இந்தியா

ரபேல் விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் – சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி,
இந்திய விமானப்படை பயன்பாட்டுக்காக ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டுடன் ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு ஒப்பந்தம் போட்டது. அதில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பின.
இதையொட்டி, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்கள் எம்.எல்.சர்மா, வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் வழக்குகள் தொடுத்தனர்.
இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடந்திருப்பதற்கு ஆதாரம் இல்லை என கூறி டிசம்பர் மாதம் 14-ந் தேதி அதிரடியாக தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மறு ஆய்வு மனுக்கள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தன.
அப்போது மறு ஆய்வு மனுக்களை விசாரிக்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
விசாரணையின் தொடக்கத்தில் மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், மறு ஆய்வு மனுக்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரபேல் ஆவணங்களின் உரிமை பற்றிய கேள்வி எழுப்பினார். அந்த ஆவணங்களை சம்பந்தப்பட்ட துறையின் அனுமதியின்றி யாரும் கோர்ட்டில் தாக்கல் செய்ய முடியாது என குறிப்பிட்டார்.
சாட்சிய சட்டம் பிரிவு 123 மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரிவுகளை தனது வாதத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், “நாட்டின் பாதுகாப்பு, எல்லாவற்றையும் விட மேலானது. தேசத்தின் பாதுகாப்பையொட்டிய ஆவணங்களை யாரும் வெளியிட முடியாது” என்றும் குறிப்பிட்டார்.
ஆனால் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ள மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண், கே.கே. வேணுகோபால் வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மறு ஆய்வு மனுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள ரபேல் ஆவணங்கள், ஏற்கனவே வெளியிடப்பட்டு, பொதுவெளியில் வந்து விட்டன என கூறினார்.
அருண் ஷோரி தரப்பில் வாதிடுகையில், “மறு ஆய்வு மனுக்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை நகல் ஆவணங்கள் என்று ஒப்புக்கொண்ட அட்டார்னி ஜெனரலுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி. இது அந்த ஆவணங்களின் உண்மைத்தன்மையை நிரூபிக்கின்றன” என கூறப்பட்டது.
பிரசாந்த் பூஷண் தொடர்ந்து வாதிடும்போது, “பிற எதையும் விட பொதுமக்களின் நலன்தான் மேலானது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகள் கூறுகின்றன. உளவு அமைப்புகளுக்கு உரிய ஆவணங்களை தவிர்த்து பிறவற்றின் மீது உரிமை கொண்டாட முடியாது” எனவும் குறிப்பிட்டார்.
மேலும், “ரபேல் போர் விமானங்களின் கொள்முதலுக்காக இரு அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இந்தியாவுக்கு பிரான்ஸ் இறையாண்மை வாக்குறுதி வழங்கவில்லை” எனவும் கூறினார்.
மறு ஆய்வு மனு தாக்கல் செய்தவர்களில் ஒருவரான வினீத் தண்டா சார்பில் மூத்த வக்கீல் விகாஸ் சிங் வாதிடும்போது, “இந்த ஆவணங்களின் மீது அரசு உரிமை கோர முடியாது” என தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணைக்கு தொடக்கத்திலேயே மத்திய அரசு தெரிவித்துள்ள எதிர்ப்பு பற்றி முதலில் நாங்கள் முடிவு எடுப்போம். அதன்பின்னர்தான் வழக்கின் பிற உண்மைகளுக்குள் செல்வோம்” என குறிப்பிட்டனர். இது தொடர்பான தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் அவர்கள் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் மத்திய அரசின் வாதம் நிராகரிக்கப்பட்டது.
ரபேல் விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை  நடத்தப்படும் என தீர்ப்பளித்தது.
பத்திரிகையில் வெளியான ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கை நிராகரிக்கபட்டது.
ஆவணங்களை விசாரணையில் பரிசீலனைக்கு ஏற்கலாம் என தீர்ப்பளித்தது. ஒப்பந்தத்தில் மூன்று ஆவணங்களை ஏற்றுக்கொள்வதற்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது.
தீர்ப்பு குறித்து வக்கீல் அருண் ஷோரி உச்சநீதிமன்றத்தை  மத்திய அரசு தவறாக வழி நடத்தியது குறித்து விசாரணையில் விளக்குவோம் என கூறினார்.

Comment here