Sliderமருத்துவம்

மூச்சிலே இருக்குது சூட்சமம்!

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல்

ஈராறு கால் கொண்டெழுந்த புரவியைப்
போராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீராயிரமும் நிலமாயிரத்தாண்டும்
போராது காயம் பிரான் நந்தி ஆணையே!

பதினாறு மாத்திரை ஓடி வீணாகக் கழிந்துகொண்டிருக்கும் மூச்சை முறையாக விதிப்படி அடக்கியாளும் ஆற்றல் பெற்ற யோகியர், ஆயிரம் ஆண்டுகள் நீரில் முழுகி இருந்தாலும், மண்ணில் ஆயிரம் ஆண்டுகள் புதையுண்டுக் கிடந்தாலும் உடல் அழியாது என்கிறார்.
ஆக மூச்சை நெறிப்படுத்தினால் உடம்பிற்கு அழிவில்லை என்கிறார்கள். ஆனால் அதை ஏன் முறையாக ஆராய்ந்து மூச்சை நெறிப்படுத்தும் முறைகளை மக்களுக்கு அறியப்படுத்தவில்லை?
தவறு என்றால் இந்தக் கூற்று தவறு என நிருபிக்கட்டுமே! பிறகு இதை ஏன் நாம் பேசிக்கொன்டிருக்கப்போகிறோம் ?

“ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குறியதுவாமே”
இரு நாசிகள் வழியே ஏறியும் இறங்கியும் இயங்கும் காற்றினைக் கணக்காக ஆளும் திறமை கொண்டோர், எமனை அருகில் வராமல் விலக்கி வைக்கலாம் என்கிறார்கள், நம் சித்தர்கள். இதை ஏன் நாம் முக்கியமாக எடுத்து ஆராயவில்லை?

குழந்தை பிறந்ததும் எதை எதையோ சொல்லித் தரும் நாம், குழந்தைக்கு ஏன் முறையாக சுவாசிக்கச் சொல்லித் தருவதில்லை?

நமக்கே தெரிந்தால் தானே சொல்லித் தர என்கிறீர்களா? அதுவும் சரிதான். காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்கு என்று சித்தர்கள் கூறுகிறார்களே, இத்தனை பலனைத் தரும் கணக்குதான் என்ன என்று பார்க்கலாமா?

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத்திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகமாமே.

இடது மூக்கு வழியாக 16 மாத்திரை உள்ளே இழுப்பது பூரகமாகும். 64 மாத்திரை அளவு உள்ளே அடக்குதல் கும்பகமாகும். பின்னர் வலது மூக்கின் வழியாக 32 மாத்திரை வெளியிடுதல் ரேசகமாகும். இதுவே காற்றைப் பிடிக்கும் கணக்கு.
ஆனால் இதை முறைப்படுத்தல், அத்தனை சுலபமல்ல.
தக்க ஒரு குருவின் வழிகாட்டல் இல்லாமல் இதுவும் கைக்கூடாது. எனவே இதைத் தானே செய்ய முயலவேண்டாம் .

வெற்றிக்கு வழிவகுக்கும் சுவாசம்

விதியை மாற்றும் அறிவை அடைந்தவர்கள் சித்தர்கள் என்றோம்.
நாளும் நடைபெறும் நடப்புகளை தங்கள் சுவாசம் மூலமாகவே தங்கள் விருப்பப்படி நிறைவேற்றிக்கொள்ள எளிய முறைகளைக் கண்டு கூறியிருக்கிறார்கள் நம் சித்தர்கள்.
இதற்குச் ‘சரம் பார்த்தல்’ என்று பெயர்.
‘ஞானசர நூல்’ எனச் சரம் பார்த்தல் பற்றியும் நமது வாழ்வில் நாம் விரும்பும் வெற்றியை விரும்பிய விதமே பெறும் ஆற்றலைப் பெறும் வழிகளையும் நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
ஆனால் நாமோ, “தொடத் தொட தங்கமாகும் வித்தையை” கையில் வைத்துக்கொண்டே வறுமையில் நம் வாழ்வை ஒட்டி வருகிறோம்.

கேட்கில் இடம்: தூது ஆடை, அணி பொன்பூணல்
கிளர்மனம், அடிமைகொளல், கீழ்நீர் கிண்டல்
வாழ்க்கை மனை எடுத்தல், குடிபுகுதல், விற்றல்
மன்னவரைக் காணல், உண்மை வறுவல், சாந்தி
வேட்கை, தெய்வப் பதிட்டை, சுரம் வெறுப்புத் தீர்த்தல்,
விந்தைப் பெறுதல், தனம் புதைத்தல் மிகவும் ஈதல்,
நாடகமல மலர் முகத்தாய் நரகம் தீர்த்தல்
நன்றேயாம் இவ்வை எல்லாம் நயந்து பாரே!

சந்திர கலை அதாவது இடது நாசியில் மூச்சு ஓடும் போது செய்யத்தக்க காரியங்களின் பட்டியல் இது.
செய்தால் இவற்றில் வெற்றி நிச்சயம் என ஞான சர நூல் 8 கூறுகிறது.

பார்க்கில் வலம்: உபதேசம், வித்தை, சேனை,
படையோட்டல், பயிர்செட்டுக் களவு, சூது,
பேர்க்கவொணா வழக்குக் கரிபரி, தேரூர்தல்
பிறங்கும் எழுந்திடுதல், சங்கீதம், பாடல்
வார்த்தை, பகைப் பக்கம் கோள், பசாசு தீர்த்தல்,
மந்திரஞ் சாதித்தல், மருந்துண்ணல், உறங்கல்,
கோத்த புன்னாடல், கொல்விடங்கள் தீர்த்தல்
கொடும்பிணி, தம்மென்பன யோகங் குறிக்கும் தானே

– ஞான சர நூல் 9
இவை சூரிய கலை எனப்படும் வலது நாசியில் சுவாசம் ஓடும் போது செய்யத்தக்கவையாகும்.
இந்தச் சர ஞானமும் சரிவர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, முறைபடுத்தப்படுமானால் தமிழர் சமுதாயம் உலகின் வளமான சமுதாயமாக ஆகிவிடும். நமது பாரம்பரிய அறிவு நமக்கு பயன்படாமல் இன்னும் இருக்கலாமா? இவ்வரிகள் நவீன ஆய்வுநெறிகளுக்கு ஏற்ப தக்க முறையில் ஆய்வு செய்து நிரூபணம் ஆக வேண்டும்

இது 2008 இல் வெளிவந்த எனது “எனக்குப்புரிந்தது இதுவே ” ஒரு பகுதி

பிறப்பின் முதல் மூச்சில்தான்
பிறவி எல்லோர்க்கும் தொடங்குகிறது !
பிறப்பின் இறுதி மூச்சில்தான்
இறப்பின் இருள் என்பதின் தொடக்கம் !

ஆனால் இந்தப் பிறப்பும் இறப்பும்
நாளும் தொடர்கிறது !
நாளுக்கு நாம் விடும் சுவாசம்
21600 மூச்சு , அத்தனை மூச்சும்
சேர்ந்து ஆவதுதான் நாள் ஒன்று !
நாளும் சுவாசத்தை கொஞ்சம் கொஞ்சம்
மிச்சம் செய்தால் கூடுவது அவன் ஆயுள் .

ஒவ்வொரு நாளும் அவன் விடும் மூச்சில்
உள்ளே இழுப்பது பிறப்பு !
வெளியே விடுவது இறப்பு !
இது தொடரும் வினை ,
ஆயின் மூச்சடக்குவதும் ,
வெளியிடுவதும் முழுவதும் அவன்செயல் இல்லையாம் !

மூச்சு விடுவது காற்றை இழுத்து
விடுவது மட்டும்தானா ? மூச்சினிலே
தான் இருக்கு வாழ்வின் சூட்சுமம் !
மூச்சு விடுதல்தான் வாழ்தலின் அடையாளம்;

நாசியின் இருதுளை வழியே
லயம் தப்பாமல் மாறிடும் மூச்சு !
வலப்புற மூச்சுக்கு சூரியகலை
இடப்புற மூச்சுக்கு சந்திர கலை !

சூரியகலையும் சந்திரகலையும் !
அர்த்தமறிந்து பிரயோகிக்கத் தெரிந்தால்
வாழ்வின் அர்த்தத்தையே மாற்றிவிடலாம் !
வாழ்வின் போக்கு நமது மூச்சிலேதான் !

தாறுமாறான மூச்சினால் தான்
பூர்வஜன்ம வினைகளும் ,தொடர்ந்து
வரும் இன்ப துன்பங்கள் ,
மனத் தடுமாற்றம் குழப்பங்கள் ,
வறுமை முதலிய அவலங்கள்
தொடர்ந்து வந்து நம்மை தாக்குகின்றன !

பிறந்ததும் எதை எதையோ
சொல்லித்தரும் நமக்கு
மூச்சு விடுதல் பற்றி மட்டும்
ஏனோ யாரும்சொல்லித்தர சிரத்தை எடுப்பதில்லை !

மூச்சை அறிந்தவன்தான் யோகி !
இயற்கையை மூச்சிலே நட்புக் கொள்ளலாம் !
குளிர் அடிக்குதா ? வலப்பக்கம் மட்டும்
மூச்சு, அதுவே சூரிய கலை ! சூடாகிடும்
ஐந்தே நிமிடத்தில் !

தாக்கிடும் அந்த வெப்பமா ? பிடித்திடு
இடப்பக்க மூச்சை குளிர்தே விடும்
உடம்புதான் ஐந்து நிமிடத்தில் ! ஆண் மகவு வேணுமா ?
சூரியகலை நடைபெறும் பொது உறவு கொள் !

ஆசையுடன் பெண் மகவு வேண்டிடின்
சந்திர கலை நடைபெறும் காலம்
உறவுக்கு உகந்த காலம் ! ஆயிடினும் இத்துடன்
கூடுதலுடன் ஐம்பூத ஆற்றல் இணைய வேண்டும் !

இத்தகு மூச்சிதனை வயப்படுத்தும்
பயிற்சிதான் பிராணாயாமம் ! அது மூச்சுடன்
பிராணனையும் வயப்படுத்தும் வழியாகும் .!
பிராணனை உணர்ந்தால் எதுவும் சாத்தியம் !

அளவில்லாது விடும் மூச்சுக் காற்றை
அளவுடன் கணக்கிட்டு ,காலஅளவுடன்
சுவாசிப்பதே பிராணாயாமம் ! குறைவாகவும்
மெதுவாகவும் மூச்சு கூடவே
ஆயுளும் பெருக்கம் அல்லது குறைவு !

வாழும் இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதும் இந்த ஆகாயத்திலே
ஒடுங்குவதும் இந்தஆகாயத்திலே!
இந்த ஆகாயமோ பிராணசக்தி ! எங்கும் வியாபித்துள்ள
இந்த சக்தியே பிரபஞ்சத்தின் இயக்கமாகும் !

இன்னும் பல இருக்குது மூச்சினிலே !
அது இதன் அடுத்த பகுதியிலே !

அண்ணாமலை சுகுமாரன்

Comment here