ரேசன் கடைகளில் கம்பு விநியோகம் !- மத்திய அரசு திட்டம்!

5 (100%) 1 vote

நம் நாட்டில்  விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. சோளம்போல கம்பும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்ததுதான். ஆனால், கி.மு. 2500-களிலேயே இங்கு கம்பு பயிரிடப்பட்டு இருந்தது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியப் பாடலிலும் சித்த மருத்துவப் பயன்பாட்டிலும் இந்தத் தானியம் இருப்பதே இதன் தொன்மைக்குச் சான்று.

அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச் சத்து என அனைத்துச் சத்துகளுமே அதிகம் கொண்ட தானியம் கம்பு !! அரிசியை விட கிட்டத்தட்ட 8 மடங்கு அதிக இரும்புச் சத்து !! கன்னடத்தில், ‘பஜ்ரா’ என்று அழைக்கப்படும் இந்தக் கம்பு, கர்நாடகத்திலும் ஒரு சில வட மாநிலங்களிலும் இன்றும் மிகப் பிரபலம்.நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்து இல்லாத உணவுகளை சாப்பிட்டு வந்தனர்.

நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது. இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர்.

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

இப்படி பட்ட உணவான கம்பை தற்போது ஒருசில பகுதி மக்கள் மட்டும் தான் விரும்பி சாப்பிடுகிறார்கள். பெரும்பாலாக மக்களிடையே இது முக்கிய உணவாக மாறவில்லை என்பதால் மத்திய அரசு ரே‌ஷன் கடைகளில் மக்களுக்கு கம்புவை வினியோகிக்க திட்டமிட்டு இருக்கிறது.

இது சம்பந்தமாக மத்திய விவசாயத்துறை செயலாளர் பட்நாயக் கூறியதாவது:-

வேறு எந்த உணவு தானியத்திலும் இல்லாத சத்து கம்புவில் இருப்பதால் அவற்றை சாப்பிடும் பழக்கத்தை மக்களிடம் அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி ரே‌ஷன் கடைகளில் கம்புவை வினியோகிக்க முடிவு செய்திருக்கிறோம். தற்போது கம்பு விளைச்சல் குறைவாகவே உள்ளது. அதிக உற்பத்தியை கொடுக்கும் கம்பு ரகமும் இல்லை. எனவே புதிய வீரிய கம்பு ரகங்களை அறிமுகம் செய்து கூடுதல் உற்பத்திக்கு ஏற்பாடு செய்யப்படும்.

மேலும் மாநில அரசுகள் கம்பு தானியத்தை மக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம். மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தில் கம்புவை முக்கிய உணவு பொருளாக சேர்க்கும் திட்டமும் உள்ளது.

கம்பு உணவை அதிகம் சாப்பிட்டால் தொற்று நோய்கள் பரவுவது தடுக்கப்படும். நீரிழிவு, மன அழுத்தம், இதய நோய்கள், புற்று நோய் போன்றவையும் தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எக்ஸ்ட்ரா தகவல்:

வேகவைக்க கொஞ்சம் மெனக்கெட வைக்கும் இதனை, சாதாரண அரிசிபோல அப்படியே கழுவி வேகவைக்க முடியாது. மிக்ஸியில் ஓர் அடி போட்டு, இரண்டாக உடைத்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, அதன் பின் உலையில் போட்டு வேகவைத்தால்தான் நல்ல குழைவாக வரும். ஆனால், சுவையிலோ, பிற அரிசி வகையறாக்கள் கம்பின் பக்கத்தில் வர முடியாது. அத்தனை அருமையாக இருக்கும்.

வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் 45 முறை கண்டிப்பாகத் தர வேண்டிய தானியம்.

பொதுவாக, கம்பு என்றாலே அதனைக் கூழாக, கஞ்சியாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் உண்டு. ‘சிறைக்குப் போனால் கம்பங்களிதான் தின்ன வேண்டும்’ என்பது போன்ற பேச்சுகளும் இதற்குக் காரணம். ஆனால் கஞ்சியாக மட்டும் அல்ல; சாதமாக, அவலாக, பொரியாக… எப்படி வேண்டுமானாலும் கம்பைச் சாப்பிடலாம்.

அருமையான நாட்டுக் கோழி பிரியாணியோ, ஹைதராபாத் தம் பிரியாணியோகூட கம்பில் செய்து கலக்கலாம். கம்பை இரண்டாக உடைத்து, தண்ணீரில் ஊறவைத்து, அதற்குப் பின் நெல் அரிசியில் எப்படி பிரியாணி செய்கிறீர்களோ அப்படியே செய்ய வேண்டியதுதான். கோழி மீது இரக்கம் உள்ளவர்கள், பீன்ஸ், கேரட், ரொட்டித் துண்டு போட்டு வெஜிடபிள் பிரியாணியும் செய்யலாம்.

கம்பு ரொட்டி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். கம்பில் உள்ள லோ கிளைசிமிக் தன்மையாலும், அதில் ஏற்கெனவே உள்ள கூடுதல் நார்ச் சத்தினாலும், காலை/ மதிய உணவில் இதை எடுக்கும்போது பட்டை தீட்டிய அரிசிபோல், கம்பு ரொட்டியும் கம்பஞ்சோறும் பிரச்சனையைத் தராது. அரிசியைப் போல் அல்லாமல், கம்பரிசி, உமி தொலி நீக்கிய பின்னரும் அதன் உள் பகுதியில் அத்தனை நல்ல விஷயங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கும் எடை குறைக்க விரும்புவர்களுக்கும் மிக ஏற்றது

தவிர, இதில் உள்ள ‘அமைலோஸ் அமைலோபெக்டின்’ அமைப்பு நெல் அரிசியைக்காட்டிலும் மாறுபட்டது. இன்னும் இறுக்கமானது. அதனால்தான், சீரணத்துக்கும் கொஞ்சம் தாமதமாகிறது. இந்த அமைப்பினால் மெள்ள மெள்ளவே கம்பின் சர்க்கரையை ரத்தத்தில் கலக்கச் செய்வதால், லோகிளைசிமிக் உணவாக இருந்து சர்க்கரை நோயாளிக்குப் பெரிதும் உதவுகிறது. சத்துச் செறிவு அடர்த்தியாக உள்ள கனத்த உணவு என்பதால், என்னதான் பிடித்த குழம்பை, பிடித்த கையுள்ளவர் பரிமாறினாலும் கம்பு சாதத்தை ஒரு கட்டு கட்ட முடியாது. அளவாகச் சாப்பிடுவதால், எடை குறைக்க விரும்புவோருக்கும் இது ஓர் அற்புதத் தானியம் !!

இன்று பலரும், நான் ”டயபடிக் சார். அரிசியே சாப்பிடுறது இல்லே. வெறும் சப்பாத்திதான் மூணு வேளையும்” என்பார்கள். அது தேவையே இல்லை. சர்க்கரை நோய்க்கான சரியான சிகிச்சையை உங்கள் குடும்ப மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டு, வாரம் இரு நாள் கம்பஞ்சோறு, இரு நாள் புழுங்கல் அரிசிச் சோறு, இன்னொரு நாள் தினை சாதம், இரவில் கேழ்வரகு அடை, எப்போதாவது காலை உணவாக வரகரிசிப் பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி என்று சாப்பிடப் பழகினால், சாப்பாத்திக்கு அடிமை வாழ்க்கை வாழ வேண்டிய அவசியம் இல்லை.

இப்படிப் பல தானியங்களையும் கலந்து எடுத்துக்கொள்வதுடன் கொஞ்சம் உடல் உழைப்பும் கொடுத்து வாழுங் கள். உங்கள் சர்க்கரை நோய் எப்போதும் கட்டுக்குள்ளேயே இருக்கும்.

மைசூரில் இயங்கிவரும் மத்திய அரசின் உணவுத் தொழில்நுட்ப உயர் நிறுவனம் (சி.எஃப்.டி.ஆர்.ஐ.) தன் பல ஆய்வுகளில், இந்தச் சிறுதானியங்கள், அரிசி, கோதுமையைக் காட்டிலும் பல வகைகளில் சிறந்தது என்பதையே மீண்டும் மீண்டும் சொல்கிறது. கம்பு சம்பந்தமாகச் சமீபத்தில் படித்த ஓர் ஆச்சர்யமான விஷயம்… செல்கள் பாதுகாப்புக்கு கம்பு உதவும் என்பது. கொஞ்சம் சூட்டு உணவு என்பதால், கம்பு சாப்பிடும்போது குளிர்ச்சிக்கு மோர், சின்ன வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*