மேட்டூர் அணையை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்!

Rate this post

3 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் 109 அடியை எட்டி உள்ள நிலையில் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று திறந்துவிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை தவறியதால் தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 109 அடியாக உயர்ந்து உள்ளது.

தற்போது 109 அடி தண்ணீர் இருப்பதால் இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார். அணையை திறந்து வைத்த பின், மேட்டூர் அணைப்பகுதியில் நினைவு தூண் அமைக்கும் பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர் அவர் பேசம் போது, காவிரி விவகாரத்தில் சட்டப்போராட்டம் நடத்தி தமிழக மக்களுக்காக இறுதி மூச்சுவரை உழைத்தவர் ஜெயலலிதா. மருத்துவமனையில் இருந்த போதும் காவிரிக்காக கடிதம் எழுதியவர் ஜெயலலிதா என கூறி கண்கலங்கினார்.

மேலும் அவர் பேசியதாவது: காவிரி பிரச்னையில் சட்டப்போராட்டம் நடத்தி அதிமுக அரசு வென்று காட்டியுள்ளது. மேட்டூர் அணைப்பகுதியில் நினைவு தூண், கட்டவும், பூங்காவை மேம்படுத்தவும் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேட்டூர் அணையில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கடைமடை வரை நீர் செல்லும் அளவுக்கு மேட்டூரிலிருந்து நீர் திறக்கப்படும் என்றார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, அன்பழகன், கருப்பண்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சரோஜா, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகரன், சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதாலும் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*