அரசியல்

மழைநீர் சேகரிப்பு அமைக்க வேண்டும் அமைச்சர் கோரிக்கை

ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களை புனரமைத்து, அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி அலுவலக வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், பூங்காக்களில் மழைநீரை சேகரித்து, அதனை அங்கேயே பயன்படுத்துதல் மற்றும் கோவில் குளங்களை புனரமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மழைநீர் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்யவும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்படாத கட்டிடங்களில் புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், மாநகராட்சியின் மண்டல அதிகாரி தலைமையிலும், சென்னை குடிநீர் வாரியத்தின் வட்டார என்ஜினீயர் தலைமையிலும் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, வார்டு வாரியாக ஒரு குழு வீதம் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு ஒரு வார்டுக்கு ஆயிரம் கட்டிடங்கள் வீதம் 200 வார்டுகளில் 2 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நாள் வரை இந்த குழு சுமார் 1 லட்சத்து 10 ஆயிரத்து 674 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளனவா? என ஆய்வு மேற்கொண்டுள்ளது.

இதில் 56 ஆயிரத்து 740 கட்டிடங்களில் ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் நல்ல நிலையில் உள்ளன. மேலும் 16 ஆயிரத்து 65 கட்டிடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையிலும், 37 ஆயிரம் 869 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட வேண்டிய நிலையும் உள்ளது. மழைநீர் சேமிப்பின் அவசியம் பற்றியும், அதனால் நமக்கு மட்டுமின்றி, நம் அடுத்த தலைமுறைக்கும் விளையும் பயன்கள் பற்றியும் அனைவரும் அறிந்ததே. ஆனால், மழைநீர் சேமிப்பை ஒரு குழுவோ, ஒரு அமைப்போ, ஒரு அரசோ செய்து முடிப்பது அவ்வளவு சுலபமல்ல. அவரவர் இருப்பிடத்தில் மழைநீரை சேமிப்பதே இதற்கு நிரந்தரத் தீர்வாகும்.

இதை கருத்தில் கொண்டு மக்கள் அனைவரும் வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன்பே, அனைத்து கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment here