அரசியல்

ரகுராம் ராஜனின் தேசபக்தியை சந்தேகிக்க வேண்டாம்: சுப்பிரமணியன் சுவாமிக்கு பிரதமர் கண்டனம்


இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் தேசபக்தியை சந்தேகிக்க வேண்டாம் என்று கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமிக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.

தில்லியில் தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு மோடி திங்கள்கிழமை பேட்டியளித்தார். அப்போது, சுப்பிரமணியன் சுவாமியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், உங்கள் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ஒருவர் ரகுராம் ராஜன் குறித்துத் தெரிவித்த கருத்துகள் சரியானதுதானா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து மோடி கூறியதாவது:

எனது கட்சி சம்பந்தபட்ட நபராக இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, இதுபோன்ற கருத்துகளைக் கூறுவது முறையானது அல்ல. பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்பதற்காக மற்றவர்களை தாக்கிப்பேசுவதால் நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைத்துவிடப்போவது இல்லை. அனைவரும் அதிகபட்ச பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். அரசு நிர்வாகத்தைவிட தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று யாராவது நினைத்தால் அது தவறு என்றார்.

ரகுராம் ராஜனுக்கு பாராட்டு: அண்மையில் அலாகாபாதில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில், கட்சியினர் பேச்சிலும், செயலிலும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் கூறிய பிறகும் அரசு உயரதிகாரிகள் மீதான தாக்குதல் போக்கு தொடர்கிறதே என்ற கேள்விக்கு, “இந்த விஷயத்தில் நான் கூறியுள்ளது மிகவும் தெளிவாக உள்ளது. இதில் எந்த குழப்பமும் இல்லை. ரகுராம் ராஜனின் தேசப்பற்று எந்தவகையிலும் குறைந்தது இல்லை. இந்தியாவை நேசிக்கும் நபரான அவர், பொறுப்பில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி தேசத்துக்காகப் பணியாற்றுவார். அவருடனான எனது அனுபவம் சிறப்பானது. அவர் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். அவர் இந்தியாவின் நலனுக்காகப் பணியாற்றவில்லை என்று கூறுவது நியாயமற்றது. ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் தொடர விரும்பவில்லை என்று ரகுராம் ராஜன் தெரிவித்துவிட்டார். அவர் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டாலும், பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்ய இருக்கிறார்’ என்றார் மோடி.

ஊடகங்களின் தவறு: ரகுராம் ராஜன் வெளியேறுவதால் சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதாரத்துக்குப் பின்னடைவு ஏற்படும்; முதலீடுகள் குறையும் என்று கூறப்படுவது குறித்து மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “எனது தலைமையிலான அரசு 2014-ஆம் ஆண்டு பதவியேற்றபோது ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து ரகுராம் ராஜனை மோடி நீக்கிவிடுவார்; ஏனெனில், அவர் காங்கிரஸ் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டவர் என்று பல்வேறு ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாயின. அவை தவறு என்று இப்போது நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று மோடி பதிலளித்தார்.

சுவாமியும் சர்ச்சையும்… முன்னதாக, ரகுராம் ராஜன் மீது சுப்பிரமணியன் சுவாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள அவர், இந்தியா மீது பற்று இல்லாதவர் என்று குற்றம்சாட்டினார். இதற்கு அடுத்த சிலநாள்களிலேயே ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் தொடர விரும்பவில்லை என்று ரகுராம் ராஜன் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிமணியம் மீது சுவாமி குற்றச்சாட்டுகளைக் கூறி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதனை நிராகரித்ததுடன், அரவிந்த் சுப்பிரமணியத்துக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தார். இதையடுத்து அருண் ஜேட்லி மீது சுவாமி மறைமுகமாகக் குற்றம்சாட்டினார்.

“கட்டுப்பாடுகளைத் தாண்டி நான் பேச ஆரம்பித்தால் கடும் விளைவுகள் ஏற்படும்’ என்றும் ஜேட்லியை சுவாமி எச்சரித்தார்.

ஆளும் பாஜகவில் அங்கம் வகிக்கும் மூத்த தலைவர் ஒருவரே மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்கள் மீது விமர்சனக் கணைகளைத் தொடுத்து வந்தது அரசியல் அரங்கில் முக்கிய விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில், சுவாமியின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் பிரதமர் மோடி நிராகரித்துள்ளார்.

 

“பாகிஸ்தான் குறித்து எச்சரிக்கையுணர்வு’

தொலைக்காட்சிப் பேட்டியின்போது பாகிஸ்தானுடனான உறவு குறித்து மோடி கூறியதாவது:

சர்வதேச அளவிலான பயங்கரவாதம், எல்லைதாண்டிய பயங்கரவாதம் ஆகிய பிரச்னைகளில், இந்தியாவின் நிலைப்பாட்டைத்தான் இப்போது உலக நாடுகளும் எடுத்துள்ளன.

பாகிஸ்தானைப் பொருத்தவரையில், அந்நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வதில் தடையாக இருப்பது, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுதானா? அல்லது வேறு நபர்களா? என்பது விடைதெரியாத கேள்வியாகவே உள்ளது. எனவே, பாகிஸ்தானுடனான உறவு விஷயத்தில் இந்தியா எப்போதும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் பிரதமரை இந்தியாவுக்கு அழைத்தது, நான் பாகிஸ்தானுக்குச் சென்றது போன்ற நடவடிக்கைகள் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. பாகிஸ்தானுடனான அணுகுமுறை விஷயத்தில் இந்தியாவை சர்வதேச நாடுகள் பாராட்டியுள்ளன. எனவே, இந்த விஷயத்தில் பாகிஸ்தான்தான் உரிய பதிலளிக்க வேண்டிய இடத்தில் உள்ளது.

பயங்கரவாதத்தால் இந்தியா எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உலக நாடுகள் உணர்ந்துள்ளதுடன், இந்த விஷயத்தில் நமது நிலைப்பாட்டை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளன என்றார் மோடி.

Comment here