உலகம்தொழில்

விதியை மீறும் வினோத ரோபோ

அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஐசக் அசிமோவ், ரோபோக்களைப் பற்றி, பல கதைகளை எழுதியிருக்கிறார். அவர், 1947ல் எழுதிய, ‘ரன் அரவுண்ட்’ என்ற கதையில் தான், ரோபோக்களுக்கான விதிகளை உருவாக்கினார். அதில் முதல் விதி: ஒரு ரோபோ, ஒரு மனிதனை தாக்கவோ, செயல்படாமல் இருப்பதன் மூலம், ஒரு மனிதனுக்கு ஆபத்து நேர்வதற்கு அனுமதிக்கவோ கூடாது. இந்த விதியை மீறுவதற்காக மட்டுமே, ஒரு ரோபோவை படைத்திருக்கிறார், அமெரிக்காவிலுள்ள பெர்க்லி நகரைச் சேர்ந்த ரோபோ வல்லுனரும், கலைஞருமான அலெக்சாண்டர் ரெபென். முன், ஒரு பரிசோதனைக்காக, மனிதர்களின் தலையை இதமாக சொறிந்துவிடும் ரோபோவை உருவாக்கிய ரெபென், இந்த முறை, ரத்தப் பரிசோதனையாளர் பயன்படுத்தும் ஊசியைக் கொண்டு குத்தும் ஒரு ஒற்றைக் கை ரோபோவை படைத்திருக்கிறார். ஆங்கில, ‘வி’ வடிவில் இருக்கும் இடத்தில் சுட்டு விரலை வைத்தால், இந்த ஒற்றைக் கை ரோபோ உயிர்பெற்று வந்து, ‘நறுக்’கென்று ஊசியால் குத்திவிட்டு நகர்ந்துகொள்ளும். ”ஆனால், குத்துவதா, வேண்டாமா என்பதை அதுவே முடிவு செய்யும்படி மென்பொருள் நிரலை எழுதியிருக்கிறேன்,” என்கிறார் ரெபென். இதனால், ரெபெனே அந்த இடத்தில் விரலை வைத்தாலும், அது குத்தலாம்; குத்தாமல் சும்மா தொட்டுவிட்டும் போகலாம். ரோபோவியல் எழுப்பும் தார்மீக மற்றும் தத்துவக் கேள்விகளை, ‘சிந்தனைச் சோதனை’யாக மட்டுமே செய்து பார்க்காமல், அதை அசல் வடிவில் செய்து, விவாதத்தை கிளப்புவதுதான் தன் நோக்கம் என்கிறார் ரெபென். நல்லா கிளப்புறாங்கய்யா விவாதத்தை!

Comment here