Sliderகல்வி

  வர்ம நூல்களைப் படிக்கச் சில அளவுகோல்கள் தேவை

வர்ம நூல்களைப் படிக்கச் சில அளவுகோல்கள் தேவை. அவற்றைத் தெரிந்தால்தான் வர்மக்கலையின் உண்மைப் பொருளைப் புரிந்து கொள்ள முடியும்.

ஜோதிஸ்தானம், சந்திரபுஷ்கரணி, ஆயுட்காலம், தொப்பூழ், உந்தி, வாசிநாதம், அன்னக்காலம், அறுத்தடைத்த வாசல், உதானவீடு, பற்றறுத்தான், மணிபூரக மையம், மால்வீடு என்று பற்பல பெயர்கள் தொப்பூழுக்கு உண்டு. இவை எல்லாம் வெளி தோற்றத்திற்கு ஒன்றாக, ஒரே இடத்தைச் சுட்டி நின்றாலும் அக வடிவில் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை. இதைத் தெரிந்தால்தான் வர்மக்கல்வியுள் முதல் அடியை எடுத்து வைக்கிறோம்.

ஜோதிஸ்தானம் என்றால் மூலாதாரத்தின் ஆற்றலை, தொப்பூழின் உள்ளாற்றல் ஈர்க்கின்ற பொழுது அந்தத் தொப்பூழ் மையத்தை ஜோதிஸ்தானம் என்பர் சித்தர்கள். தொடுவது தொப்பூழாக இருக்கலாம், ஆனால் அங்கு உள்ள ஜோதிஸ்தான ஆற்றலைப் பயன் படுத்தி என்ன என்ன நோய்களைக் குணமாக்கலாம், என்ன ஆன்மீக சாதனைகளை செய்யலாம் என்பனவெல்லாம் விரிவான கல்வி.

சந்திரபுஷ்கரணி என்றாலும் தொப்பூழ்தான். ஆனால் அது எப்பொழுது சந்திரபுஷ்கரணி ஆகும் என்றால், அமிர்த புஷ்காரணியில் இருந்து ஆற்றல் வந்து தொப்பூழில் சேரும் பொழுது சந்திரபுஷ்கரணி ஆகும். இந்த இரண்டு புஷ்கரணியிலும் ஆன்மவாதிகள் தினம் தினம் குளிப்பதால் அவர்களின் வினைகள் கழிந்து தூய்மை பெறுவர். இந்த ஆற்றல் மனநோய்களையும் குணநலன்களையும் சீராக்கும்.

ஆயுட்காலம் என்றாலும் தொப்பூழ்தான். உயிரின் ஓட்டம் அங்கு நிலை பெரும் பொழுது அந்த இடத்தின் மூலம் வழியாக ஆயுளை விருத்தி செய்து கொள்ளலாம் என்பது முன்னோர் கருத்து. இந்த ஆயுட்காலத்தைத் தெரிந்து கொண்டால் கலை, நியேதி, அராகம்….. என்ற உயிரின் உறைகளைப் புதுப்பித்துப் புதுமை காணலாம்.

தொப்பூழ் என்பது நரம்பு மண்டலங்களைக் கொண்டது நல்ல, கெட்ட இரத்தங்களை எடுத்துச் செல்லும் இரத்தக்குழாய்களின் சேர்க்கையைக் காட்டும் இடம். இந்த தொப்பூழ் என்பது பிறரைத் தாக்குவதற்கு உரிய இடமாகும்.

உந்தி என்பது அதே இடம்தான்; ஆனால் கல்லிடைக்காலத்தின் ஆற்றலோடு சேர்ந்து நிற்பது உந்தி என்பதாகும். இதற்கும் ஆன்மீக, மருத்துவ நன்மைகள் பல உண்டு.

அறுத்தடைத்த வாசல் என்கிற பொழுது ஒரு வாசலாகச் செயல்படும் தன்மை மட்டுமே. வாசல் வருவதும் போவது மாவதற்குரிய இடம். அதுபோலத் தொப்பூழின் உட்பகுதிக்கும் நம் கண்ணீர் பைக்கும், உமிழ்நீர் சுரப்பிக்கும் ஒரு தொடர்புண்டு. இதனைத்தான் தந்திர நூல்கள் ‘நதி’ என வர்ணிக்கின்றன. இந்த நதியும் நோய்த்தீர்க்கும், புனிதம் உண்டாக்கும்.

வாசி நாதம் என்பதும் தொப்பூழைத்தான் காட்டும். வாசியின் முக்கியக் கேந்திரம் மூன்று. அவற்றுள் ஒன்று தொப்பூழ். இது வாசி காயங்களை நீக்கப் பயன்படும். வாசியைப் பயன்படுத்தி ஆன்மீகம், மனம், உடல் ஆகியவற்றை வளர்க்கலாம்.

அன்னக்காலம் என்பதும் அவ்விடம் தான். உணவைச் சீரணம் செய்வதற்கான ஆற்றல் பற்றிய பெயர். சிறுகுடல் வர்மம், ஆழிவர்மம், கல்லாழி வர்மம் முதலான 20 க்கும் மேற்பட்ட, பக்குவாசயம், அமர்வாசயம் தொடர்புடைய இணைப்பு அன்னக்காலமாகும்.

உதானவீடு என்றால் பிராணன் உதானனாக, புத்தியோடு சேர்ந்து இயங்கும் இடம் அது. புத்தியை ஒழுங்கு செய்ய தொப்பூழில் உதான இயக்கத்தை மாற்றி, சீராக்கி அமைக்கும் பீடமே உதானவீடு என்பதாகும்.

பற்றறுதான் என்பதும் அவ்விடமே. உலகப் பற்றுகளை எல்லாம் நீக்குமிடம். அங்கேதான் நான்கு அந்தகரணங்களின் ஆற்றலையும் காகநரம்போடு சேர்த்து நிறுத்தும் பொழுது தொப்பூழ் பற்றறுதான் பீடமாகும்.

ஆதாரங்களைப் பற்றி சிந்திக்கும் பொழுது மணிபூரக மையமாகவும் தொப்பூழ் நிற்கும். ஆதாரயோகம், ஆதார தாரணை, ஆதார தியானம் போன்ற சாதனைகளின் பொழுது அங்குள்ள ஆற்றல் பத்து இதழ்களாகப் பரிணமிக்கும் பொழுது; தொப்பூழ் மணிபூரக மையமாக விளங்கும்.இதற்கு ஒரு தனி மகத்துவம் உண்டு.

இப்படி பல நிலைகளில் தொப்பூழ் என்ற மையம் செயல்படுகின்றது. இது ஒரே ஒரு இடம்தான். ஆனால் அங்கு இணையும் ஆற்றலைப் பொறுத்து அதன் பெயர்களும் அதன் செய்குணங்களும் மாறுபடும் என்பது உண்மை.

ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு தொழில் உண்டு. அந்தத் தொழிலை நன்கு கற்றுணர்ந்தால் அவன் / அவள் வர்மஞானி.

இந்த ஒரு வர்மத்தைப் போல பல வர்ம இடங்களுக்கும் பெயரும் தொழிலும் வேறு வேறு உண்டு. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. குருகுலக் கல்வி இத்தனை விசயங்களைப் பொதிந்து வைத்துள்ளது. உதாரணமாக காறை வர்மம் கரைகாணாத விளக்கம் கொண்டது.

இவற்றையெல்லாம் வெளிக்கொண்டு வரவேண்டும் என்று நினைத்தது என்மனம். அறிவுத் திருடர்களையும் குருத்துவம் இல்லாதவர்களையும் கண்டு அறிவுத்தடை போட்டதும் என்மனமே.

காலம் வரும் வரை காத்திருப்போம். இல்லை, மீண்டும் பிறப்பெடுத்து காலத்தைப் படைப்போம்.

வளர்க சிவம்.

Comment here