பிரத்யகம்

வடகொரியாவுக்கு உதவியா: இந்தியா மறுப்பு

புதுடில்லி : ‘ஐ.நா.,வின் தடையை மீறி, வட கொரியாவுக்கு எந்த உதவியையும் செய்யவில்லை’ என, இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஆசியா மற்றும் பசிபிக் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி மையத்தில், வடகொரியாவைச் சேர்ந்தவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுவதாக, ‘அல்ஜசீரா’ என்ற, கத்தார் நாட்டை மையமாக வைத்து செயல்படும், தொலைக்காட்சியில் செய்திகள் வெளியாகின.

இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது: டேராடூனில் உள்ள மையத்தில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பாடத் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தப் பாடத் திட்டங்கள் மிகவும் பொதுவானவை மற்றும் இந்தத் துறைகளில் உள்ள அடிப்படைகள் குறித்தே பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பாடத் திட்டத்தை அனைவரும் பார்க்க முடியும்.

ஐ.நா.,வின் விண்வெளி விவகாரங்கள் தொடர்பான அமைப்பின் அதிகாரிகள், இந்த மையத்தின் நிர்வாகக் குழுவின் நிரந்தர பார்வையாளர்களாக உள்ளனர். மேலும் பாடத் திட்டங்களை வகுப்பது, மாணவர்களை தேர்ந்தெடுப்பது ஆகியவையும், ஐ.நா., அமைப்பின் இயக்குனர் தலைமையில் தான் நடக்கிறது. இந்த மையத்தின் பாடத் திட்டங்களால், வடகொரியாவுக்கு உதவுவதாகக் கூறப்படுவது அபத்தமானது. சரியான புரிதல் இல்லாமல், அல்ஜசீரா தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

வடகொரியாவுக்கு ஐ.நா., விதித்துள்ள தடையை, இந்தியா மீறவில்லை. அணு ஆயுதப் பரவலால் அண்டை நாட்டின் அச்சுறுத்தல் இந்தியாவுக்கு தொடர்ந்து உள்ளது. இந்த நிலையில், இது போன்ற உதவியை, இந்தியா செய்வதாகக் கூறப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comment here