சினிமா

முதல் பார்வை: தொடரி – ஒரு நீண்ட பயணம்!

ரயில் பயணிகளையும், காதலியையும் காப்பாற்றப் போராடும் சாதாரண மனிதனின் த்ரில் முயற்சி ‘தொடரி’.

ரயில்வே கேன்டீனில் ஊழியராகப் பணியாற்றுகிறார் தனுஷ். பிடித்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு ஒரு குடும்பத்தை உருவாக்குவதுதான் தனுஷின் விருப்பம். இதனிடையே கீர்த்தி சுரேஷைக் கண்டதும் காதல்வயப்படுகிறார். அதற்குப் பிறகு சில தடைகள் வருகின்றன. சில பல ஆபத்துகளை தனுஷ் சமாளித்தாரா? த்ரில் பயணம் என்ன ஆனது? என்பதே மற்றவை.

யானையும், மலை சார்ந்த இடமும், காதலும் கடல் சார்ந்த இடமும் என படம் இயக்கிய பிரபு சாலமன் இந்த முறை ரயிலும், ரயில் சார்ந்த காதலும் என என புறப்பட்டு இருக்கிறார். அந்த பயணத்தில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ரயில்வே ஊழியராக வரும் தனுஷ் படத்தின் கதை நகர்த்தலுக்கு உதவியாய் இருக்கிறார். வழக்கம்போல நாயகனுக்கான அம்சங்களை குறைவில்லாமல் செய்யும் தனுஷ், கீர்த்தி சுரேஷை காதலுடன் பார்க்கும்போது மட்டும் கூடுதல் பிரகாசம். ஆனால், இந்தக் கதைக்கு தனுஷ் ஏன் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. தனுஷுக்கு அந்த அளவுக்கு வலுவான சங்கதிகள் படத்தில் இல்லை.

கீர்த்தி சுரேஷ் தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தை சரியாகக் கையாண்டிருக்கிறார். வெகுளியும், வெள்ளந்தித் தனமான மனமும் கொண்டவர் என்பதைக் காட்சிக்கு காட்சி பதிவு செய்யும் விதம் ரசிக்க வைக்கிறது. ஜெனிலியா, லைலா மாதிரியான கதாநாயகி பாத்திரம் என்றாலும், அதில் எமோஷன் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார்.

கருணாகரனின் கவிதைத் தருணங்கள், ராதாரவி வரும் காட்சிகள் படத்தை சுவாரஸ்யம் ஆக்குகின்றன. தம்பி ராமையா ஓரிரு இடங்களில் மட்டும் ஸ்கோர் செய்கிறார். மற்ற இடங்களில் டார்ச்சர்தான். ஹரிஷ் உத்தமன் தன் பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்.

கணேஷ் வெங்கட்ராமன், சின்னி ஜெயந்த், இயக்குநர் வெங்கடேஷ், தர்புகா சிவா, அஸ்வின், போஸ் வெங்கட், பிரேம் ஆகியோர் பெருங்கூட்டத்தின் நடுவே வந்து போகிறார்கள்.

வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு சுமார் ரகம். கண்களைக் கடத்த வேண்டிய கேமரா தேமே என்று நகர்கிறது. தாஸின் எடிட்டிங்கில் ஜெர்க், ஜம்ப், கன்டியூனிட்டி மிஸ் ஆகிறது. படத்தின் நீளம் சலிப்பையும், சோர்வையும் வரவழைக்கிறது.

இமானின் இசை படத்தை தூக்கி நிறுத்தப் பயன்படுகிறது. ‘போன உசுரு வந்துடுச்சு’ என்ற பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் படத்துடன் பொருந்திப் போகிறது.

ஆர்.வி.உதயகுமார், போஸ் வெங்கட், ஹரிஷ் உத்தமன் என்ன ஆகிறார்கள்? நெருக்கடி நிலையிலும் கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட போலீஸார் வெறுமனே பேசிக் கொண்டே இருப்பது ஏன்? தம்பி ராமையா, கீர்த்தி சுரேஷை சந்தேகப்படும் காட்சிகளில் அமெச்சூர்தனம் தெரிகிறது.

ஊடகங்களை நம்பி ஒரு போலீஸ் அதிகாரி ஒரு முடிவுக்கு வருவது, டிவிக்கு எந்த பொறுப்பும், பொதுநலனும், பொதுப்புத்தியும் இல்லை என்று காட்டுவது, வெகுவேகமாக ஓடும் ரயிலை ஊடகங்கள் காட்சிப்படுத்துவது, தீயணைப்பு வாகனங்கள் சரியாக தீப்பிடித்த ரயிலில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது, அந்த அவசர சூழலில் நிகழும் காமெடி- காதல் காட்சிகள் என பல அம்சங்கள் படத்தின் நேர்த்தியை, நம்பகத்தன்மையை குறைக்கின்றன. கதை எதை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதில் இயக்குநர் குழம்பி இருக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகள் அப்பட்டமாகத் தெரிகின்றன.

காதல், லொக்கேஷன், எமோஷன் இந்த மூன்றும் தான் பிரபு சாலமனின் பலம். ஆனால், அடுத்தடுத்த படங்களில் லொக்கேஷனை மட்டும் மாற்றி மற்ற இரண்டையும் ரிப்பீட் செய்வதால் பார்வையாளர்கள் அலுப்புடன் அப்பீட் ஆகிறார்கள். இனியாவது பிரபு சாலமன் இதை கவனத்தில் எடுத்துக்கொள்வது நல்லது.

மொத்தத்தில் ‘தொடரி’ நீ…….ண்ட பயணத்துக்கான நோக்கத்தை பாதியளவே அடைந்திருக்கிறது.

Comment here