Sliderஅரசியல்இந்தியாதமிழகம்தொழில்தொழில்நுட்பம்பிரத்யகம்புதுச்சேரிபொதுமாவட்டம்

மக்களை அடிமைப்படுத்தும் போலி விளம்பரங்கள் : உஷார்…உஷார்…

தொலைக்காட்சி விளம்பரங்கள் என்பது நிகழ்ச்சிகளின் இடைவெளியில் ஒளிபரப்புவது என்ற நிலையில் இருந்து, விளம்பரங்களின் இடையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது என்ற நிலைக்கு பெரும்பாலும் மாறியுள்ளது. இதில், விளம்பரங்களின் உண்மைத் தன்மை என்ன என்று அறிந்து பொருட்களை வாங்கும் நிலையில் இருந்து, எந்த விளம்பரம் மனதை கவர்கிறதோ அதனை அடிப்படையாக கொண்டு பொருட்களை வாங்கும் மன நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, கிராப்பிக்ஸ் துணைக் கொண்டு பல மாய வித்தைகள் செய்து வியாபாரம் செய்கின்றனர். இதில், அழகு பொருட்கள் சார்ந்த விளம்பரங்களுக்கு வெள்ளை நிற பெண்களையும், ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்க பல மாய தோற்றத்தையும் உருவாக்கி வருகிறார்கள், குறிப்பாக, இளைய தலைமுறையின் வளர்ச்சி, நாகரீக வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி என்பது வீட்டில் இருந்தே வியாபாரம் செய்வது என்ற பிம்பத்தையும் உருவாக்கி வருகிறார்கள்,

சோப் பயன்படுத்துவதன் மூலம் பெண் பிள்ளைகள் சமூகத்தில் அச்சமின்றி நடந்து செல்லலாம், ஹெல்த் டிரிங் குடித்தால் மூளையை வளர செய்து அனைவரையும் விஞ்ஞானிகளாக்கலாம் என்ற கட்டுக்கதைகளை தினமும் சொல்லி, அதனையே உண்மை என நினைக்கும் மன நிலைக்கு மக்களை தள்ளிவிடப்படுவது அதிகரித்துள்ளது. ஆனால், ஹெல்த் டிரிங்ஸ் விற்பனைக்கு வராத நிலையில் பல விஞ்ஞானிகள், அறிவாளிகள், அறிஞர்கள் நாட்டில் பிறந்துள்ளனர் என்பதை விளக்கும் பல உண்மை வரலாறுகள் ஏராளம் உண்டு. அதிலும், தற்போதைய காலக்கட்டத்தை விட சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் உருவான அறிவியல் மேதைகள், அறிஞர்கள் போன்று தற்போதைய காலக்கட்டத்தில் யாரும் வரவில்லை என்று கூட சொல்லலாம். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் மூளையின் வளர்ச்சியை அதிகரிக்க, உடல் உயரத்தை அதிகரிக்க, வேகமாக சிந்திக்க இத்தகைய பானங்களை அருந்த வேண்டும் என்ற மாயத் தோற்றத்தை விளம்பரங்கள் உருவாக்கி உள்ளது.

முக்கியமாக, 50 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் உப்பு, கரி துண்டு, வேப்பம் குச்சி, செங்கல் தூள் போன்றவற்றை பயன்படுத்தி பெரும்பாலான மக்கள் பற்களை சுத்தம் செய்து வந்தனர். ஆனால், பிற்காலத்தில் நீங்கள் இன்னமும் உப்பில் தான் பற்களை சுத்தம் செய்கிறீர்களா ? என்ற கேள்வியுடன் டூத் பேஸ்ட் கொண்டு வரப்பட்டது. ஆனால், சம காலத்தில் உங்கள் டூத் பேஸ்டில் உப்பு இல்லையா ? என கேள்வி கேட்டு உப்பு கலந்த டூத் பேஸ்ட்கள் விளம்பரப்படுத்தப்படுகிறது. அதேவேளையில், தமிழர்களின் வாழ்வியலில் வேப்பம் குச்சி கொண்டு பற்களை சிறந்த முறையில் சுத்தம் செய்யும் பழக்கம் இருந்தது. ஆனால், நகரங்களில் பல இடங்களில் வேப்பம் மரம் இருந்தாலும், அதனை தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் பயன்படுத்தாமல் இருக்கும் நிலையே இருந்து வருகின்றது. அதிலும், மக்களின் அறிவுத்திறனை கேள்வி கேட்கும் வகையில், வெள்ளை நிற கோட் சூட், கழுத்தில் ஸ்டெத்தஸ்கோப் அணிந்த நபர் எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் டூத் பேஸ்ட் மூலம் பற்களை சுத்தம் செய்து வருகிறோம். அதிலும், கிராமத்தில் இருக்கும் பலரும் கூட, வேப்பம் குச்சியை வெகுவாக தவிர்த்து, டூத் பேஸ்ட் பயன்படுத்தும் எண்ணிக்கை அதிகரித்து வருவதை எளிதாக பார்க்க முடிகிறது. ஆனால், வேப்பங்குச்சியில் மக்களுக்கு இருக்கும் பழமைகால நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு, அதிலிருந்து வியாபாரம் செய்யும் நோக்குடன், பிளாஸ்டிக், பழுப்பு போன்றவற்றில் இருக்கும் டூத் பிரஸ்சில் வேம்பின் சாறு உள்ளது என முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல், மக்களை வெளிப்படையாகவே பெரு நிறுவனங்கள் ஏமாற்றி வருகிறது. இதனையும் வெள்ளை நிற கோட் சூட், ஸ்டதஸ்கோப், வெண்மை நிறம் கொண்ட நபர் மருத்துவராக இல்லாமல் இருந்தாலும், அவர் சொல்வதில் உண்மை இருக்கும் என்ற நம்பிக்கையில் பலர் அதனையும் தினமும் வாங்கி வருவதை மறுக்க முடியாது.

வீட்டில் உள்ளவர்களை எளிய வேலை கூட செய்யாமல் கைபேசி துணைக் கொண்டே, மளிகை பொருட்கள் முதல் பர்னிச்சர் வரை அனைத்து வேலையையும் வலுக்கட்டாயமாக செய்ய வைக்க பல ஆன்லைன் விளம்பரங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதனை ஆழ்ந்து யோசிக்கும்போது, இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போதைய நாகரீக வாழ்வுக்கு ஏற்ப அனைவரும் மாற வேண்டும், முந்தைய வியாபார முறை ஏற்புடையது அல்ல, அதனால், பழைய வணிக முறையை மாற்றி, புதிய இந்தியா படைக்க வேண்டும் என்ற எண்ணத்தை பல ஆன்லைன் நிறுவனங்கள் மறைமுகமாக பார்வையாளர்களின் மனதில் பதிய வைத்து வருகின்றன.

ஆனால், 100 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டமாற்று முறையும், தற்போதைய சில்லரை வர்த்தகமும் நமது பொருளிற்கு, பணத்திற்கு என்ன வணிகமோ அவை அதே அளவு கிடைக்கும். அதாவது, 100 ரூபாய் பணம் கொடுத்தால் 100 ரூபாய்க்கான பொருட்கள் வாங்கலாம். ஆனால், தற்போதைய ஆன்லைன் வணிகத்தில் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால், 100 ரூபாய் செலவு செய்தால் 95 ரூபாய்க்கு மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டி இருக்கும். இந்த நிலை, 100 கோடி மக்கள் தங்களின் அன்றாட வாழ்வியலில் கொண்டு வந்தால் பல கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை மூலம் இழக்க நேரிடும். அதிலும், வெளிநாட்டு பொருட்களை வாங்குவதென்றால் அதற்கான இழப்பு தொகையும் பெருமளவு ஏற்படும். ஆன்லைன் வர்த்தகத்தில் தற்போது பல அரிய பொருட்கள் எளிதாக கிடைக்கலாம், அதனை மக்கள் பயன்படுத்தலாம். ஆனால், அன்றாட தேவைகளுக்கு மக்கள் ஆன்லைன் வர்த்தகத்தை பயன்படுத்துவது பெரிய பொருளாதார நஷ்டத்தை நோக்கிய பாதையாகவே அமையும். இதனை ஆன்லைன் வர்த்தக விளம்பரங்கள் மக்களிடம் தெரிவிக்காது. மாறாக, டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் செயலாகவே அவை அமைந்து விடுகிறது. ஆன்லைன் வர்த்தகத்தில் பெரும் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது என விளம்பரப்படுத்தப்படும். இவை அனைத்தும் மக்களை தங்களின் வர்த்தகத்திற்கு பழக்கப்படுத்தி, சில்லரை வர்த்தகத்தை ஒழித்துக் கட்ட எடுக்கும் முயற்சியாகவே இருக்கும். ஏனெனில், சில்லரை வர்த்தகம் ஒரு கட்டத்தில் பெருமளவு இல்லாமல் இருந்தால், ஆன்லைன் வர்த்தகம் நிர்ணயிக்கும் கட்டணத் தொகையே இறுதியாக அமையும் நிலை ஏற்படலாம்.

அபத்தமான விளம்பரங்கள் பல இருந்தாலும் அவற்றில் சிலவற்றை மட்டுமே இங்கு தொகுக்கப்பட்டிருக்கிறது. அதில், உடலின் துர்நாற்றத்தை போக்க செண்ட், ஃபர்பியூம் போன்ற வாசனை திரவியங்கள் விளம்பரம் செய்யப்படுகிறது. இதில், ஒரு ஆண் வாசனை திரவியத்தை பயன்படுத்தும்போது பெண்களை கவரவே அதனை பயன்படுத்த வேண்டும் என்ற நிலையில் விளம்பரப்படுத்தப்படுகிறது. இதில், நல்ல வாசனை இருந்தாலே போதும் ஆண்களிடம் பெண்கள் மயங்கி விடுவார்கள், பல பெண்கள் ஆண்களின் மேல் வந்து விழுவார்கள் என்ற மன நிலையை தொடர்ந்து உருவாக்கி பெண்களின் நிலையையும் தாழ்த்துகிறது. அத்துடன், ஆண்களின் மனதிலும் அதற்கு மேலும் அச்சாரமூட்டுகிறது. இதனை அரசும், பெண்கள் அமைப்பும் குற்றம் சொல்லியதாக தெரியவில்லை. மாறாக விளம்பரங்களின் இந்த ஆழ்ந்த அர்த்தம் புரியாமல், ஒரு மயக்க நிலையிலேயே மக்கள் பலர் விளம்பரங்களை பார்த்து மயங்கி, அதனை வாங்கும் நிலை இருந்து வரும் உண்மையை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.

அதுபோல, தனியார் பருப்பு நிறுவனமானது, பருப்பு வாங்குங்க… ஃபாரின்போங்க… என்பது போல் பலரின் கவனத்தை பெற்றது. அதாவது, மக்கள் பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாடு பயணம் செய்ய முடியும் எனபது போல் விளம்பரம் செய்தது. ஆனால், பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாடு பயணம் செய்ய முடியாது என்பதை அடிப்படை கல்வி திறன் உள்ள அனைவரும் அறிந்துக் கொள்ளலாம். ஆனால், பாஸ்போர்ட் இல்லாமல் ஃபாரின் என பருப்பு நிறுவனம் விளம்பரப்படுத்தியது. ஆனால், தற்போது, பாஸ்போர்ட் எடுக்க பணம் வழங்கப்படும் என அந்த நிறுவனம் விளம்பரம் செய்கிறது. இந்திய குடிமகன் பாஸ்போர்ட் எடுக்க வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பான் கார்ட் எண், ஓட்டுநர் உரிமம் அவசியம். அல்லது அதற்கு நிகரான முகவரி சான்றிதழ் அவசியம். இதனை கொண்டு, இந்தியாவில் பிறந்த யார் வேண்டுமானாலும் தோராயமாக 2 ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் பாஸ்போர்ட் பெறலாம். ஆனால், 2 ஆயிரம் ரூபாய் பரிசு என்பதை மறக்கடிக்கும் விதமாக, பாஸ்போர்ட் இல்லாமல் ஃபாரின் என மக்களை ஏமாற்றி உள்ளது.

பெண்கள் சிவப்பாக, வெண்மையாக இருப்பதுதான் அழகு என விளம்பரப்படுத்தக் கூடாது என பலரின் தரப்பில் சொல்லப்பட்டாலும், பெண்கள் சிவப்பாக, வெள்ளையாக இருக்க கிரீம் வாங்குங்கள் என்ற விளம்பரம் இலகுவாகவே செய்யப்பட்டு வருகிறது. இதில், பெண்கள் பலர் சிவப்பாக இருப்பதுதான் அழகு என்ற மனநிலையை உருவாக்கி வருகிறது. இந்தியாவின் பருவச் சூழலுக்கு ஏற்ப பல ஆண், பெண்களின் நிறம் கருப்பாக, மாநிறமாக இருப்பது இயல்பு. ஆனால், மக்களின் இயல்பை குறை என்று சொல்லும் பெருநிறுவனங்கள் கூறும் அபத்தங்களையே பலரும் நம்பும் நிலை இருந்து வருகிறது. இதிலிருந்து, மக்களுக்கு சம்பந்தமே இல்லாத உணவு, உடை, வாழ்வியல் பழக்க வழக்கங்களில் பெருநிறுவனங்கள் மக்களை ஏமாற்றும் விளம்பரங்கள் மூலம் அடிமைப்படுத்துகிறதை எளிதாகவே அறிய முடியும். மனிதர்களின் சாதாரண யோசனையிலே அறியக் கூடிய குளிர்பான விளம்பரங்களின் மோசடிகளை இன்றும் அறியாமலே உள்ளோம். குறிப்பாக, சோடா விளம்பரத்தில் மனிதர்கள் பெரிய அருவியில் தைரியமாக குதிக்க சோடா குடிக்க வேண்டும் என சொல்கிறது. யதார்த்த வாழ்வில் சற்றும் தொடர்பில்லாத இந்த விளம்பரம் தைரியமாக பரப்பப்படுகிறது.

தமிழர்கள் தங்களின் பழக்க வழக்கங்களில் ஆரோக்கியமான வாழ்வியலை கொண்டிருந்தனர். குறிப்பாக, வீட்டின் வெளியே வேப்பம் மரம் வளர்ப்பதன் மூலம் காற்றின் மூலம் பரவும் நோய் கிருமிகள் கட்டுப்படுத்தி வந்தனர். ஏனெனில், வேப்பம் இலைக்கு கிருமிகளை எதிர்கொள்ளும் தன்மை உள்ளது. அதனாலே, மனிதர்களுக்கு அம்மை வந்தால் வேப்பம் இலையில் வருடி விடுவதுடன், குளிக்கும் தண்ணீரில் வேப்பம் இலையை போட்டு குளிக்க வைப்பார்கள். அந்த கருத்தாக்கத்தை அடிப்படையாக கொண்டு, இந்த சோப்பில் ஆயிரம் வேப்பிலையின் சக்தி உள்ளது என மக்களை நம்ப வைக்கிறது. ஆனால், அம்மை நோய் வந்தால், அந்த சோப் கொண்டு குளித்தால் உடலின் அம்மை நோய் போகும் என அந்நிறுவனம் உறுதி அளிக்கவில்லை. ஏனெனில், அந்த விளம்பரம் மக்களின் ஆழ் மனதில் இருக்கும் பழமை பழக்க வழக்கத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதே தவிர, வேறொன்றும் இல்லை. இதனை, கூர்மையாக பார்த்தால், அந்த நிறுவனம் அந்த விளம்பரத்தில் வேப்ப இலையின் நற்குணங்களை என்று மட்டுமே சொல்லும், இதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், மேலோட்டமாக விளம்பரத்தை பார்க்கும் பாமர மக்கள் அந்த விளம்பரத்தில் வேப்பிலையின் மகத்தான சக்தி இருப்பதாகவே நம்பக் கூடும். இதுபோல், மக்களின் வாழ்வியலில் பல போலி விளம்பரங்கள் அடித்தளமிட்டுள்ளது. அதிலும், நமது வீட்டினுள் நெடுந்தொடரில் மயங்கி இருக்கும் மக்களின் மனதை மேலும் மயக்க நிலையிலே வைத்திருக்கும் வகையில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, விளம்பர நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

இதில், ஒவ்வொரு வீட்டிலும் துணி துவைப்பதில் அதிக நீரை வீணடிக்கிறார்கள். அதனால், நீர் தேவை குறையும் வகையில் துணி பவுடரை பயன்படுத்த வேண்டும் என விளம்பரப்படுத்தப்படுகிறது. அதனுடன், மாற்றத்தை மக்களிடம் இருந்து உருவாக்க வேண்டும் என பிரபல ஊடகவியலாளர் மூலம் விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், பெரு நிறுவனங்கள் குளிர்பானம் தயாரிக்க ஒரு நாளைக்கு பல லட்சம் தண்ணீர் எடுக்கிறது, திருப்பூரில் ஆற்று நீரை மாசுபடுத்தும் வகையில் சாய பட்டரை கழிவுகள் கலக்கப்படுகிறது, அணல் மின் நிலைய சாம்பல் கழிவுகள் கழிமுகங்களில் கொட்டப்படுகிறது. இதனால், எந்த அளவுக்கு நீர் மாசுபடுகிறது என்பதை மறந்து, சோப்பு பவுடர் பயன்படுத்துவதால், நீரை சேமிக்க முடியும் என்ற பார்வையை மக்கள் முன் வைக்கப்படும் போது, மக்களை மறைமுகமாக, விளப்பர உத்தியை கொண்டு ஏமாற்றவே இதனை செய்கிறதே தவிர, நல்ல நோக்கம் இருப்பதாக தெரியவில்லை.

மக்களை தொடர்ந்து மயக்க நிலையில் வைக்க வேண்டும் என்பதை மையப்படுத்தி, பெரு நிறுவனங்கள் தங்களின் விளம்பரங்கள் மூலம் குழந்தைகளின் வளர்ச்சி, எதிர்காலம், அறிவுத்திறன் என்றும், பெரியவர்களுக்கு உடல் பலவீனம், இளமை திரும்பும் வாழ்க்கை என்றும், இளைஞர்களுக்கு மேலைநாட்டு உணவு பழக்கம், நாகரீக (?) வாழ்வியல் என்றும், இளம் பெண்களுக்கு வியாபார பொருட்கள் மூலம் நவநாகரீக வாழ்க்கையுடன், துணிவு உருவாக்க முடியும் என்றும் நம்ப வைத்து மக்களை ஏமாற்ற முனைகிறது. விளம்பர நிறுவனங்களின் இந்த போலி சித்தாந்தங்கள் மக்கள் மனதில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று செய்து வருகிறது என்பதை உணர வேண்டும். அத்துடன், மக்களின் உண்மை வாழ்வியல் பழையது அல்ல பழமையானது என்பதை உள்ளார்ந்த அறிவுடன் புரிந்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், அனைத்து மக்களும் நிலையான, ஆரோக்கியமான வாழ்வை எளிதில் அடையலாம் என்பதை உறுதியாக நம்பலாம்.

சுரேஷ் குருபாய்

Comment here