சம்பவம்

மாணவியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர்கள் கைது

Rate this post

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளிடம் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களிடம் பணம் பறித்துள்ளனர். இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, சித்தரவதை செய்த சம்பவங்களை வீடியோவும் எடுத்து உள்ளனர். இது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணையை சிபிஐ மேற்கொள்கிறது. இந்நிலையில் இதுபோன்ற சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் 19 வயது கல்லூரி மாணவியை காரில், 5 மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வாட்ஸ்-அப்பில் இந்த வீடியோ பரவியுள்ளது. இதனை கண்காணித்த போலீஸ் மாணவியிடம் பேசியுள்ளது. இச்சம்பவம் ஏப்ரல் தொடக்கத்தில் நடந்தது தெரியவந்துள்ளது. வீடியோ வெளியானதும் தாமாகவே முன்வந்து விசாரிக்க தொடங்கிய போலீசார், இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர். மாணவர்களை அடையாளம் காணும் பணியை தொடங்கினர்.

இறுதியில் கல்லூரி மாணவர்களான 19 வயதுடைய பிரக்யாத், குருநந்தன், சுனில், பராஜ்வால், கிஷான் என 5 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் புத்தூரை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மாணவியும், மாணவர்களும் ஒரே கல்லூரியில் படித்துள்ளனர். அவர்கள் ஒரே பிரிவில் படிக்கவில்லை என்றாலும், நண்பர்கள் என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி பேசுகையில், வீடியோவை வெளியே விடுவோம் என மிரட்டினர். யாரிடமும் தெரிவிக்க கூடாது என மிரட்டினர். பயம் காரணமாக யாரிடமும் தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார் என போலீஸ் தெரிவித்துள்ளது. வீடியோவை பரப்பிய வாட்ஸ்-அப் குழு மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸ் தெரிவித்துள்ளது.

Comment here