மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா செல்ல தடை! – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

5 (100%) 1 vote

மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய நிரந்தரத் தடை கோரி, ஜெகதலபிரதாபன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது: மதுரை ஆதீன மடம் 2500 ஆண்டுகள் பழமையானது. இதன் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர் கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வருகிறார். 2012-ல் பிடுதியில் தியான பீடம் அமைத்துள்ள ராஜசேகர் என்ற நித்யானந்தா ஆதீன மடத்துக்குள் நுழைய முற்பட்டார். சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நித்யானந்தா, தன்னை ஆதீன மடத்தின் 293-வது மடாதிபதியாக பிரகடனப்படுத்திக் கொண்டார். பின்னர் அவரது நியமனம் ரத்து செய்யப்பட்டது. மடத்துக்குள் நுழைய நீதிமன்றம் தடையும் விதித்தது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை மறைத்து ஆதீன மடத்தையும், அதன் சொத்துகளையும் கைப்பற்றும் எண்ணத்துடன் ஆதீன மடத்துக்குள் செல்ல போலீஸ் பாதுகாப்பு கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் நித்யானந்தா வழக்கு தொடர்ந்துள்ளார். மடத்துக்குள் நுழைவதற்கு போலீஸ் அனுமதி வழங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். நித்யானந்தா ஆதீன மடம் உள்பட பல்வேறு சைவ மடங்களை சட்டவிரோதமாக கைப்பற்ற பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகிறார். கர்நாடகாவில் லிங்காயத்து மடத்தை கைப்பற்ற முயன்றபோது பொதுமக்கள் நித்யானந்தாவை விரட்டி அடித்தனர். தற்போது மதுரை ஆதீனம் மடத்தை அபகரிக்க முயல்கிறார். ஆதீன மடத்துக்குள் நுழையவும், அருணகிரி நாதரின் நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவுக்கு தடை விதிக்கவும், நித்யானந்தாவிடமிருந்து ஆதீன மடத்தை பாதுகாக்கவும், மடத்துக்குள் அவர் நுழைய நிரந்தர தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது,

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை விதித்தது. மேலும், ஆதீன நிர்வாகத்தில் தலையிட நித்யானந்தா மற்றும் அவரின் சீடர்களுக்குத் தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.அதுமட்டுமல்லாமல், இவ்வழக்கில் தலைமைச் செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டும், இதுதொடர்பாக நித்யானந்தா தரப்பில் விளக்கமளிக்க உத்தரவிட்டும் வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*