மும்பையில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் இஃப்தார் விருந்து!

Rate this post

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் முதல்முறையாக இஃப்தார் விருந்து அளிக்கப்படுகிறது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்ஃனவிஸ் தலைமையில் பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் இஃப்தார் விருந்து அளிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்.ஸின் துணைப் பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் (எம்.ஆர்.எம்) சார்பில் மும்பையில் இஃப்தார் விருந்து அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, எம்.ஆர்.எம். அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் விராக் பச்போரே கூறியதாவது:- ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பாக, ஜூன் 4-ஆம் தேதி மும்பை மலபார் ஹில் பகுதியிலுள்ள விருந்தினர் மாளிகையில் இஃப்தார் விருந்து அளிக்கப்படுகிறது. இந்த விருந்தில் பங்கேற்கும்படி 30 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த 200 முக்கிய பிரமுகர்கள், இதர சமுதாயத்தைச் சேர்ந்த 100 பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பு அல்ல. அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில் அமைதி, நம்பிக்கை, சகோதரத்துவத்தை ஏற்படுத்தவே ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது.

நாட்டின் நிதி சார்ந்த தலைநகரம் மும்பை. இங்கு பல நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள், சினிமா துறையில் முக்கிய அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரமுகர்கள் பலர் மும்பையில் வசித்து வருகின்றனர். இந்த இஃப்தார் விருந்தின் மூலம் அவர்களிடம் கலந்துரையாடவுள்ளோம் என்றார் விராக் பச்போரே.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் வட இந்தியாவில் கடந்த 2015-லிருந்து இஃப்தார் விருந்து அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மும்பையில் முதல்முறையாக இந்த விருந்து இந்த ஆண்டு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*