ராஜீவ் கொலை வழக்கு : ஆளுநர் 7 பேரை விடுதலை செய்வாரா ?

Rate this post

ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி சுமார் 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை ஆளுநர் விடுதலை செய்ய ஒப்புக்கொள்வாரா என்ற சந்தேகம் பலரிடம் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ளனர்.

இவர்களை விடுதலைக் குறித்த மனு மீதான விசாரணையில் அண்மையில் தீர்ப்பளித்த ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக முடிவை எடுத்து ஆளுநரின் முடிவுக்கு அனுப்பி வைக்கலாம் என்று அறிவுறுத்தினார்கள். அத்துடன், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக் கொள்வதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறி அந்த மனு மீதான விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலைக் குறித்து முடிவு எடுத்து ஆளுநருக்குப் பரிந்துரை செய்வது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவையின் அவசர கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று கூடியது. ஏறக்குறைய 2 மணிநேரம் வரை இந்தக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் 4 முக்கியத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதில்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவித்து சட்டப்பிரிவு 161 பிரிவின் கீழ் ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனால், தமிழக அரசு 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி, விரைவில் ஆளுநருக்கு அந்த பரிந்துரையை அளிக்க உள்ளனர். இதனையடுத்து, ஆளுநர் அந்த தீர்மானத்துக்கு ஒப்புக்கொள்வதே இறுதியானது. அதன் பின்னரே, 7 பேர் விடுதலையாவது உறுதி செய்யப்படும். இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, ஆளுநரை தமிழக அரசின் தீர்மானம் கட்டுப்படுத்தாது. அவர் 7 பேரின் விடுதலை பரிந்துரையை ஏற்க மாட்டார் என்றார். அதனுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோர் 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், ஆளுநர் 7 பேரை விடுதலை செய்வாரா ? என்ற சந்தேகம் பலரிடம் எழுந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*