தமிழகம்

மதுரையில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு தனிக்குழு அமைத்து தடுக்க திட்டம்

மதுரை:

மதுரையில் கண்காணிப்பு, விழிப்புணர்வை மீறி குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. இதை தடுக்க போலீஸ், சமூகநலத்துறை அலுவலர்களை கொண்ட தனிக்குழு அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வறுமை, குடும்பச்சூழல், உறவுகள் விட்டு போகாமை போன்ற காரணங்களால் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் நடத்தப்படுகிறது. இது சட்டப்படி குற்றம் என்றாலும், மாவட்டத்தின் சில பகுதிகளில் சத்தமின்றி நடந்து வருகிறது. குறிப்பாக, மேலுார், உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதி கிராமங்களில் இத்திருமணங்கள் நடப்பதாக அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தாண்டில் கடந்த ஜனவரி யில் இரு குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளது. பிப்., – 6, மார்ச் – 11, ஏப்., – 6, மே – 9 திருமணங்கள் சைல்டு லைன், சமூக நலத்துறை, போலீஸ் உதவியுடன் தடுக்கப்பட்டுள்ளன.
போலீசார் கூறியதாவது: குழந்தை திருமணம் நடத்தியது குறித்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் மணமகன், அவரது பெற்றோரை தொடர்ந்து கைது செய்து வருகிறோம். இருப்பினும் சில இடங்களில் திருமணங்கள் நடக்கின்றன. தகவல் தெரிந்து நாங்கள் சென்றதும், ‘திருமணம் நடக்கவில்லை. நிச்சயார்த்தம் செய்கிறோம்’ என்றுக்கூறி சமாளிக்கின்றனர். இதுபோன்ற நேரங்களில் அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி பெற்று, திருமண வயது வரை கண்காணிக்கிறோம், என்றனர்.
மாவட்ட சமூக நல அலுவலர் ஆனந்தவள்ளி கூறியதாவது: பள்ளிகளில் 8 – 12ம் வகுப்பு படிக்கும் மாணவியரிடம் ’18 வயதிற்கு பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும்’ என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கிராமந்தோறும் நாங்களும், தொண்டு நிறுவனத்தினரும் பிரசாரம் செய்து வருகிறோம். குழந்தை கடத்தலை தடுக்க, ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு உள்ளது போல், குழந்தை திருமணத்தை தடுக்க போலீஸ், சமூகநலத்துறை உள்ளிட்டோரை கொண்ட தனிக்குழு அமைக்க வேண்டும் என கலெக்டர், கமிஷனர், எஸ்.பி.,க்கு பரிந்துரைத்து செய்துள்ளோம். அவர்களும் அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதி அளித்துள்ளனர், என்றார்.

Comment here