அரசியல்

வாக்கு எந்திரங்களை மாற்றவோ, முறைகேடு செய்யவோ இயலாத அளவுக்கு கண்காணிப்பு -தேர்தல் ஆணையம்

Rate this post

புதுடெல்லி

உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் சில இடங்களில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், முறைகேடுகளில் ஈடுபட முயற்சிகள் நடைபெறுவதாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக, சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிகளை சேர்ந்தவர்கள் பகிர்ந்த சில வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவின.

இத்தகைய புகாரால், உத்தரப்பிரதேசத்தின் மாவ் நகரில், மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை வளாகத்திற்கு வெளியே கூட்டம் திரண்டது. காசிப்பூரில் மின்னணு வாக்கு எந்திரங்களை எடுத்துச் செல்ல முயற்சி நடைபெறுவதாகக் கூறி, பகுஜன்சமாஜ் வேட்பாளர் தர்ணாவில் ஈடுபட்டார். சந்தாலி சாண்டுளி மக்களவை தொகுதியில், மின்னணு எந்திரங்கள் இறக்கி வைக்கப்படுவது போன்ற வீடியோ கிளிப் ஒன்று வெளியானது. தேர்தல் முடிந்து 2 நாட்களுக்குப் பிறகு வாக்கு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டது ஏன் என்று சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சர்ச்சை எழுப்பினார்.

பீகாரில் மகராஜ்கஞ்ச் மற்றும் சரண் மக்களவை தொகுதிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் நகர்த்தப்படுவதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் குற்றம்சாட்டியது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் உரிய விளக்கங்களுடன் மறுத்துவிட்டன. இந்நிலையில், மின்னணு வாக்கு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவற்றை மாற்றவோ முறைகேடு செய்யவோ இயலாத அளவுக்கு கண்காணிப்பு ஏற்பாடுகள் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

சீலிடப்பட்ட வலுவான பாதுகாப்பு அறைகளில், சிசிடிவி மற்றும் வேட்பாளர்களின் கண்காணிப்பின் கீழ் வாக்கு எந்திரங்கள் உள்ளன என்றும், அவற்றை மாற்றுவதற்கு துளிகூட வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. முறைகேடுகள் நடைபெற்று விடுமோ என அஞ்சத் தேவையில்லை என்றும், தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

Comment here