விளையாட்டு

முதல்வர் ஆசைக்காட்டி டோனிக்கு வலை வீசும் பாஜக

புதுடெல்லி,

உலக கோப்பை தொடரில் வரிசையாக பல போட்டிகளில் டோனி மிகவும் பொறுமையாக ஆடினார். ஆப்கானிஸ்தான் போட்டியில் டோனி சரியாக ஆடவில்லை. இதனால் டோனியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் சச்சின் . டோனி ஒரு மூத்த வீரர். அதற்கு ஏற்றபடி அவர் ஆட வேண்டும். கொஞ்சம் பாசிட்டிவாக அவர் ஆட வேண்டும். டோனி பொறுப்பாக ஆட வேண்டும், மெதுவாக ஆட கூடாது என்று சச்சின் குறிப்பிட்டார்.

சச்சினின் இந்த கருத்து பெரிய சர்ச்சையானது. பலர் டோனிக்கும், சச்சினுக்கும் இடையில் பெரிய பிரச்சினை நிலவுகிறது என்று கூறி இருந்தனர். ரசிகர்களும் மாறி மாறி சண்டை போட்டனர். இந்த நிலையில் டோனி பதவி விலக போகிறார். இந்த உலக கோப்பை தொடர்தான் அவருக்கு கடைசி தொடர். இந்த தொடரின் இறுதியில் அவர் ஓய்வு பெறுவார் என்று அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வந்தன.

இந்த நிலையில் சச்சின் நேற்று டோனியின் பிறந்த நாள் அன்று செய்த டிவிட் பெரிய சர்ச்சையாகி உள்ளது. அதில் பிறந்த நாள் வாழ்த்துகள் டோனி. இந்த வருடம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். அடுத்த இரண்டு போட்டிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த ஜூலை 7ம் தேதியுடன் டோனிக்கு 38 வயது ஆகிறது. அவர் ஓய்வு பெறுவதற்கு இதுவும் ஒரு காரணம். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் டோனி. ஓய்வுக்கு பிறகு டோனி அரசியலில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது. அவர் பாரதீய ஜனதாவில் சேரலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்த உறுதியான தகவல்கள் இல்லை.

கடந்த லோக்சபா தேர்தலில் ஜார்க்கண்டில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் 11ல் பா.ஜ. வெற்றி பெற்றது. ஆனால் வர இருக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும் என பா.ஜ., நினைக்கிறது. ஆளும் பா.ஜ. அரசு மீது அதிருப்தியும், பழங்குடியினர் மத்தியில் வெறுப்பும் காணப்படுகிறது. இதையெல்லாம் பாஜக சரி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

ஏற்கனவே பாரதீய ஜனதாவில் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், கிழக்கு டில்லியில் இருந்து எம்.பி.யாகி விட்டார். அதே பாணியில் டோனியையும் கொண்டு வரும் வேலைகளை பாஜக செய்ய துவங்கி விட்டது. டில்லி பா.ஜ. எம்.பி.யான மனோஜ் திவாரி, டோனிக்கு நெருக்கமானவர்.

கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது கூட, டோனியை ஒரு முறை அமித்ஷா சந்தித்து பேசினார். அப்போது இருந்தே, பாஜக வில் டோனி சேருவார் என்ற பேச்சு அடிபடத் துவங்கியது. ஏற்கனவே இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்திய பாஜக மூத்த நிர்வாகிகளிடம், உலக கோப்பை முடியும் வரை பொறுத்திருக்குமாறு டோனி கேட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டது.

கட்சியில் சேர்ந்த பிறகு ஜார்க்கண்டில் என்ன மாதிரியான வேலைகளை டோனிக்கு கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்படும். அம்மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் குறைந்தது 65 தொகுதிகளிலாவது ஜெயிக்க வேண்டும் என்று பா.ஜ. விரும்புகிறது. இதில் ஒரு திட்டம் தான் டோனியை கட்சியில் சேர்ப்பது.

பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, டோனி அரசியலில் சேர விருப்பம் காட்டியுள்ளார் என்று கூறினார். மேலும் “நாங்கள் முன்னாள் கேப்டனுடன் வழக்கமான தொடர்பில் இருக்கிறோம். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பின்னர் அவர் பாஜகவில் சேருவார். சேரும் தேதி டோனியால் தீர்மானிக்கப்படும்” என்றும் அவர் கூறினார். டோனி ஏன் பாஜகவில் சேருவார் என்று கேட்டதற்கு ‘பாஜக தேசியவாதத்தை நம்புவதால்’ என்றார்.

இதுகுறித்து ஜார்க்கண்ட் மாநில பாஜக, டெல்லி தலைமை பாஜகவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

அதில் கடந்த 2000-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்து பாஜகவை சேர்ந்தவர்களே இங்கு அதிகமுறை முதல்வர்களாக இருந்துள்ளனர். சில தருணங்களில் பாஜகவின் ஆதரவோடு கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் முதல்வராக இருந்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக மாநிலம் நம்முடைய வசமே உள்ளது.

விரைவில் வர இருக்கும் சட்டப்பேரவை தேர்தலிலும் அதை நாம் தொடர வேண்டும். ஆனால், தொடர்ச்சியாக மாநிலத்தில் நாம் வெற்றிபெற்று வரும் சூழ்நிலையில், அரசுக்கு எதிரான மனநிலையை பொதுமக்கள் வெளிப்படுத்த வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும், நாடு முழுவதும் காங்கிரஸ் பெற்ற தோல்வியினால் ஏற்பட்ட பொதுமக்களின் அனுதாபம் சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலித்தால் நம்முடைய வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகும்.

எனவே, இவை அனைத்தையும் மீறி நாம் வெற்றி பெற வேண்டும் என்றால், மாநிலத்தில் அசைக்க முடியாத ஆதரவு உள்ள டோனியை நம்முடைய கட்சியின் சார்பாக களம் இறக்கினாலோ அல்லது முதல்வர் வேட்பாளராக முன் மொழிந்தாலோதான் எளிதாக நாம் வெற்றி பெறலாம். அதற்கான வாய்ப்பை நாம் உருவாக்கினால், யாரும் எதிர்பாராத வகையில் பிரமாண்டமாக வெற்றியை மாநிலத்தில் பெறலாம் என கூறப்பட்டு உள்ளது.

Comment here