இந்தியா

ரயில் பயணத்தில் குறைபாடா? புகார் அளிக்க புது ஆப்!-

Rate this post

ரயில் பயணத்தின் போது ஏற்படும் குறைகள் குறித்து புகார் தெரிவிப்பதற்காக புதிய செயலியை, ரயில்வே துறை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

ரயில் மடாட் ‘MADAD’ (Mobile Application for Desired Assistance During travel) என்ற மொபைல் செயலியானது, பயணம் மேற்கொள்ளும்போது ரயிலில் விநியோகிக்கப்படும் தரமற்ற உணவு, கழிப்பறை பராமரிப்பு இன்மை மற்றும் இதர அவசர தேவைகள் என அனைத்து வகையான குறைகளையும் உடனுக்குடன் ரயில்வே நிர்வாகத்துக்கு தெரிவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருகிறது.

இந்த மொபைல் செயலி மூலம் தெரிவிக்கப்படும் புகார்கள் அனைத்தும், நேரடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சென்றடையும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருகிறது.இது மட்டுமல்லாது, புகார் எவ்வளவு வேகத்தில் சென்றடைகிறதோ, அதே வேகத்தில் அவற்றுக்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, அளிக்கப்பட்ட புகார்கள் குறித்த ஆய்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்பது குறித்தும் பயணிகள் அறியமுடியும்.

இது குறித்து ரயில்வே துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பயணிகள் தங்களது பிஎன்ஆர் (PNR) எனப்படும் பயணிகள் பெயர் சான்று தகவலை பதிவேற்றம் செய்த பின்னர், புகார் அளிப்பதற்கான கடவுச்சொல் குறுஞ்செய்தி மூலம் கிடைக்கப்பெறும்.  அவர்கள் அளிக்கும் புகார் தொடர்பான தகவல்கள் பாதுகாக்கப்படுவதோடு, துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

செயலியில், மாதந்தோறும் ரயில்வே துறைக்கு கிடைக்கப்பெறும் புகார்கள் மற்றும் அதற்கு வழங்கப்பட்ட தீர்வுகள் குறித்த தகவல்களை பயணிகள் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்படும். ரயில்வே துறையின், சேவைத் தரத்தை மேம்படுத்த உதவும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் மடாட் செயலி இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்’ என்றார்.

Comment here