தொழில்நுட்பம்

மனிதனின் நினைவுத்திறனில் இயங்கும் ரோபோ

உடலளவில் பலவீனமாக இருந்தாலும் கூட புத்திசாலிகள் பலசாளிகள்தான்.

ஆக, ஒருவரின் உடல் மொத்தத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூளையே இந்த உலகத்தை கட்டி ஆள்கிறது. ஆனால், விபத்து அல்லது நோய்கள் போன்ற திடீர் ஆபத்துகளால் அந்த மூளைக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டு மொத்த உடலும் செயலிழந்து போகும் கையறுநிலையும் மனிதர்களுக்கு ஏற்படுகிறது என்பது ஒரு கசப்பான உண்மைதான். அத்தகைய மூளை பாதிப்புகளுக்கு உள்ளான நோயாளிகளின் கை-கால் மற்றும் இதர உடல்பாக செயலிழப்புக்கு ஒரு மாற்று வசதி ஏற்படுத்த மூளையால் கட்டுப்படுத்தப்படும் செயற்கை கை-கால்களை உருவாக்குவது என்பது நரம்பியல் ஆய்வாளர்களுக்கு முன்னே இருக்கும் ஒரு நீண்டகால சவால்.

அதில் நரம்பியல் மருத்துவர்கள் ஓரளவுக்கு வெற்றி கண்டிருப்பதன் காரணமாக, அதி நவீன மூளைக்கட்டுப்பாட்டு செயற்கை கை-கால்கள் (ரோபாட்கள்) இன்று பல மூளை பாதிப்பு நோயாளிகளுக்கு உதவி வருகிறது. இருப்பினும், அத்தகைய ஹை-டெக் கருவிகள் முழுமையாக செயல்பட மூளை அறுவை சிகிச்சை செய்து மூளைக்குள் உட்பொருத்தி அல்லது இம்ப்ளான்ட் (implant) எனும் கருவியை பொருத்தியாக வேண்டும்.

மூளை உட்பொருத்தி சிகிச்சைகள் மிகவும் ஆபத்தானவை மற்றும் எக்கச்சக்கமாக செலவு பிடிப்பவை என்பதால் அது சாமானியர்களுக்கான சிகிச்சை அல்ல. சரி இதற்கு வேறு என்ன வழி இருக்கிறது? என்று கேட்டால், தலையில் மாட்டிக்கொள்ளும் கருவி மூலம் மூளை அலைகளை கவர்ந்து அதனடிப்படையில் செயற்கை பாகங்களை இயக்கும் கருவிகளைக் கூறலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த கருவிகள் செயற்கை பாகங்களை சரியாக இயக்குவதில்லை என்பதே இதுவரையிலான உண்மை.

இந்தநிலையில் அமெரிக்காவில் உள்ள கார்னெகி மெல்லான் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த ரோபாட் விஞ்ஞானி பின் ஹி தலைமையிலான ஆய்வுக்குழுவினர் மூளை உட்பொருத்தி இல்லாமலேயே மூளையால் கட்டுப்படுத்தப்படும் செயற்கை கை (robo Arm) ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

மூளையின் கட்டளைகளை மிகவும் துல்லியமாக ஏற்று அதன்படி இயங்கும் இந்த செயற்கை கையின் செயல்பாடு. மூளை உட்பொருத்தியின் உதவியுடன் இயங்கும் ரோபோவுக்கு இணையாக இருந்தது இந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமாக, ஆழ் மூளையில் உள்ள மூளை அலைகளை கண்டறிந்து அவற்றை எந்திர கற்றல் உத்திகளின் (machine learning techniques) உதவியுடன் இந்த செயற்கை கை ரோபோ செயல்படுகிறது. இந்த புதிய தொழில்நுட்பம் மூளை-கம்ப்யூட்டர் இடைமுக (brain-computer interface-BCI) கருவிகளின் எதிர்காலத்தை பல மடங்கு மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

மிகவும் முக்கியமாக, சுமார் 68 தன்னார்வலர்களைக் கொண்டு சுமார் 680 முறை பரிசோதிக்கப்பட்டுள்ள இந்த புது வகை மூளைக் கட்டுப்பாட்டு செயற்கை ரோபோ, மிகவும் துல்லியமாக செயல்பட்டது இந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தற்போது பக்கவாதம் உள்ளிட்ட வாத நோய்களால் பாதிக்கப்பட்டு கை-கால் செயலிழப்பு கொண்டவர்களுக்கு உதவுவதற்காக மட்டுமே பெரும்பாலான மூளை-கட்டுப்பாட்டு ரோபாட்டுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கத்தியின்றி-ரத்தமின்றி (அதாவது அறுவை சிகிச்சையின்றி) மூளையால் கட்டுப்படுத்தப்படும் ரோபாட்டுகளை இயக்கும் இந்த புதிய தொழில்நுட்பம் முழுமையாக வெற்றியடைந்தால் மூளை பாதிப்பு நோயாளிகள் மட்டுமல்லாமல், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் மூளை உட்பொருத்தி இல்லாமல் இயங்கும் இந்த மூளைக் கட்டுப்பாட்டு ரோபாட்டுகளை தங்களின் அன்றாட வாழ்க்கையில் பயனுள்ள பல வழிகளில் பயன்படுத்தலாம் என்கிறார் பேராசிரியர் பின் ஹி.

அதுமட்டுமல்லாமல், மூளை அறுவை சிகிச்சையின்றி மூளையால் இயக்கப்படும் கருவி தொழில்நுட்பத்தில் ஒரு மைல் கல்லாக கருதப்படும் இந்த புதிய கருவி மற்றும் தொழில்நுட்பம், மிக விரைவில், நம் ஸ்மார்ட்போன்கள் போல நாம் ஒவ்வொருவரும் தினசரி பயன்படுத்தும் ஒரு கருவியாக மாறும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்கிறார் விஞ்ஞானி பின் ஹி. ஆக மொத்தத்தில், இனி வரும் காலங்களில் ஆபத்தில்லாமலேயே நம் மூளையால் பல ரோபாட்டுகளை கட்டுப்படுத்தி இயக்கலாம் என்கிறார் இந்த விஞ்ஞானி.

Comment here