இந்தியா

மாநிலங்களவை துணைத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தேர்வு!!

Rate this post

நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.ஜே.குரியன் ஜோசப்பின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இவர் கடந்த 1980ம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை 6 முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். அதன்பின்னர் கடந்த 2005 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மேலவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறும் என அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்திருந்தார். இதனால், அடுத்த துணைத் தலைவர் பதவிக்கு தே.ஜ கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர் ஹரிவன்ஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் உறுப்பினர் ஹரிபிரசாத் வேட்பாளராக நியமிக்கப்பட்டார். இவர்களுக்கு இடையே நேரடி தேர்தல் மாநிலங்க ளவையில் நேற்று நடந்தது. அவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 244. ஒரு சிலர் அவைக்கு வராமலும், ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமலும் இருந்தனர். இதன் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டன.

இதில் தே.ஜ கூட்டணி வேட்பாளர் 125 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஹரிபிரசாத் 105 ஓட்டுகள் பெற்றார். இதையடுத்து ஹரிவன்ஸ்க்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். துணைத் தலைவருக்கான இருக்கையில் ஹரிவன்ஸை, அருண் ஜெட்லி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார், குலாம் நபி ஆசாத் ஆகியோர் அழைத்துச் சென்று அமரவைத்தனர்.ஹரிவன்ஸை வாழ்த்தி பிரதமர் மோடி பேசுகையில், ‘‘பத்திரிக்கை யாளராக 40 ஆண்டுகளாக பணியாற்றி பல சாதனைகள் படைத்தவர் ஹரிவன்ஸ். அவர் அவையில் அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிய வாய்ப்புகளை வழங்குவார்’’ என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், ‘‘எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது பிரச்னைகளை எழுப்ப புதிய துணை தலைவர் ஹரிவன்ஸ் போதிய வாய்ப்புகளை வழங்குவார் என நம்புகிறேன்’’ என்றார். அருண் ஜெட்லி பேசுகையில், ‘‘யாரையும் தனிப்பட்ட முறையில் ஹரிவன்ஸ் தாக்கி பேசியதில்லை. அவர் அவையை சிறப்பாக நடத்துவார்’’ என்றார். மாநிலங்களவை துணைத் தலைவராக பதவி ஏற்றபின் பேசிய ஹரிவன்ஸ், ‘‘அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் சுற்றியிருப்பது, ஒருபுறம் பயமாகவும் இருக்கிறது. அதுவே எனக்கு பலமாகவும் இருக்கிறது. இந்த அவையை நியாயமாகவும், நாகரீகமாகவும் நடத்துவேன்’’ என்று தெரிவித்தார்.

Comment here