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்
பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்
திருவிடைக்கழிமுருகர் பிள்ளைத்தமிழ்
ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்
வாட்போக்கிக் கலம்பகம்
திருவாவடுதுறை ஆதீனத்துக் குருபரம்பரையகவல்
ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்
சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது
குசேலா பாக்கியானம்
இவரது படைப்புகள் 42ஐ ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு என்னும் பெயரால் இரு தொகுதிகளாக உ.வே.சா. வெளியிட்டுள்ளார். திரிசிபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாற்றை உ.வே.சா. விரிவாக இரு பாகங்களாக விரிவாக எழுதி வெளியிட்டார். இந்நூலே இவரைப்பற்றி அறிந்துகொள்ள உறுதுணையாக உள்ளது.
இவ்வாறு தமிழ் மொழிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய தமிழ் அறிஞர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை1876இல் தமது 61வது வயதில் மறைந்தார்.

திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் புலமையின் பெருமை வியப்பூட்டும் பெருமிதம் மிக்கது. சங்க நூல்கள், காப்பியங்கள், அற நூல்கள், சித்தாந்த சாத்திரங்கள், பேருரைகள், சிற்றிலக்கியங்கள் என அவர் கல்லாத தொன்மை நூல்களே இல்லை என்பதை அவர்இயற்றிய நூல்களால் அறிய முடிகிறது.
ஓலைச் சுவடிகளிலிருந்த பழந்தமிழ் நூல்களைத் தேடித் தொகுத்து அச்சிட்டுப் பெரும்புகழ் பெற்றார் உ.வே.சா. எனில், அத்தகைய உ.வே.சா.வுக்கு அருந்தமிழ் போதித்து அவரைக் கற்றோரவையில் முந்தியிருக்கச் செய்த பெருமைக்குரியவர் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆவார்.
ஆயினும் அவரது மாணாக்கர் உ.வே.சாமிநாதய்யரை தமிழ் மக்கள் அறிந்த ஒப்பளவிற்கு அவருக்கு ஆசானாக இருந்த மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் அறியாததுதான் விந்தை!
இன்னமும் வரும் –நண்பர்களின் ஆதரவு இருக்கும் வரை !
-அண்ணாமலை சுகுமாரன்

.#‘மகாவித்வான்மீனாட்சிசுந்தரம்பிள்ளை

Comment here