பொது

மடிந்த மரங்கள் மறுபிறவி பெறுகின்றன..

Rate this post
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இந்த புயலின் கோரத்தாண்டவத்திற்கு லட்சக்கணக்கான மரங்கள் இரையாகின. பல ஆண்டுகளாக கம்பீரமாக நின்ற ஆலமரங்கள் கூட அடிசாய்ந்தன.
பல கிராமங்களில் ஊரார் கூடி உறவாடும் இடமாக, அனல் கக்கும் வெயிலை விரட்டி அடர்ந்த நிழலை போர்வையாக படர விடும் ஜீவனாக துணை நின்ற ஆலமரங்கள் கஜா புயலின் அகோரப்பசிக்கு இரையாகிப் போனதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வேரோடு சரிந்த ஆலமரங்களை மீண்டும் நிலைநிறுத்தி துளிர்க்கவைக்கும் முயற்சிகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன.
அத்தகைய முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டிருக்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள். அங்குள்ள அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஆயிங்குடி அருகே உள்ள கண்ணுதோப்பு கிராமத்தில் வயிற்றுமுத்தையா அய்யனார் கோவில்வளாகத்தில் அமைந்திருந்தது, சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம். கஜா புயலுக்கு இந்த ஆலமரமும் தப்பவில்லை.
காலங்காலமாக தங்களுக்கு நிழல்கொடுத்து வந்ததோடு, பறவையினங்களுக்கு வாழ்விடத்தையும் வழங்கிய மரம் வேரோடு சாய்ந்து கிடந்ததை பார்த்து கிராம மக்களும், இளைஞர்களும் வேதனை அடைந்தார்கள். அதனை மீண்டும் துளிர்விடச்செய்ய பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
இதற்காக 100-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து, சாய்ந்த ஆல மரத்தின் அனைத்து கிளைகளையும், மரம் அறுக்கும் எந்திரம், அரிவாள் உள்ளிட்டவற்றின் உதவியுடன் வெட்டி அகற்றினார்கள். இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ஆல மரம் இருந்த இடத்தில் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டினார்கள். பின்னர் அந்த பள்ளத்தில், 2 பொக்லைன் மற்றும் ஒரு ராட்சத கிரேன் உதவியுடன் கிளைகள் அகற்றப்பட்ட ஆலமரத்தின் அடிப் பகுதியை தூக்கி நிறுத்தினார்கள். அதன்பிறகு ஆலமரத்தை கிரேன் பிடித்துக் கொள்ள 2 பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மண்போட்டு மூடப்பட்டது. கடும் முயற்சியால் ஆலமரம் மறுபடியும் தூக்கி நிறுத்தப்பட்டது. பலரது முயற்சியின் விளைவாக தற்போது அந்த மரம் துளிர்விட்டிருக்கிறது.
தனி மரம் தோப்பாகாது என்பார்கள். அதேபோல்தான் ஒரு தனிமரத்தை மீண்டும் உயிர்ப்பிக்க கூட்டுமுயற்சி தேவைப்பட்டது. அதை மிகவும் ஆர்வமாகவும், அர்ப்பணிப்புடனும் செய்து, மடிந்த மரத்திற்கு மறுபிறவி கொடுத்துள்ளனர், கிராம மக்கள். அந்த ஆலமரம் துளிர்விட்டு அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவர்கள் தினமும் தண்ணீர் ஊற்றி அதனை பராமரிக்கிறார்கள். பராமரிப்பில் பள்ளி மாணவ-மாணவிகளும் கைகோர்த்திருக்கிறார்கள்.
அந்த ஆலமரத்தின் பெருமையை பற்றி கண்ணுதோப்பு கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன், “எங்கள் ஊரின் ஜீவனாக இருந்த அந்த ஆலமரம் வீழ்ந்ததும், அதன் நிழலில் வாழ்ந்த பெரியவர்கள் எல்லாம் மிகுந்த கவலைக்குள்ளானார்கள். அதனால் எப்படியாவது அதற்கு மீண்டும் உயிரூட்டவேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். சாய்ந்த மரங்களை எப்படி துளிர்க்கவைப்பது என்பது பற்றி இணையதளங்களில் தகவல்களை திரட்டினோம். அதன்படி செயல்பட்டு ஆலமரத்தை மீண்டும் தூக்கி நிறுத்தினோம். எங்களுடைய அயராத முயற்சி, தொடர் பராமரிப்பு காரணமாக தற்போது ஆலமரம் துளிர்விட்டு வளர தொடங்கி விட்டது. மீண்டும் இந்த ஆலமரம் பழைய நிலைக்கு வந்து நிழல் கொடுக்க தொடங்கிவிடும்” என்றார்.
“ஒவ்வொரு ஆண்டும் வயிற்றுமுத்தையா அய்யனார்கோவில் ஆடித்திருவிழாவின்போது சுமார் 10 ஆயிரம் பேருக்கு கோவில்வளாகத்தில் அன்னதானம் வழங்கப்படும். அதற்காக நாங்கள் பந்தல் எதுவும் அமைப்பதில்லை. அந்த அளவிற்கு அந்த பழமையான ஆலமரத்தின் நிழல் எல்லா பக்கமும் படர்ந்திருக்கும். பல பெருமைகளை உடைய ஆலமரம் மீண்டும் துளிர் விட்டு உள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆலமரம் மீண்டும் சாய்ந்து விடாமல் இருப்பதற்காக ஆலமரத்தின் வேர் பகுதியை சுற்றி யிலும் சுவர் எழுப்பி திண்டுபோல் அமைக்க முடிவு செய்து உள்ளோம். இந்த மரம் துளிர்விட்டிருப்பது, மடிந்த மரத்திற்கு மீண்டும் உயிர்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தி யில் விதைத்திருக்கிறது” என்கிறார், அதே ஊரைச் சேர்ந்த அன்புக்குமரன்.
மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு மாணவ சமுதாயத்துக்கு மிகவும் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில் மாணவ-மாணவிகள் கூட்டாக சேர்ந்து இந்த ஆலமரத்துக்கு தண்ணீர் ஊற்றி தழைக்கச்செய்து கொண்டிருக்கிறார்கள். மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் 6-ம் வகுப்பு மாணவி காவ்யதர்ஷினி கூறுகையில், “நான் தினமும் பள்ளி முடிந்தபிறகும், விடுமுறை நாட்களிலும் இந்த ஆலமரத்து நிழலில் தோழிகளுடன் விளையாடி பொழுதை கழித்து வந்தேன். மரம் புயலில் சாய்ந்ததும் மிகுந்த கவலைகொண்டேன். இப்போது மீண்டும் நடப்பட்டு துளிர்விட்டுள்ளதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அது பழையநிலைக்கு திரும்பு வதற்காக சக மாணவிகளுடன் சேர்ந்து தண்ணீர் எடுத்து ஆல மரத்திற்கு ஊற்றி வருகிறேன். மேலும் எங்களது ஊரில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் எங்களுக்கு சொந்தமான இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க முடிவு செய்து உள்ளேன்” என்கிறார்.
இதுபோல புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கரிசக்காடு கிராமத்திலும் கஜா புயலால் சாய்ந்த 100 ஆண்டுகளுக்கும் மேலான ஆலமரத்தை, கிராம மக்கள், இளைஞர்கள் மீண்டும் நிலைநிறுத்தி துளிர்விட செய்துள்ளனர்.
உயிர்ப்பிக்கும் முறை
பெரம்பலூர் மாவட்டம் சு.ஆடுதுறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பட்டுப்போன பழமையான ஆலமரத்தை உயிர்ப்பிக்கும் முயற்சியில் மாணவ-மாணவிகளும் கிராம மக்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். சென்னையை சேர்ந்த பொறியாளர் சோழன் ஆலோசனைப்படி, ஆலமரத்தை சுற்றிலும் அதன் வேர்ப்பகுதி தெரியும்வகையில் 2 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. பசுஞ்சாணம், பஞ்சகவ்யம், நிலவேம்பு ஆகியவை கொண்ட கலவை, வேர்ப்பகுதி முதல் மரத்தின் 8 அடி உயரம் வரை பூசப்பட்டது. பின்னர் அதன்மீது வைக்கோல்பிரி கொண்டு சுற்றிக்கட்டினார்கள். மேலும் குழியில் சாணக்கரைசல், களிமண் கரைசல், இயற்கை உரங்கள் மற்றும் தண்ணீர் போன்றவை போதுமான அளவு ஊற்றப்பட்டது. தற்போது ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர்விட்டு பராமரித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த மரம் ஒருசில மாதங்களில் மீண்டும் துளிர்விடத் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comment here