பொது

மனிதக் கழிவு மூலம் உணவுப்பழக்கம் பற்றிய ஆய்வு

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் உள்ள ஓர் ஆய்வகத்தில், வழக்கத்திற்கு மாறான சில சோதனைப் பொருள்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன: ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினருக்கு மேற்பட்டோரின் மனிதக் கழிவுகள் அங்கு சேமித்து, பத்திரப்படுத்தப் பட்டுள்ளன.

நாடு முழுவதிலும் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள், உறைய வைக்கப்பட்டு இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

வேறுபட்ட சமூக வர்க்கத்தினரின் உணவுப் பழக்கங்களைப் பற்றி அறிவதற்கு உதவும், புதையல்களாக அவை கருதப்படுகின்றன. அவற்றை எல்லாம் சேகரிப்பதன் முக்கிய காரணம்?

ஆய்வாளர் ஜேக் ஓ’ப்ரையனும், பி.எச்டி மாணவர் பில் ச்சோய் என்பவரும், ஆஸ்திரேலியாவில் 2016இல் நடந்த தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இந்த மாதிரிகளைச் சேகரித்தனர். இது மாதிரியான முதலாவது ஆய்வாக இது அமைந்துள்ளது.

வெவ்வேறு உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் பழக்கங்களை அறிவதற்காக ஆஸ்திரேலியா முழுக்க, பல தரப்பு மக்களின் கழிவுநீரை ஆய்வு செய்வது இதன் அடிப்படையாக உள்ளது. உயர் சமூக பொருளாதார தட்டு மக்களிடம் நார்ச்சத்து மிகுந்த, சிட்ரிக் அமிலம் உள்ள உணவுகளை உண்ணுதல் மற்றும், காஃபி அருந்தும் உணவுப் பழக்கம் அதிகமாக இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

குறைந்த சமூகப் பொருளாதார மக்கள் பகுதியில், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட ரசாயன மருந்துகள் உபயோகம் அதிகமாக இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். சுருக்கமாகக் கூறினால், பொருளாதார நிலை உயர்வாக இருந்தால், அவர்களுடைய உணவுப் பழக்கம் ஆரோக்கியமானதாக உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த அனைத்து தகவல்களுமே அந்த மக்களின் மனிதக் கழிவுகளை ஆய்வு செய்ததன் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

Comment here