Sliderஇல்லறம்

மூலாதாரத்துள் ஒரு சுடர் உண்டு

Rate this post

 

உங்களுக்குத் தெரிந்த உங்கள் உடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பற்றிப் பேசுகிறேன். அந்த இடம் உங்களால் தினம் தினம் நீங்களே சிந்திக்கும் இடம். அதை மூலாதாரம் எனக் கூறுவார். இந்த மூலாதாரம் பற்றிய ஆன்மீகச் செய்திகளை நான் பேசவில்லை. உடலியல், மனவியல் சிந்தனைகளை மட்டும் இங்கு உங்களோடு பகிரலாம் என்று நினைக்கிறன்.

நான் படித்த குருக்களையும் அந்த அந்த குருகுலத்தின் பெருமைகளையும் அவற்றை விட்டு நான் வெளியுலகுக்கு வந்த பிறகே நான் உணர்தேன். நான் உணர்ந்தவற்றுள் சிலவற்றை இங்கு நினைவுப்படுத்திப் பார்க்கிறேன்.

மூலாதாரம் எனச் சொல்லப்படுகின்ற இடம் கருவாய்க்கும் எருவாய்க்கும் இடைப்பட்ட பகுதி. இது உங்கள் அனைவருக்கும் தெரியும். அது ஸ்தூலம். ஆனால் மூலாதாரம் என்பது அங்கிருக்கும் சூக்குமத்தைக் குறிக்கின்ற சொல்.

இந்த மூலாதாரம் இரண்டு விரல் அளவு உயரம், அகலம், சுற்றளவு உடையது. அந்த சூக்குமப் பரப்பிற்குள் நம் முன்னோர்கள் கண்ட விந்தையான ஆராய்ச்சியில் சிலவற்றை இங்கு நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் மூலாதாரம் பற்றி அதிகமாக அதிக நேரம் பேசும் அன்பர்களும் நம்மில் உண்டு. அங்கு Electricity உருவாகிறது. அதிருகிறது என்றெல்லாம் பேசும் நண்பர்களும் உண்டு. ஆதாரம் அற்ற கதைகளை எம்மனம் ஏற்றுக் கொள்வதில் கொள்கை பேதங்கள் உண்டு. மகர விளக்குத் தெரிவதை 30 ஆண்டுகளுக்கு முன், அது பற்றிய இன்றைய ஆதாரத்தைப் பேசியவன் நான். ‘இல்லாத ஒன்றைக் காட்ட முடியாது’ என்பது உலக உண்மை.

அதுபோல மூலாதாரத்துள் சூக்குமத்துள் நம்மவர்கள் கண்டவை யாவை? என்பதை இதன்மூலம் கருத்தளவில் தெரிந்து கொள்வோம்.

இங்கு உடல் ரீதியாகத்தான் பார்க்கிறோம். ஆன்மீக ரீதியை மற்றொரு முறை பார்ப்போம்.

மூலாதாரத்துள் ஒரு சுடர் உண்டு. எனவே அதற்கு சுடர்வீசும் ஸ்தலம் என்று ஒரு பெயரும் உண்டு. மூலாதாரத்துள்ளே இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய நாடிகள் கத்திரிக்கோலாகப் பின்னி ஓடும் இடத்தில் சுடர்வீசும். அங்கு வாதம் (காற்று) துடிப்பை உண்டாக்கும். பித்தம் அந்த இடத்திற்கு இரத்த ஓட்டத்தை உண்டாக்கும். சிலேத்துமம் மூலாதார ஆற்றல் மேல் எழுவதற்கான வேலைகளைச் செய்து நிற்கும். இந்த மூன்று நாடிகளும், வாத பித்த சிலேத்துமக் கூறுகளும் மூலாதாரத்துள் எங்கு சந்திக்கின்றனவோ, அதுதான் கருவர்மம் அல்லது மூலாதார ஆற்றலின் மைய இடம் ஆகும்.

இந்தக் கருவர்மத்தின் ஆற்றலால் தான் ஆண்களுக்கு ஆண்குறி (லிங்கம்) நீண்டும் சுருங்கியும் செயல்பட வேலை செய்கிறது. பெண்களுக்கும் யோனிவாசல், சுரோணிதப் பைகளுக்கு ஆற்றல் கிடைக்கும். இந்த கருவர்மம் ஆற்றல் இல்லாமல் போய்விட்டால் இனயதால் உறுப்புத் தொடர்பான நோய்கள் உண்டாகும். அங்கு முறையான இயக்கம் உண்டாக்கியதால் மூளை நரம்புகளும் இயக்கம் பெற்று, பெண்களுக்குச் சினைமுட்டை வலுப் பெற்றுள்ளன, இன்று நம் கோவை மருத்துவர்களின் இயக்கத் தொண்டால்.

இதே மூலாதாரத்துள்ளே ஆணுக்கும் பெண்ணுக்கும் குமரகுருவர்மம், குமரிவர்மம் என்றும் உண்டு. இந்த வர்மங்களின் ஆற்றல் அங்கு சரியாக இல்லை என்றால் பெண்ணுக்கு உதிரப்போக்கு வந்து கொண்டே இருக்கும். கர்ப்பபை ஒழுங்காக இருந்தாலும் இந்த வர்மங்களின் ஆற்றல் சரி இல்லாமல் ஆவதால் உதிரப்போக்கு நிற்காது. இதற்கு மூலாதாரத்தின் சூக்கும உறுப்புகளின் இடங்களையும் இயக்க முறைகளையும் தெரிந்து மூலாதாரத்தை குருமுறைமூலம் தடவல் செய்தால் அதற்கான பலன் கிடைக்கும். இன்று அவசர கதியில் இந்தத் தடவல் முறைகளைக் கற்றுக் கொள்ளும் சீடர்களும் இல்லை, முறையாகக் கற்றுக் கொடுக்கும் ஆசானும் இல்லை. காலத்தின் கட்டாயத்தால் இந்த மூலாதாரத் தடவல் முறையும் மறைக்கப்பட்டது. மறைந்து வருகிறது. இதற்கு யார் காரணம். குருகுல முறையில் பயிலாத மாணவப் பாரம்பரியமே காரணம். ஓரிருவர் செய்யும் குதர்க்கத்தால் அருமையான கல்வி காலத்தை எதிர் நோக்கி நிற்கின்றது.

குமரிவாசல் அடங்கலும் அங்குண்டு. அந்த வாசல் தெரிந்தவர்களே மேற்படித் தடவல் முறைகளைச் செய்ய முடியும். குருவை அடுத்து வைத்துக்கற்றுக் கொள்.

இரண்டுவிரல் சுற்றளவு உடைய மூலாதாரத்துள் மூலாதார வர்மம், அண்டக்காலம், கருவர்மம், குமரகுருவர்மம், குமரிவர்மம், குமரிவாசல் அடங்கல், மெய்தீண்டாவர்மம், அதிசாரவர்மம், பைங்கலை வர்மம் என பல்வேறு வர்மங்கள் உள்ளன. இவற்றைப் பற்றிய அடிப்படைக் கல்வியே நமக்கு இல்லாமல் நம் சமூகம் மூலாதாரம் என்ற வெறும் சொல்லோடு வலம் வருகிறது.

இத்தனை அறிவையும் கண்டு நமக்குச் சொன்ன சித்தர்களும், ரிஷிகளும், முனிவர்களும் நம் அறியாமையையும் முட்டாள்தனத்தையும் எண்ணி நாணி கண்புதைக்கின்றனர். மேலே கூறிய அத்துணைக்கும் எழுத்தாதாரமும் உண்டு. பயிற்சியும் உண்டு. அந்தரத்தில் சிலம்பம் ஆடும் குருகுலம் அல்ல நம் பரம்பரை. காலம் வரும் கற்போம்.

வளர்க சிவம்.

http://www.nshunmugom.in/tamilblog-2018-10-01-2/

ஆசிரியரைப் பற்றி சிறு குறிப்பு:
முனைவர் ந சண்முகம், இவர் தமிழ்ப் பேராசிரியர். தமிழ்நாடு, குமரி மாவட்டத்தைச் சார்ந்தவர். கடந்த நாற்பது ஆண்டுகளாக வர்மக்கலை சார் அறிவியலை மூச்சுக் காற்றாகச் சுவாசிப்பவர். தமிழும் வர்மமும் அவை சார்ந்த ஆன்மீகமும் இவரது வாழ்க்கையாக உள்ளது.

Comment here