Uncategorized

மூங்கில் உடன் பிணைந்த வாழ்க்கை

Rate this post

மூங்கில் பொதைகள் இந்த பகுதியில் அதிகம் இருந்தது. விளை நிலங்களில் பாதுகாப்பு அரணாக இன்றும் விளங்குகிறது. கோடை காலங்களில் மூங்கில் வெட்டி, கழித்து வளைவு இருந்தால் படிய வைத்தும் (நிமிர்த்துதல்)நேராக்கும் வழக்கம் இன்னும் உள்ளது. மூங்கில் 2 வகை. ஓன்று போல் (குழாய்) மூங்கில். மற்றது கல் என்கிற கல்லங்கழி(கெட்டி) மூங்கில். போல் மூங்கிலில் உள்ளே துவாரம் இருக்கும். கழி தடித்து உள்ளே துவாரம் சிறிய அளவில் இருக்கும்.

போல் மூங்கிலை பிளந்து, தட்டி கட்டுவர். கிழித்து முறம், தாங்கறா( 2.5 அடிக்கு 2.5 அடியில் நான்கு புறமும் 3,4 அங்குலம் மடிக்கப்பட்டு உயர்ந்த) பின்னி வைத்து விற்பனை செய்வது உண்டு. இதனை பொருட்களை காற்றில் சிதறாமல் வெயிலில் காய வைத்து எடுக்கவும் பயன்படுத்திவர். கூடைகள் பின்னியும் பொருட்களை வாரி சேகரிக்கவும், அரிசி போன்ற தானியங்கள் நீரில் கழுவிய பின், வடிகட்டவும் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றை செய்வதற்கு என்றே மலைக்குறவர் இனம் உள்ளது. இவர்களுக்கு இந்த தொழிலில் கிடைக்கும் வருவானம் வாழ்க்கை நடத்த உதவி வந்தது. இந்த பகுதியிலும் இந்த இன மக்கள் இருந்துள்ளனர்.
கல்லங்கழியில் இருகழியை 3/4( முக்கால்) அடி, ஒரு அடி உயரத்திற்கு ஒரு இடத்தில் துளையிட்டு, மூங்கில் கல்லங்கழியிலே பிளந்து சீவப்பட்ட 1.5 அடி பட்டைகள இருபுறமும் பக்கத்திற்கு 3 அங்குலம் கழியில் செருகி ஏணி கட்டுவர். தேவையான உயரத்திற்கு குறைந்தது 10 அடி முதல் 20 அடிவரை செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

மூங்கிலில் கழித்து எடுக்கப்பட்ட முள் படியவைத்து படல் (தட்டி)கட்டி தோட்டங்கள் பாதுகாக்கும் வேலி அமைத்து வீட்டு மற்றும் காட்டு விலங்குகள் உள்ளே புகாமல் அமைப்பர்.கூண்டு என்பது படலை வளைத்து வட்ட வடிவில் கட்டுதல். செடிகள், மரக்கன்று சாலை ஓரத்திலும் நட்டு, படலை வளைத்து கூண்டு(கு(கொ)டல்) போன்றும் கட்டி வைப்பர். தற்போது வண்டிகளில் ஏற்றி வந்து ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வருகின்றனர். கழிகளை வீடுகளுக்கு கூரை அமைக்க பயன்படுத்தி வருகின்றனர்.

மூங்கில் தீ பிடித்து வெடிக்கும் சில சமயங்களில் (நேரத்தில்) நன்றாக காய்ந்து போனால் மூங்கில் காற்றில் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து, அதனால் வெப்பம் அதிமாகி தீப்பற்றி எரியும். மூங்கில் எரியும் போது அதன் கணுக்கள் உள்ள இடத்தில் கிழிந்து மிகுந்த சத்தத்துடன் வெடிக்கும்.

எரிந்த மூங்கில் வெடித்து பிரிந்து, நெருப்புடன் காற்றின் வேகத்திற்கு தக்கவாறு ஒரு மைல்(சுமார் 1.25 கிலோமீட்டர்) தூரம் பறந்து சென்று விழும். பொதுவாக தீப் பிடித்து எரியும்போது அங்கு வெற்றிடம் ஏற்படும். அதை நிரப்புவதற்கு காற்று வெளியில் இருந்து வேகமாக வரும். அதனால் தீ விபத்து ஏற்படும் போது காற்றின் வேகம் அதிகரித்து விடும். காட்டு மூங்கில் தீயால் எரிந்து வெடித்து கிராம்புற குடிசையில் விழுந்து பெரும் தீவிபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மழை வெள்ள காலங்களில் உடைந்த கரையை மூங்கில் கழி, பனை மரங்கள் ததும்பு(தரும்பு) என்னும் தடுப்பு அமைத்து மணல் மூட்டைகள் அடுக்கி வெள்ளபாதிப்பை தடுத்தும், ஊருக்குள் புகாமலும் பாதுகாப்பு செய்து கொள்வர்.

Comment here