சம்பவம்

மங்கோலியாவில் விபரீதம் அணிலை சமைக்காமல் சாப்பிட்ட தம்பதி சாவு

உளான்பாத்தர்,

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மங்கோலியாவில் அணிலை சமைக்காமல் உண்டால் உடலுக்கு பலம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. இதனால் கிராம பகுதிகளில் உள்ள மக்கள் அணிலை வேட்டையாடி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், ரஷியா மற்றும் சீனாவின் எல்லையில் அமைந்துள்ள பயான் ஒல்கி மாகாணத்தின் சகானூர் நகரை சேர்ந்த ஒரு தம்பதி கடந்த வாரம் அணில் ஒன்றை பிடித்து, அதன் சிறுநீரகம், வயிற்றுப்பகுதி மற்றும் பித்தப்பை உள்ளிட்ட உடல் உறுப்புகளை சமைக்காமல் அப்படியே சாப்பிட்டனர்.

இதையடுத்து, அவர்களுக்கு வாந்தி, பேதி மற்றும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர்களுக்கு பிளேக் நோய் இருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலன் இன்றி கணவன், மனைவி இருவரும் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comment here