Sliderஇயல்தமிழ்

மறைமலை அடிகள்

 

நெடிய தமிழ் இலக்கிய வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டில் முதல் நான்கு பகுதிகள் முக்கியமானவை. சமயம், இலக்கணம் என்ற வகைமைகளுடன் நின்றுவிடாமல், சமூக சீர்திருத்தம், அரசியல், அறிவியல், இதழியல் என்ற துறைகளில் தமிழ் மொழி அழுத்தமாகத் தடம் பதித்தது இக்கால கட்டத்தில் தமிழ் சார்ந்து உருவான ஒரு முக்கிய இயக்கம் தனித்தமிழ் இயக்கமாகும். வடமொழியின் துணையின்றி தனித்து இயங்கும், ஆற்றல் தமிழுக்கு உண்டு என்பதை நிறுவும் நோக்கில் இவ்வியக்கம் தொடங்கியது. இதன் வெளிப்பாடாக, தமிழ் மொழியில் இடம் பெற்றிருந்த பிறமொழிச் சொற்களைக் களைந்து விட்டு, தமிழ்ச் சொற்களைப் புழக்கத்திற்குக் கொண்டுவரும் முயற்சி உருவானது.இதில் முக்கிய பங்கு வகித்தவர் மறைமலை அடிகள் ஆவார் .
மறைமலை அடிகள் ஒரு புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும்அவ்வாறு செய்ய ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர்

தனித்தமிழ் இயக்கத்தின் அவசியம் இந்த தலை முறையினருக்குமுழுமையாக புரியாது இருக்கலாம் .ஆனால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு உரைநடை தமிழ் நூலைப்பார்த்தால் புரியக்கூடும் .அந்த காலகட்டத்தில் ஒரு பக்கத்தில் இருக்கும் சொற்களில் பாதி அளவு பிறமொழி சொல் கலப்பிருக்கும் .
வேட்ப்பாளர் என்று இப்போதுஎளிமையாக சொல்லும் ஒரு எளிய சொல் அப்போது அபேட்க்ஷகர் என்றும் , ஒரு கட்சி தலைவர்என்பதை அக்கராசனார் என்று எழுதப்படும் .அந்த காலக்கட்டத்தில் இத்தகைய தனித்தமிழ் இயக்கத்தின் அவசியம்அதிகம் இருந்தது .மறைமலை அடிகள்போன்ற பலரும் கடுமையாக உழைத்து , இப்போது இருக்கும் நடை முரைத்தமிழை மீட்டுருவாக்கம் செய்தனர்

.மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம். இவர் 1876 சூலை 15 ஆம் நாள் நாகப்பட்டினம் அடுத்த காடம்பாடியில் . பிறந்தார். இவர் தந்தையார் சொக்கநாதர், தாயார் சின்னம்மையார் மறைமலைஅடிகள், நாகையில் வெசுலியன் தொண்டு நிறுவனக் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளியில் நான்காம் படிவம் வரை படித்தார். அவருடைய தந்தையாரின் மறைவு காரணமாக அவரால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனால்,நாகையில் புத்தகக் கடை வைத்திருந்த தமிழ்ப்புலமை மிகுந்த நாராயணசாமிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். ‘சைவ சித்தாந்த சண்டமாருதம்’ என்று புகழ் பெற்றிருந்த சோமசுந்தர நாயக்கர் அவர்களிடம் சைவ சித்தாந்தம் கற்றார்.
இல் சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். . பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியபின், பல்லாவரத்தில் இராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி22.04.1912-இல் “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” தொடங்கினார். பின்னர் தனித்தமிழ் ஈடுபாட்டால் அதனைப் “பொதுநிலைக் கழகம் “ எனப் பெயர் மாற்றினார். திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார். மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார். மறைமலை அடிகள் “பல்லாவரம் முனிவர்” என்றும் அப்போது குறிப்பிடப்பட்டார்
ஆங்கிலமும், சமஸ்கிருதமும் கட்டாயம் படிக்க வேண்டும். தாய்மொழிப் பாடத்தை விருப்பப்பாடமாக கற்றால் போதும்’ என்று சென்னைப் பல்கலைக்கழகம் தீர்மானம் போட்டபோது, 11 ஆண்டு காலம்அங்கே பணியில் இருந்த மறைமலை அடிகளார், அதை எதிர்த்துத் தன்னுடைய பணியில் இருந்து விலகினார். ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தமிழில் பரவிக் கிடந்ததை உணர்ந்து வருந்திய மறைமலை அடிகள், அதிலிருந்து தமிழை மீட்க முடிவெடுத்தார். வெறும் பேச்சால் மட்டுமே கொள்கைகளைப் பரப்பிவிட முடியாது என்ற தெளிவும் அவரிடம் இருந்ததால்தான் அதற்கு ஒரு முன்னுதாரணமாகச் செயல்படவும் தொடங்கினார். 1916-ல் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார். தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக் காலகட்டத்தில் வழக்கத்திலிருந்த பல வடமொழிச் சொற்கள் வழக்கொழிந்துபோயின. இந்தச் சமயத்தில்தான் தன் பெயரை, ‘மறைமலை அடிகள்’ (வேதம் – மறை, அசலம் – மலை, சுவாமி – அடிகள்) என்று மாற்றிக்கொண்டார். அவரைப் பின்பற்றிப் பல தமிழர்கள் தங்களுக்குத் தூய தமிழில் பெயர் சூட்டிக்கொண்டனர். வார இதழ்களில் ‘முருகவேள்’ என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதினார். 16 வயதில் இந்து மத அபிமான சங்கத்தைத் தோற்றுவித்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1905-ல் சைவ சித்தாந்த மகா சமாஜத்தை ஆரம்பித்தார். 1911-ல் துறவு மேற்கொண்டார்.
அவர் ஆக்கிய நூல்கள்
பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921)
மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, இரு தொகுதிகள் (1933)
மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)
யோக நித்திரை: அறிதுயில் (1922)
தொலைவில் உணர்தல் (1935)
மரணத்தின்பின் மனிதர் நிலை (1911)
சாகுந்தல நாடகம் (சமசுகிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது) (1907)
சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934)
ஞானசாகரம் மாதிகை (1902)
Oriental Mystic Myna Bimonthly (1908-1909)
Ocean of wisdom, Bimonthly(1935)
Ancient and Modern Tamil Poets (1937)
முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் (1936)
முல்லைப்பாட்டு- ஆராய்ச்சியுரை (1903)
பட்டினப்பாலை-ஆராய்ச்சியுரை (1906)
சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் (1911)
முதற்குறள் வாத நிராகரணம் (1898)
திருக்குறள் ஆராய்ச்சி (1951)
முனிமொழிப்ப்ரகாசிகை (1899)
மறைமலையடிகள் பாமணிக் கோவை (பாடல்கள்) (1977)
அம்பிகாபதி அமராவதி (நாடகம்) (1954)
கோகிலாம்பாள் கடிதங்கள் (புதினம்) (1921)
குமுதவல்லி: அல்லது நாகநாட்டரசி (புதினம்) (1911)
மறைமலை அடிகள் கடிதங்கள் (1957)
அறிவுரைக் கொத்து (1921)
அறிவுரைக் கோவை (1971)
உரைமணிக் கோவை (1972)
கருத்தோவியம் (1976)
சிந்தனைக் கட்டுரைகள் (1908)
சிறுவற்கான செந்தமிழ் (1934)
இளைஞர்க்கான இன்றமிழ் (1957)
திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை (1900)
மாணிக்க வாசகர் மாட்சி (1935)
மாணிக்க வாசகர் வரலாறும் காலமும் (இரு தொகுதி) (1930)
மாணிக்க வாசகர் வரலாறு (1952)
சோமசுந்தரக் காஞ்சியாக்கம் (1901)
சோமசுந்தர நாயகர் வரலாறு (1957)
கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா (1968)
திருவாசக விரிவுரை (1940)
சித்தாந்த ஞான போதம், சதமணிக்கோவை குறிப்புரை (1898)
துகளறு போதம், உரை (1898)
வேதாந்த மத விசாரம் (1899)
வேத சிவாகமப் பிராமண்யம் (1900)
Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge (1940)
சைவ சித்தாந்த ஞானபோதம் (1906)
சிவஞான போத ஆராய்ச்சி (1958)
Can Hindi be a lingua Franca of India? (1969)
இந்தி பொது மொழியா ? (1937)
Tamilian and Aryan form of Marriage (1936)
தமிழ் நாட்டவரும், மேல்நாட்டவரும் (1936)
பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் (1958)
வேளாளர் நாகரிகம் (1923)
தமிழர் மதம் (1941)
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் (1906)
ஆகிய 54 நூல்களை எழுதியுள்ளார்.
இலக்கியம், மறைபொருளியல், மருத்துவம், சங்க இலக்கிய ஆய்வு, புதினம், பாடல், நாடகம், கடிதம், கட்டுரை, தத்துவம், வரலாறு, சமூகவியல் எனப் பலவகைகளில் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழுலகுக்கு அளித்துள்ளார்.
இவைகளில் மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)
யோக நித்திரை: அறிதுயில் (1922)
தொலைவில் உணர்தல் (1935)
மரணத்தின்பின் மனிதர் நிலை (1911) போன்ற நூல்கள் நான் மாணவனாக இருந்த போது 1965 களில் கூட புகழ் பெற்றிருந்தது .இத நூல்களை சிதம்பரம் கிளை நூலகத்தில் இருந்து பெற்று பல முறை படித்ததுண்டு .இந்த கருத்துக்களை பற்றி வியப்புடன் பேசிக்கொள்வோம் அத்தனை புதிய செய்திகளாக அப்போது அவைகள் இருந்தது .
சுருங்கக் கூறின், ‘தமிழ்’, ‘தமிழர்’ என்ற அடையாளங்களை சைவத்துடன் அவர் இணைத்தார். சைவமே தமிழர்களின் சமயம் என்பது அவரது கருத்தாக இருந்தது
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ என்று அழைக்கப்பட்ட மறைமலை அடிகள், 1950-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார்.
‘‘தமிழில் பிறமொழிக் கலப்பை ஒதுக்கித் தள்ளுங்கள். தமிழின் சுவையை மாற்றாதீர்கள்…’ என்கிற மறைமலை அடிகளாரின் கூற்றுப்படிதமிழ் இப்போதும் வாழவில்லை இப்போதும் ஆங்கிலக்கலப்பினால் 
தமிழ் பொலிவிழந்து வருகிறது .தொலைகாட்சி வர்ணனையாளர்கள் சற்று மனது வைக்கவேண்டும் .
                                                      -அண்ணாமலை சுகுமாரன் 

Comment here