சம்பவம்

மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 109 ஆக உயர்வு

பீகாரை கடந்த ஒரு மாதமாக மூளைக்காய்ச்சலும் கடுமையாகத் தாக்கி வருகிறது. பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. பின்னர் பாதிப்புகள் அறியப்பட்ட குழந்தைகள் முசாபர்பூரில் உள்ள அரசு ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

முசாபர்பூரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 66 குழந்தைகள், மூளைக்காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக முசாபர்பூரில் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் 22–ந்தேதி வரை மூடப்படும் என்றும், மேல்நிலைப் பள்ளிகளில் காலை 10.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த காய்ச்சல் அருகில் உள்ள கயா மாவட்டத்துக்கும் பரவியுள்ளது.

மூளைக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

மூளைக்காய்ச்சல் விவகாரத்தில் நிதிஷ்குமார் அரசு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும் என டெல்லியில் போராட்டமும் நடைபெற்றது. தடுப்பு நடவடிக்கையை முறையாக மேற்கொள்ளவில்லை, சம்பவத்தை மறைப்பதிலே அரசு குறியாக உள்ளது என குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் முசாபர்பூரில் உள்ள அரசு ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நிதிஷ்குமார் வந்தார். அவருடன் துணை முதல்வர் சுஷில் மோடியும் வந்தார். இருவரும் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்தனர்.

Comment here