ராமராஜ்ய ரத யாத்திரை -க்கு எதிர்ப்பு!

Rate this post

ராம ராஜ்யம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை முன் வைத்து, நெல்லை மாவட்டத்திற்கு இன்று வந்த ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை கலெக்டர் பிறப்பித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வரை மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய 6 மாநிலங்கள் வழியாக ஸ்ரீ ராம ராஜ்ய ரத யாத்திரை வருகிறது. இதன்படி, கடந்த மாதம் 13ம் தேதி அயோத்தியில் இருந்து பைசாபாத் வழியாக வாரனாசி, அலகாபாத், சாகர், போபல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வழியாக வந்த ரத யாத்திரை நேற்று (19ம் தேதி) கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் இருந்து புனலூருக்கு வந்தது. இன்று காலை புனலூரில் இருந்து புளியரை, செங்கோட்டை வழியாக தென்காசிக்கு வருகை புரிந்தது. புளியரை பஸ் ஸ்டாண்டில் காலை 9 மணிக்கு ரத யாத்திரைக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

அங்கிருந்து காலை 10.30 மணிக்கு தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன் ராமராஜ்ய ரத யாத்திரை சென்று உள்ளது. விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ராம ராஜ்ய ரதத்தை வரவேற்க ஏற்பாடுகள் நடந்து வந்தன. அதே சமயம் தமிழகத்திற்கு வருகை தரும் ரத யாத்திரையை மறிக்கப்போவதாக சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தெரிவித்துள்ளன. புளியரை எஸ். வளைவு பகுதியில் ரத யாத்திரையை மறிக்கப்போவதாக தெரிவித்துள்ளதையடுத்து, செங்கோட்டை, புளியரை மற்றும் தமிழக எல்கை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் நெல்லை மாவட்டத்தில் 5 நாட்கள் 144 தடையுத்தரவு பிறப்பித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே ஸ்டாலின் இந்த யாத்திரை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” ’ராம் ராஜ்ய யாத்திரை’ என்ற பெயரில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டுகிறோம் என்றபோர்வையில் தமிழ்நாட்டிற்குள் யாத்திரை நடத்துவதற்கும், அந்த யாத்திரை நடத்துவதற்கு அனுமதித்துள்ளஅதிமுக அரசுக்கும் திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.மத்தியில் பா.ஜ.க. ஆட்சி இருப்பதையும், தமிழகத்தில் அவர்களின் எடுபடியாக அதிமுக அரசு நடப்பதையும் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் நிலவி வரும் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில்விஷ விதையை விதைக்க விஸ்வ இந்து பரிஷத் முயற்சிப்பது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையாகும்” என்று தெரிவித்திருந்ததும்  இன்று இந்த ராம் ராஜ்ய ரத யாத்திரையை எதிர்த்து ஸ்ரீவில்லிபுத்தூரில் போராடிய திருமாவளவன், ஜவாஹிருல்லா, கொளத்தூர் மணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*