இயல்தமிழ்

வஞ்சகன் கண்ணன் [சிறுகதை]

 

முதலைத்தோல் காலணிகளின் பழக்கமான சர்ரரக் சரக் சர்ரரக் சரக் என்ற சத்தம் மிருகநயனியின் காதுகளில் ஒலித்தது. காலணிகள் அவள் அருகே வந்து நின்றன. இடது காலணி வலதை விட சற்றே உயரமான குதிகால் பகுதியைக் கொண்டது. மஞ்சள் சாயம் பூசப்பட்ட காலணிகள். அங்கங்கே ரத்தக் கறைகள் படிந்திருந்தன. சில கறைகள் காய்ந்து கருநிறம் கொண்டிருந்தன. சில சமீபத்தில் பட்ட கறைகள். இன்னும் மெல்லிய வாடை கூட இருந்தது. காலணிகளின் மேல் அங்கங்கே கிழிந்திருந்த கறுப்பு நிற வேட்டி.

மிருகநயனியின் புலன்கள் உணர்ந்த இந்தச் செய்திகள் எவையும் அவள் நெஞ்சில் பதியவில்லை. அவள் குனிந்த தலை நிமிரவில்லை. சகுனி அவள் தலையைக் கோதியபோதுதான் அவள் திடுக்கிட்டு தன்னுணர்வு பெற்றாள். சகுனி அவளை தழுதழுத்த குரலில் அழைத்தார் -‘மகளே!’

மிருகநயனி நிமிர்ந்து சகுனியைப் பார்த்தாள். அவள் கண்கள் உலர்ந்திருந்தாலும். கண்ணீர் வழிந்த கோடுகள் தெரிந்தன. சகுனிக்கு குரல் அடைத்தது. ‘மருத்துவர்கள் கைவிட்டுவிட்டார்களம்மா!’ என்றார். மிருகநயனி பதிலே சொல்லவில்லை. சகுனி தொடர்ந்தார் – ‘கடைசி நப்பாசையாக துரியன் திராவிட அரசன் சேரலாதனிடம் பணி புரியும் ஒரு மூலிகை மருத்துவனை அழைத்து வர சென்றிருக்கிறான்’ என்றார். ‘சூதாட்டம் நடந்த அன்றே அவரை இறைவன் கைவிட்டுவிட்டான் மாமா! இப்போது அவருக்கு தேவை இந்த வலியிலிருந்து விடுதலை. அவர் இறந்தால் போதும் மாமா!’ என்று மிருகநயனி மெல்லிய குரலில் பதிலளித்தாள்.

சகுனி உடைந்து அழுதார். ‘எல்லாம் என்னால்தான்! பாண்டவர் மேலிருந்த அழுக்காறால் நாங்கள் சிறுமை கொண்டோம். இவனோ எங்கள் மேல் உள்ள அன்பால் சிறுமை என்று அறிந்தும் விரும்பியே சூடிக் கொண்டான்’ என்று சொன்னபோது எழுந்த கண்ணீரை மறைக்கத் திரும்பினார். ஆதரவுக்காக கூடாரத்தின் ஒரு தூணை பிடித்துக் கொண்டார். கூடாரமே அசைந்து ஆடியது. கூடாரத்தின் துணிச்சுவரில் ஏழு நிழலுருவங்கள் அசைந்து ஆடின.

சகுனி திகைப்புடன் மிருகநயனியின் பக்கம் திரும்பினார். நிழலுருவங்கள் பக்கம் கையைக் காட்டினார். மிருகநயனி தலையை அசைத்தாள். – ‘ஆம் மாமா பாண்டவர்களும், கிருஷ்ணனும், திரௌபதியும்தான்’ என்றாள்.

கூடாரத்தின் துணிக் கதவை ஏறக்குறைய கிழித்துக் கொண்டு துரியோதனன் உள்ளே நுழைந்தான். அவர் பின்னாலேயே நான்கடி உயரமே உள்ள குள்ளமான ஒருவர் வந்தார். துரியோதனனின் நடை வேகத்துக்கு ஈடு கொடுக்க அவர் ஓட வேண்டி இருந்தது. துரியோதனன் கூடாரத்தின் உள்ளறை ஒன்றில் நுழைந்து மருத்துவரிடம் கையைக் காட்டி ஏதோதோ பேசினான். பிறகு விரைவாக வெளியே வந்தான். வாசலை நோக்கி நடந்து கொண்டே ’இவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள்?’ என்று உரத்த குரலில் கேட்டான். வாயிலை மூடியிருந்த துணிச்சீலையை விலக்கி ‘உள்ளே வாருங்கள்!’ என்று அழைத்தான்.

பாண்டவர்கள் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தனர். கிருஷ்ணன் தவிர்த்த அனைவரின் ஆடைகள், காலணிகள் எல்லாவற்றிலும் உலர்ந்த ரத்தக் கறைகள் இருந்தன. பீமனின் உடலெங்கும் ரத்தம் தெறித்திருந்தது. திரௌபதியின் கூந்தலில் அங்கங்கே திட்டுத்திட்டாக சிவப்பாக இருந்தது. ஆனால் கிருஷ்ணன் மட்டும் மாசுமறுவற்ற ஆடையோடும் நேர்த்தியான அணிகளோடும் வாடாத மாலையுடனும் மயிற்பீலியுடனும் காட்சி தந்தான்.

துரியோதனன் எந்தத் தயக்கமும் இல்லாமல் யுதிஷ்டிரனின் தாள் பணிந்தான். யுதிஷ்டிரன் தழுதழுத்த குரலில் ‘புகழோடு விளங்குவாயாக!’ என்று ஆசீர்வதித்தான். எழுந்தவன் பீமனைப் பார்த்து புன்னகைத்தான். அவனை நோக்கி கைகளை நீட்டினான். பீமன் முன்னகரவில்லை. துரியோதனனே பீமனை நெருங்கி அவனைத் தழுவிக் கொண்டான். பிறகு கொஞ்சம் விலகி பீமனை இன்னும் பெரிய புன்னகையோடு நோக்கினான். ‘அஞ்சாதே பீமா! நேற்றும் நாளையும் எதிரிகள்தான். ஆனால் இந்தக் கணம் நீ கர்ணனின் சகோதரன் என்ற உணர்வுதான் மிஞ்சி இருக்கிறது’ என்றான். பீமன் எதையோ சொல்ல முயன்றான், ஆனால் வார்த்தை எழும்பவில்லை. இரண்டு முறை தொண்டையை செருமிவிட்டு பிறகு விரைந்து முன்னகர்ந்து துரியோதனைத் தழுவிக் கொண்டான்.

Karna's_wheel_is_stuckதுரியோதனன் ‘கர்ணன்தான் மூத்த பாண்டவன் என்று தெரிந்திருந்தால் இந்தப் போரே…’ என்று ஆரம்பித்து தொடர முடியாமல் பெருமூச்சிட்டான். யுதிஷ்டிரன் ‘இத்தோடாவது நிறுத்திக் கொள்வோம் துரியா!’ என்று மெல்லிய குரலில் சொன்னான். ‘காலம் கடந்து விட்டது மூத்தவரே!’ என்றான் துரியோதனன். பிறகு திரௌபதியை நோக்கினான். திரௌபதியின் தலை தானாகக் குனிந்தது. அவளது விரிந்த கூந்தல் அவளது கன்னங்களை மறைத்தது. துரியோதனனின் முகம் விகசித்தது. ‘மேலும் அண்ணியின் முகம் முடிந்த கூந்தலோடுதான் இன்னும் பொலிவாக இருக்கும்’ என்றான். திரௌபதியில் கண்ணோரத்தில் கூட கொஞ்சம் ஈரம் தெரிந்தது.

இந்தக் காட்சியை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த மிருகநயனி செருமினாள். ‘இந்த நெகிழ்ச்சி, பாசம் எல்லாம் நாளைக்கு இருக்காது என்று இன்றிரவே முழுமூச்சாக ஈடுபடுகிறீர்கள், சரி. ஆனால் அவருக்கு ஒரு வழி சொல்லிவிட்டு இதையெல்லாம் நடத்தக் கூடாதா?’ என்று ஆங்காரத்தோடு கேட்டாள்.

ஓரிரு நிமிஷம் அசௌகரியமான மௌனம் நிலவியது. அதை துரியோதனனே கலைத்தான். மெல்லிய ஆனால் உறுதியான குரலில் சொன்னான் – ‘அவன் பிழைக்கமாட்டான் அண்ணி! விலா எலும்புகள் நுரையீரலைத் துளைத்திருக்கின்றன. பாதி ரத்தத்தையாவது இழந்திருக்கிறான். மருத்துவர்கள் அர்ஜுனனின் அம்பு அவனைத் தேர்க்காலில் தாக்கியபோதே அவன் இறந்திருக்க வேண்டும், இத்தனை நேரம் உயிர் பிழைத்திருப்பதே அதிசயம்தான், இன்னும் சில நிமிஷங்கள்தான் என்கிறார்கள். நாம் அனைவரும் இந்த நேரத்தில் அவன் அருகில் இருப்போம், அது ஒன்றுதான் நாம் செய்யக் கூடியது. வாருங்கள்’ என்றான்.

‘இன்னும் சில நிமிஷங்கள்தான் என்றுதான் எட்டு நாழிகையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இல்லையா?’ என்று மிருகநயனி துரியோதனனைக் கேட்டாள்.

துரியோதனன் மௌனமாக நின்றான்.

‘அவர் இறக்க மாட்டார். எத்தனை காயம்பட்டாலும், எத்தனை ரத்தம் போனாலும், என்ன ஆனாலும் சரி, அவரது மனோதிடம் அவரை இறக்கவிடாது. அவருடைய வாழ்வின் பொருள் நீங்கள்தான் அண்ணா! உங்களைக் காக்க வேண்டும், உங்களுக்காக போரிட வேண்டும் என்றுதான் உயிரை இன்னும் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார். முன்னூறு அம்புப் படுக்கை வலியை தாங்கிக் கொண்டும் அவர் விழைவதெல்லாம் மீண்டும் வில்லெடுத்து போரிட வேண்டும் என்றுதான். அவரது கை நரம்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன, அவரால் மீண்டும் நாணைத் தொடுக்க முடியாது என்றெல்லாம் அவர் அறியமாட்டார். உங்களை தனியே விட்டுவிட்டு அவர் இறக்கமாட்டார் அண்ணா, இறக்கமாட்டார்!’

மிருகநயனியின் குரல் உயர்ந்து கொண்டே போனதை அவளே அறியவில்லை. ஆனால் இறக்கமாட்டார் என்று அவள் சொன்னது பெருங்கூவலாகவே முடிந்தது. மிருகநயனியின் கண்ணீர் விசும்பல்களாக மாறும் வரை கூடாரமே நிசப்தமாக இருந்தது. அவளை திரௌபதி கொஞ்சம் தயக்கத்தோடு அணுகி அவள் கையைப் பிடித்துக் கொண்டாள்.

மிருகநயனியின் விசும்பல்கள் மெதுமெதுவாக குறைந்தன. சகுனி, யுதிஷ்டிரன், துரியோதனன், பீமன் என்று ஒவ்வொருவரையும் பார்த்தாள். அர்ஜுனன் மீது அவள் பார்வை கொஞ்ச நேரம் நிலைத்து நின்றது. அர்ஜுனன் தலைகுனிந்து கூடாரத்தின் அடித்தள மண்ணையே பார்த்தபடி நின்றான். ஒரு சுற்று சுற்றி வந்த மிருகநயனியின் பார்வை கடைசியில் கண்ணனிடம் நின்றது.

கண்ணன் முகத்தின் புன்னகை சிறிதும் மாறவில்லை. சஞ்சலமே இல்லாத கண்களுடன் அவன் மிருகநயனியை நோக்கினான். அவன் புன்னகை மிருகநயனிக்கு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்தது. அவனைப் பார்த்து கண்ணா என்று அழைத்தாள்.

கண்ணன் தன் பொன்னிற உத்தரீயத்தை மடித்து மீண்டும் தோளில் போட்டுக் கொண்டான். ‘வரும் வழியில் ஒரு சூதன் பாடிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். அர்ஜுனனின் அம்புகளாலும் கர்ணனைக் கொல்ல முடியாது, அவன் செய்த தானதருமங்கள் அவன் உயிரைக் காக்கின்றன, அவையே அவனுடைய புதிய கவசம், கர்ணன் மீண்டெழுந்து வருவான், அர்ஜுனனை வெல்வான் என்று பாடிக் கொண்டிருந்தான்’ என்றான்.

மிருகநயனி ஐயோ என்று அலறினாள். ‘இது மாதிரி ஒரு பாடல் அவர் காதில் விழுந்தால் அவர் மூவாயிரம் அம்புப் படுக்கைகளின் வலி இருந்தாலும் தன் இறப்பை அனுமதிக்கமாட்டார், அவர் வேதனையை என்னால் தாங்க முடியவில்லை கண்ணா! அவரை எப்படியாவது கொன்றுவிடு, அவருக்கு விடுதலை கொடு!’ என்று கதறினாள்.

கண்ணன் துரியோதனனை நோக்கினான். துரியோதனன் உச்சுக் கொட்டினான். பிறகு சம்மதம் தெரிவிக்கும் வகையில் தன் தலையை மேலும் கீழும் ஆட்டினான்.

கதவு போல இருந்த கறுப்பு நிறச் சீலையை விலக்கி கண்ணன் உள்ளே சென்றான். அவன் பின் துரியோதனனும் யுதிஷ்டிரனும் அர்ஜுனனும் மிருகநயனியும் சென்றனர். கர்ணன் அங்கே ஒரு மேடை மேல் வாழை இலைகளின் மீது சாய்ந்து உட்கார வைக்கப்பட்டிருந்தான். அவனது வலது கை முழுவதும் ஒரு கந்தக மணம் வீசிய ஒரு பூச்சினால் மூடப்பட்டிருந்தது. அவன் மார்பில் பெரிதாக கீறி இருந்தது. வெள்ளையாக எலும்புகள் தெரிந்தன. சேவகர்கள் ஈக்கள் வராமல் இருக்க விசிறிக் கொண்டிருந்தார்கள். ஒரு மருத்துவர் அங்கே ஒரு சின்ன சட்டியில் எதையோ அரைத்துக் கொண்டிருந்தார். அபின் புகையும் வாசம் வந்து கொண்டிருந்தது. ரத்தத்தில் ஊறிய பல வெள்ளைத் துண்டுகள் ஒரு ஓரமாக குவிக்கப்பட்டிருந்தன. உள்ளே வந்தவர்களைப் பார்த்ததும் கர்ணன் புன்னகத்தான். யுதிஷ்டிரன் விரைந்து வந்து அவன் தாள் பணிந்தான். மிகவும் சிரமத்துடன் ‘வெற்றி பெறுக’ என்று கர்ணன் வாழ்த்தினான்.

வாழ்த்திய பிறகு என்னவோ முணுமுணுத்தான். கண்ணன் அவன் வாயருகில் தன் காதை குவித்துக் கேட்டான். பிறகு நிமிர்ந்தான். மாறாத புன்னகையுடன் சொன்னான் – “‘மீண்டும்; போர்; அர்ஜுனன்’ என்கிறான்”

மிருகநயனியின் முகம் கோணியது. அவள் சீலையை விலக்கிக் கொண்டு வெளியேறினாள். அர்ஜுனன் எவ்வளவு முயன்றாலும் முகத்தில் கவலையின் சாயல் தோன்றுவதை அவனால் தடுக்க முடியவில்லை. துரியோதனன் எவ்வளவுதான் முயன்றாலும் பெருமிதத்தால் அவன் முகம் பிரகாசிப்பதை அவனாலும் தடுக்க முடியவில்லை. கண்ணன் எல்லோரையும் பார்த்தான். ‘நீங்கள் எல்லோரும் கொஞ்சம் வெளியே நில்லுங்கள்’ என்று சொன்னான். அவனை மறுக்க வாயெடுத்த மருத்துவரும் அவன் கண்ணைப் பார்த்ததும் அடங்கினார். ஒருவர் பின் ஒருவராக வெளியேறினார்கள்.

கண்ணன் கர்ணன் அருகே அமர்ந்தான். ‘துரியோதனனே உனது ஜீவன், இல்லையா கர்ணா?’ என்று கேட்டான். கர்ணன் சிரித்தான் – ‘இதை நான் சொல்லவும் வேண்டுமா?’ என்று மிகவும் பலவீனமான குரலில் கேட்டான். ‘அப்படி என்றால் அவனுக்கு ஏன் துரோகம் செய்தாய் கர்ணா? என்று கண்ணன் கேட்டான். கர்ணனின் புருவம் நெளிந்தது. ‘என்ன சொல்கிறாய்?’ என்று கேட்டான்.

‘துரியோதனனின் வெற்றியே உனக்கு முக்கியம் என்றால் எப்படி அர்ஜுனன் தவிர்த்த துரியோதனனின் எதிரிகளைக் கொல்லமாட்டேன் என்று நீ குந்திக்கு வாக்கு கொடுக்கலாம்? சரி அர்ஜுனனைக் கொல்லும் வாய்ப்புகளையும் ஏன் தவிர்த்தாய்? என்ன அவமானம் நேர்ந்தாலும் நீ பிதாமகரின் கீழ் நின்று போர் புரிந்திருக்க வேண்டுமே கர்ணா? முதல் நாளிலேயே நீ அர்ஜுனனைத் தேடிச் சென்று போர் புரிந்து உன் சக்தி ஆயுதத்தால் அவனைக் கொன்றிருந்தால் இந்தப் போர் நான்கு நாட்கள் கூட நடந்திருக்காதே? இத்தனை நேரம் துரியோதனன் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியாக முடி சூடி இருக்கலாமே! சரி பத்து நாட்கள் கழித்து போரில் கலந்து கொண்டாய். அர்ஜுனனை போரில் சந்திக்க நீ ஏன் முயலவே இல்லை? நான் உன்னைத் தவிர்த்திருப்பேன், ஆனால் சம்சப்தகனாக நீ நின்றிருந்தால் உன்னை யாராலும் தவிக்க இயலாதே? ஜயத்ரதனைக் காத்து நின்றபோது துரியோதனன் கூட அர்ஜுனனைத் தேடி வந்து போர் புரிந்தான். நீ என்ன செய்து கொண்டிருந்தாய் கர்ணா? சக்தி ஆயுதம் இல்லாமல் போகும் வரை நீ ஏன் அர்ஜுனனைத் தவிர்த்தாய்?இதில் மீண்டு வந்து அர்ஜுனனோடு போர் புரிவேன் என்று வீண் வஞ்சினம் வேறு. துரியோதனனுக்கு நீ விசுவாசமாக இல்லை கர்ணா! ஏன் இப்போது கூட யுதிஷ்டிரன் வெற்றி பெற வேண்டும் என்றுதான் வாழ்த்தினாய். நீ துரியோதனன் வெல்ல வெண்டும் என்று விரும்பவில்லை உன் தம்பிகள் வெல்ல வேண்டும் என்றுதான் விரும்புகிறாய். துரியோதனனுக்காக உன் உயிரைக் கொடுத்து தியாகசீலன், நட்புக்கு உதாரணம் என்று புகழ் பெற விரும்புகிறாய், அவ்வளவுதான்!’

கர்ணனின் உதடுகள் துடித்தன. மூச்சு வேகவேகமாக வந்தது. சில நொடிகளில் அடங்கியும் போனது.

தூணில் மாட்டி இருந்த வெண்கலக் கேடயம் ஒன்றில் கண்ணன் தன் உருவத்தை நோக்கினான். அவன் உதடு சுழித்தது. வெறுப்போடு அந்தக் கேடயத்தை கீழே போட்டு மிதித்தான். சீலையை விலக்கிக் கொண்டு வெளியேறினான். அது மூடுவதற்குள் மிருகநயனி வேகமாக உள்ளே புகுந்தாள். அவள் அலறலைக் கேட்டு அனைவரும் உள்ளே விரைந்தனர். கண்ணன் மட்டும் தன் கால்களை தரையில் உதைத்துக் கொண்டே கூடாரத்தை விட்டு வெளியேறினான்.

கால் போன போக்கில் நடந்த கண்ணன் சில நாழிகைகள் கழித்தே தன் கூடாரத்துக்குத் திரும்பினான். திரும்பும் வழியில் ஒரு சூதன் பாடிக் கொண்டிருந்ததை தள்ளி நின்று கேட்டான். ‘செய்த புண்ணியங்கள் கர்ணனைக் காத்து நின்றன. வஞ்சகன் கண்ணன் அந்தப் புண்ணியங்களை தானமாகக் கேட்டு வாங்கிக் கொண்டான், அதனால்தான் கர்ணன் இறந்தான்!’ என்று பாடலைக் கேட்டதும் கண்ணனின் வழக்கமான புன்னகை திரும்பியது. கழுத்தில் இருந்த மணியாரத்தை கழற்றி சூதனின் கையில் கொடுத்துவிட்டு கூடாரத்தை நோக்கி நடந்தான்.

Comment here